பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள். பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள். பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள். பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள். அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் ,இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தண்ணீர் பற்றாக்குறை, மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி, அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள், நல்ல துணையை தேடி திருமணம் செய்து, பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள், உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக்கும் சூழல்கள், வயது முதிர்ந்த காலம், முதியோர் இல்லம் என்று அனைத்தையும் சில நிமிடங்கள் நம் மனக்கண்ணில் ஓட விட்டால், அம்மாடியோ அடுத்த பிறவியா? வேண்டவே வேண்டாம் என்கிற எண்ணம் கண்டிப்பாக அனைவருக்கும் வரும். மீண்டும் பிறப்பெடுத்து இந்த உலகில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஒருபுறமிருந்தாலும் நாம் இறந்த பிறகு நம்முடைய ஆன்மா நம்முடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலவித துன்ப நிலைகளை அடைந்த பின்புதான் அடுத்த பிறவி எடுக்க முடியும் என்கிறது கருட புராணம். ஆகமொத்தம் இவ்வுலகம், அவ்வுலகம் என இரண்டு உலகத்திலேயும் நம்முடைய ஆன்மா பல்வேறு வேதனைகளை திரும்பத்திரும்ப ஒரு சுழற்சியாக பிறவி இருக்கும் வரை சந்தித்து சந்தித்து தான் ஆக வேண்டும். அடுத்த பிறவியில் நாம் என்னவாக பிறப்போம் என்பது நமக்கு தெரியாது. இதைத்தான் மாணிக்கவாசகர் புல்லாகி பூடாகி என்கிற வரிகளில் சொல்லுவார். இதை உணர்ந்ததால்தான் திருக்குறள் முதல்கொண்டு திருமுறை வரை அனைத்தும் மறுபிறவி வேண்டாம் என வலியுறுத்துகின்றன. இதனால்தான் மாணிக்கவாசகர் மறுபிறவி என்கிற தளையை அழிப்பவனாக இருக்கும் சிவனை பிஞ்ஞகன் என்றும் அவன் நம் மேல் கருணைகொண்டு நம் பிறவி தளையை அழிப்பதினால், சிவனின் திருவடியை பெய்கழல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு இந்த வரிக்கு நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த, அத்தகைய கருணையுடைய இறைவனை, குருவிற்கு குருவான இறைவன் தாள்பணிந்து, போற்றி வணங்குவோம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment