ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஏகன் என்றால் ஒருவன், தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள். அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள். சிவனை ஏகன் என்று சொல்லி, இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர். அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக, எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார். நமக்கு எல்லாம் தெரியும், நம்முடைய சிவன், ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று. அறிவியல் பெருவெடிப்பு தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது. அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம் சொல்கிறது. எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன். அதாவது நமக்கு புரியும் வகையில், பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள். அநேகன் என்கிற வார்த்தைக்கு மற்றொரு பொருள் ஆன்மா. இந்தக் கோணத்தில்
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வரியின் முழுப் பொருள் என்னவென்று பார்த்தால், மன சாட்சியாய், ஆன்மாவாய் இருக்கிற இறைவன் திருவடி வாழ்க என்றும் பொருள் கொள்ளலாம். திருவாசகத்தின் முக்கிய சிறப்பு என்னவென்று பார்த்தால், திருவாசகம் முழுவதுமே தன்மை ஒருமையில் (First person singular) பாடப்பட்டிருக்கிறது. தன்மை இடத்தில் ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமை எனப்படும். (எ.கா) நான் பேசினேன், யான் பேசினேன். தன்மை ஒருமையில் திருவாசகம் இருப்பதினால் யார் அதைப் படித்தாலும் பாடினாலும் அவர்களுக்கு பொருந்துவதாய் திருவாசகம் அமைகிறது என்பதுதான் திருவாசகத்தின் சிறப்பு. எனவே நாம் திருவாசகம் படிக்கும் பொழுது இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற படிக்கும்பொழுது என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல், ஆன்மாவாய், மனசாட்சியாய், என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று படிப்பவர் ஒவ்வொருவருக்கும் பொருந்துமாறு அமைகிறது. ஏகன் என்கிற வார்த்தைக்கு தனித்தன்மை வாய்ந்தது என்கிற ஒரு பொருள் வரும். ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தன்மை உடையது என்கிற பொருளில், ஒவ்வொரு ஆன்மாவும் இறைவன் என்கிற பொருளில், தனித்தன்மை வாய்ந்த பல ஆன்மாக்களாய் இருக்கிற இறைவன் திருவடி வாழ்க என்று என்கிற பொருளிலும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த வரிக்கு என்று நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் திருவடி பணிந்து வணங்குவோம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Your thought process and reaearch is very good (Sanath Kumar Jatahdharan)
ReplyDelete