Skip to main content

கோகழி ஆண்ட குருமணி வரிக்கு விளக்கம்


 கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

கோ என்றால் இடபம், மாடு, பசு;  கழி என்றால் கயிறு; குருமணிதன் - ஆசாரியனுக்கு ஆசாரியன், குருவிற்கே குரு என்று பொருள்;  தன்  என்றால் திட்டவட்டமாக அதாவது தெளிவாக வரையறுக்கப்பட்ட என்று பொருள்.

இந்த வரியில் கோகழி என்பது நந்திதேவரை குறிக்கிறது. சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார்முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.  நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய எட்டு பேரும் பெற்று நந்தி பெருமானின் மாணவர்களானர். நந்திதேவர் மற்றவர்களுக்கு ஆதிகுருவாக இருந்தார். நந்திதேவருக்கு குருவாக, சிவன் இருந்தமையால் சிவன் ஆசாரியனுக்கு ஆசாரியன் ஆகிறார். அதையே இங்கு மாணிக்கவாசகர் குருமணி என்று சிவனை போற்றுகிறார். சிவன் ஆசாரியனுக்கு ஆசாரியன், அவரை தவிர வேறு யாரும் உயர்ந்தவர் இல்லை என்பதை குறிக்க தன் என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தி, திட்டவட்டமாக மாணிக்கவாசகர் சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். 


இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம்.


முப்பொருள் என்பது சைவ சித்தாந்தத்தில் பதி, பசு ,பாசம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது தளைகளையும் குறிக்கிறது. தளைகளை இங்கு ஒரே வார்த்தையாக சொல்லப்போனால் மும்மலங்கள் என்று சொல்லலாம்.  தளை அல்லது இந்த மலங்கள் உயிர்களைப் பிணைத்திருக்கும் ஒரு கயிறு போல். இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்கிற வரியை பொருள் தெரிந்து கொள்ள முயல்வோம். பசுவாகிய உயிர்களை பாசம் என்கிற கயிறு பிணைத்திருக்கிறது. ஆண்ட என்றால் முறைப்படுத்துதல் என்கின்ற ஒரு பொருள் வரும். பாசம் (ஆணவம் போன்றவை) என்ற கயிற்றால் பிடித்திருக்கும் பசுவாகிய (உயிர்கள்) நம்மை முறைப்படுத்த குரு ஒருவரால் மட்டுமே முடியும். அதனால்தான் குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். அந்த குருவிற்கும் குருவான இறைவன் தாள் வாழ்க என்று நாம் பொருள் கொள்ளலாம். நம் அனைவருக்குமே பக்குவப்பட்ட ஒரு நிலை வரும் பொழுது, கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார். நாம் குருவை தேடி செல்ல வேண்டியதில்லை. நாம் பக்குவப்பட்ட நிலை அடையும் பொழுது குரு நம்மை தேடி வருவார் மறுக்கமுடியாத ஒரு உண்மை. 

கோகழி என்றால் திருவாவடுதுறை என்றும் சொல்வார்கள்.  கழி' என்பது கடற்புறத்தின் துறை(உப்பங்கழி) என்று அழைக்கப்படும் 'கடல் துறைமுகம்' என்பது பொருள். அத்தகைய கடல் துறைமுகங்களில், மாபெரும் துறை என்பதைக் குறிக்கவே, 'கோ' என்னும் தலைமை (அல்லது) பெரிய (அல்லது) பெருமை என்ற பொருளில் பெருந்துறை(கோகழி) என்ற சொல்லாட்சி தரப்பட்டது  என்று பலர் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய பார்வையில் திருப்பெருந்துறை குறித்து தோன்றிய விளக்கத்தை பகிர்கிறேன். திருப்பெருந்துறையில் இறைவன் சிவன் மாணிக்கவாசகருக்கு அந்தணர் உருவத்தில் குருவாக வந்து அருளினார் என்று மாணிக்கவாசகர் வரலாறு கூறுகிறது.  புராணத்தில் இறைவன் சிவன் நந்திதேவருக்கு மட்டுமே குருவாக இருந்திருக்கிறார் என்று படிக்கிறோம். எனவே என்னுடைய பார்வையில் மாணிக்கவாசகர்  நந்திதேவர் அம்சமாக இருக்கலாம். கோகழி என்னும் திருப்பெருந்துறையில் நந்திதேவர் அம்சமான மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டதால், கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம். மாணிக்கவாசகர் நந்திதேவர் அம்சம் என்ற எண்ணம் என்னுள் தோன்றிய பின் அதை கூகுளில் தேடிப் பார்த்த பொழுது கீழ்க்கண்ட இணைய தளம் கிடைத்தது.  இந்த இணையதளத்தில்  எண் 4 பற்றி படிக்கவும்.

கோகழி என்றால் திருவாவடுதுறை என்று தமிழ் அகராதி கூறுகிறது. திருக்கைலாயத்தில், சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டுக் காஞ்சி நகரையடைந்தார். அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8000 வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக் கன்றின் வடிவில் இறைவனை நோக்கித் தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள் புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.
திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக் கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் என்பவன், அவனுடைய விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து, அவரது உடலினை நக்கி, முகர்ந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களின் களிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். பசுக்களை அதன் ஊரில் விட்டுவிட்டு, திருமூலர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார். இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர். நந்திதேவரின் மாணவரான திருமூலர், திருவாவடுதுறையில் திருமந்திரம் இயற்றினார். பசுக்களான உயிர்கள் மேல் கொண்ட கருணையினால் திருமந்திரம் உரைக்கப்பட்டது எனவும் கொள்ளலாம். நந்தி தேவரின் மாணவராக திருமூலருக்கு, திருவாவடுதுறையில் இறைவன் திருமூலர் உடலை மறைத்து அவரை ஆட்கொண்டு திருமந்திரம்  எழுத வைத்ததால் கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம்.

 இந்த வரிக்கு என்று நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த குருவிற்கு குருவான சிவனின் திருப்பாதங்களை பணிந்து வணங்குவோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...