வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகம் என்பது இங்கு மனதின் வேகத்தை குறிக்கும். மனம் காற்றை விட வேகமானது. மனதிற்கு மட்டுமே காலத்தை தாண்டி, முன்னோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்யும் ஆற்றல் உண்டு. ஒரு நொடியில் மலரும் நினைவுகள் என்று நம்முடைய சிறு வயது நினைவுகளில் மூழ்கி விடும் நேரங்கள் உண்டு. எதிர்காலத்தில் இப்படி எல்லாம் செய்ய வேண்டும், அப்படி எல்லாம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கி விடுபவர்களும் உண்டு . இதைத்தான் பகற்கனவு என்றும் சொல்வார்கள். இருந்த இடத்திலிருந்தே எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய ஒரு கற்பனை திறன் நம் மனதிற்கு உண்டு. மாட்டிற்கு மூக்கணாங்கயிறு உண்டு, குதிரைக்கு கடிவாளம் உண்டு , வாகனங்களுக்கு பிரேக் இருக்கிறது ஆனால் நமது மனதிற்கு மட்டும்தான் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தறிகெட்டு ஓடும் வேகம் இருக்கிறது. இந்த மனதின் வேகத்தை குறைத்து , அமைதியாக்கி, என்னை ஆட்கொண்ட வேந்தன் என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். வேந்தன் என்றால் எல்லா ஆற்றலும் பெற்ற அரசன் என்று பொருள். வேந்தன் என்று சொல்வதன் மூலமாக இறைவன் மட்டுமே நம் மனதை அமைதியாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறான் என்று குறிப்பாக நமக்கு உணர்த்துகிறார். நம்முடைய படிப்பு, வேலை போன்றவைகள் நமக்கு வாழ்க்கை வசதிகளை கொடுக்கலாம், ஆனால் அவைகள் நமக்கு அமைதியை கொடுக்கமுடியாது. அமைதி வேண்டுமென்றால், இறைவனை நாடினால் மட்டுமே கிடைக்கும் என்பதை மாணிக்கவாசகர் நமக்கு அறிவுறுத்துகிறார். மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம், தலையமைச்சராக பணியாற்றியவர். எனவே அவருக்கு ஆள்பலம், பணபலம், வசதி அதிகாரம் இவற்றில் எதிலும் குறைவு என்பது இல்லை. ஆனால் மன அமைதி என்பது அவருக்கு சிவன் அவரை ஆட்கொண்ட பிறகுதான் கிடைத்தது என்பதை வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்கிற வரிகள் மூலம் மிக அழுத்தமாக சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். பெரும்பாலும் நமக்கு மன அமைதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் பந்தயத்தில் ஓடும் குதிரை போல, மற்றவர்களைப் போல வாழ்க்கை வசதிகளை பெற வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
இந்த வரியை இன்றைய வாழ்க்கை முறை கோணத்தில் பார்த்தோமென்றால், எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது தான் மனதின் இயல்பு, அதை நம்மால் மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக இன்றைய குழந்தைகள் போனில் அதிகமாக விளையாடுகிறார்கள். அவ்வாறு செய்யாதே என்று நம் குழந்தைகளிடம் சொல்லும் பொழுது, வேறு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி, அவர்கள் அந்த விஷயங்களை ஆர்வமுடன் செய்வதற்கு, நாம் உதவியாக இருந்தால் அவர்கள் போனில் விளையாடுவது கண்டிப்பாக குறையும், மனமும் அது போல தான். இப்படி நினைக்கக் கூடாது, நினைக்கக்கூடாது என்று போட்டு மனதை கஷ்டப்படுத்துவதை விட, தேவையில்லாத எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது, இது தேவையற்ற எண்ணம் என்பதை உணர்ந்து, இந்த சமயத்தில் நான் நாம ஜபம் செய்கிறேன், பாராயணம் செய்கிறேன் அல்லது எனக்கு பிடித்த ஒரு பாடல் கேட்கிறேன் என்று கேட்கும் பொழுது தேவையில்லாதவற்றை மனதில் நினைப்பது குறைந்துவிடும். நாம் செய்யும் பாராயணங்கள் மற்றும் நாம ஜெபம் நம்முடைய தேவையற்ற எண்ணங்களை குறைக்கிறது. தேவையற்ற எண்ணங்கள் குறையக் குறைய நமக்கு வாழ்வில் ஒரு தெளிவு கிடைக்கும். எவ்வளவு பிரச்சனை வரும்பொழுதும் அதற்குரிய வழிமுறையும் எளிதாக உணரக்கூடிய ஒரு பக்குவமும் நமக்கு கிடைக்கும். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்கிற வரியின் பொருள் படி நம்முடைய மனதின் வேகத்தை ( தேவையில்லாத எண்ணங்களை) குறைப்பதற்கு நமக்கு இறைவன் பாராயணம் மற்றும் நாம ஜபத்தை நம்முடைய வாழ்வில் கொடுத்துள்ளார். நம்முடைய மனம் ஆகாயத் தத்துவத்தை குறிப்பதாக அமைகிறது, ஏனென்றால் நம்முடைய மனதில், எண்ணங்கள் குறையக் குறைய, நம்முடைய மனம் சிதம்பரத்தில் சொல்லப்படுகிற வெட்டவெளி போல் ஆகி அங்கு இறைவன் நிறைந்திருக்கும் இடமாக மாறுகிறது. இதுதான் சிதம்பர ரகசியம். நாம் செய்யும் பாராயணங்கள் மூலம் நம் மனதின் வேகத்தை குறைத்து , அமைதியாக்கி, நம்மை ஆட்கொண்ட வேந்தன் சிவனை உணர்ந்து, மாணிக்கவாசகர் பாடிய, வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்பதை பொருள் உணர்ந்து பாராயணம் செய்வோம், நம் வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி பணிந்து போற்றிப் பாராயணம் செய்வோம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment