இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
தன் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவனை இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என்று வாழ்த்துகிறார். இங்கு மாணிக்கவாசகர், தான் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவில்லை அதற்கு பதிலாக இறைவன் அவர் மேல் கருணைகொண்டு அவருடைய நெஞ்சில் நீங்காமல் இருக்கிறார் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். இன்று நம்மில் பல பேர் தாங்கள் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அவ்வாறு சொல்வது கூட நான் என்ற அகங்காரத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்பதினாலேயே மாணிக்கவாசகர் இங்கே இறைவன் தன் மேல் கருணைகொண்டு தன் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்று சொல்லி இறைவனின் திருப்பாதங்களை போற்றுகிறார். இறைவனின் கருணை இல்லையெனில் நம்மால் இறைவனை நினைக்க இயலாது என்பதை மிக அழகாக மாணிக்கவாசகர் இங்கே சுட்டிக்காட்டியுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். அதற்கு முதலில் நாம் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிற வரியை புரிந்து கொள்வோம். ஆ என்றால் ஆன்மா, கமம் என்றால் நிறைந்து, ஆகி - மாறி, நின்று - எப்பொழுதும், அண்ணிப்பான் - பக்கத்திலிருப்பவன். இந்த வரியின் முழுப் பொருள் என்னவென்று பார்த்தால், சிவன் நம் ஆன்மாவாக நிறைந்து, எப்பொழுதும் நம் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள். இறைவன் ஆன்மாவாக நமக்குள் எப்பொழுதும் இருப்பதினால், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம். ஆகமம் என்கிற வார்த்தைக்கு வேதங்கள் என்றும் ஒரு பொருள் உண்டு. கீர்த்தித் திருவகவலின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிகளில் வரும் ஆகமம் என்கிற வார்த்தை வேதம் என்று பொருள்படும்.
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்
எந்த மொழி எடுத்தாலும் ஒரு வார்த்தைக்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் present என்கிற வார்த்தையை பார்ப்போம். Birthday Present என்கிற வார்த்தைகளில் பிரசெண்ட் என்பது பரிசு என்று பொருள்படுகிறது. At Present, it is not possible இந்த இடத்தில் வரும் பிரசன்ட் என்கிற வார்த்தை, இப்பொழுது என்று பொருள்படும். என்னிடம் ஒரு அடியவர் பேசும்பொழுது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னார். அவர் தன்னுடைய மூன்று வயது பேரக்குழந்தையுடன் போனில் பேசும் பொழுது மணியுடன் பேசுகிறாயா? என்று தன்னுடைய உறவுகார குழந்தையின் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தக் குழந்தைக்கு மணி என்றவுடன் பணம் மற்றும் கோவில்மணி மட்டுமே நினைவிற்கு வந்தமையால் மணியுடன் எப்படி பேசுவது? அது பேசாதே என்று அந்த குழந்தை வியப்புடன் சொல்லியிருக்கிறது. தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறை பாடல்களை படிக்கும் பொழுது நாம் அந்த குழந்தையின் நிலையில் தான் இருக்கிறோம். திருமுறைகளில் பாடப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும், பல்வேறு விதமான பொருள்களை அர்த்தங்களை அந்த இடத்திற்கு தகுந்தார் போல், வரியில் வரும் மற்ற வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் பொருள் மாறுபடுகிறது. இறைவன் நம் நெஞ்சில் ஆன்மாவாக நிறைந்திருக்கிறான், நம்மை விட்டு இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்பதை உணர்வோம், இறைவனை போற்றித் துதிப்போம்.
very nice (sanath kumar jatadharan)
ReplyDelete