வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் மதுரை அருகிலுள்ள திருவாதவூரைச் சேர்ந்த தனது பக்தருக்கு அருள் செய்ய தன் விளையாடலைத் துவங்கினார் சிவபெருமான். இவ்வூரில் திருவாதவூரார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவர் தூங்கினாலும் கூட இவரது இதயத்தின் துடிப்பு சொல்லிக் கொண்டிருக்கும். இவர் இலக்கணம், இலக்கியம், சாஸ்திரங்களைத் தெளிவாகக் கற்றவர். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்தான். ஒருசமயம், மன்னன் அமைச்சரையும், தளபதிகளையும் வரவழைத்து, தங்கள் படை பலத்தைப் பெருக்குவது பற்றி உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தங்கள் குதிரைப் படையின் பலம் குறைந்து விட்டது பற்றிய பேச்சு வந்தது. அதை சீரமைக்கும் பொறுப்பை தனது தலைமை அமைச்சரான வாதவூராரிடம் அளித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொள்ள உத்தரவிட்டான். வாதவூராரும் பெரும் பொருளை எடுத்து தனியாக ஒதுக்கி வைத்து விட்டார். குதிரை வாங்கச் செல்வதற்கு நல்லநாள் பார்த்தார். அந்தநாள் வரும் வரை தினமும் மீனாட்சியம்...