புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க , ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க , ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற வரிகளை ஒன்றாக சேர்த்துப் பார்க்கும் பொழுது , என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல் , ஆன்மாவாய் , மனசாட்சியாய் , என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று படிப்பவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருப்பதை உணருமாறு மாணிக்கவாசகர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம் . ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன் . அதாவது நமக்கு புரியும் வகையில் , பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள் என்று ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்கிற வரியில் பார்த்தோம் . ஆக இறைவன் என்பவன் நம் உள்ளத்தில் , அதாவது நம் அகத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை மிகத்தெளிவாக முந்திய வரிகளில் மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார் . அதாவது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் , இறைவன் என்பவன் அகத்தார் . அகத்தார் என்றால் உடனுறைபவர்...