ஓம் நமசிவாயா, சிவபுராண விளக்கம்
ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைநிறைய உப்பை போட்டு கலக்குங்கள். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வீர்கள். அந்த உப்பை இப்பொழுது என்னிடம் காட்ட முடியுமா அல்லது நீங்கள் போட்ட இரண்டு கையில் உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது என்று சொல்வீர்கள். தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம் ஆனால் அந்த உப்பின் தன்மையை உணரமுடியும். அந்த தண்ணீரை எடுத்து நான் சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போலத்தான் அவனை உணரத்தான் முடியும். இதைதான் மாணிக்கவாசகர்
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்”
என்று சொல்லியிருக்கிறார். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றில், திருவாசகத்தின் பொருள் இறைவன்தான் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தில்லை அந்தணர் சபை, திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்க, திருவாதவூரார் தில்லை சிற்றம்பலத்தின் கருவறையை சுட்டிக் காட்டி, இந்த பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்” என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார். ஆக, திருவாசகத்தின் முழுமுதற் பொருளாக இருப்பவன் நம்முடைய பாட்டுடைத் தலைவன், அங்கிங்கெனாதபடி ஒளியாய் நிறைந்திருக்கும் நம்முடைய சிவன். சிவபுராணத்தின் வரியான நாதன் தாள் வாழ்க என்பதற்கு எளிமையான விளக்கமும் உண்டு. அதாவது நாதன் என்றால் தலைவன், அரசன், கணவன், சிவன் என்று பல்வேறு விதமான அர்த்தங்களை நாதன் என்று சொல் குறிக்கிறது. எனவே, நம் அனைவருக்கும் தலைவனான, அரசனான, சிவனை வாழ்க என்று வாயார வாழ்த்துகிறார் என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். நாதன் என்ற சொல்லை பிரித்தால், நாதன் = நா + தன்; நா என்றால் பாடல் மற்றும் சொல் என்று பொருள். நா என்பதன் மற்றொரு பொருள் தீயின் சுடர், தன் என்றால் திட்டவட்டமாக அதாவது தெளிவாக வரையறுக்கப்பட்ட என்று பொருள். எனவே, பாடலாக இருக்கும் அதாவது திருவாசகமாக இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று பொருள் கொள்ளலாம். மற்றும் தீயாய், ஜோதியாய் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க என்றும் பொருள் கொள்ளலாம். திருவாசகம் முழுவதுமே மாணிக்கவாசகர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்படுமாறு திருவாசகத்தை பாடியிருக்கிறார். எனவே இங்கு சிவன் தீயாக, பாடலாக இருக்கிறான் என்பதை திட்டவட்டமாக, வரையறுத்துக் மாணிக்கவாசகர் சொல்கிறார் என்று என்று நம்மால் பொருள்கொள்ள முடியும். மாணிக்கவாசகர் நேரில் வந்து இந்த பாடலுக்கு, இந்த வரிக்கு இதுதான் பொருள் என்று சொன்னால் ஒழிய வேறு யாராலும் இதுதான் பொருள் என்று திட்டவட்டமாக வரையறுத்து சொல்ல இயலாது. ஆனால் என்னுடைய பார்வையில், என்னுடைய குரு சீரடி சாய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழகராதி உதவியோடு சிவபுராணத்திற்கு விளக்கம் எழுதியுள்ளேன். அதனை தினமும் தினமும் சில வரிகளுக்கு பகிர்ந்துகொள்கிறேன். சிவபுராணத்தின் முதல் வரியான நமசிவாய வாழ்க என்கிற வரிக்கு கீழ்க்கண்ட வீடியோ பதிவில் என்னுடைய புரிதலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment