புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற வரிகளை ஒன்றாக சேர்த்துப் பார்க்கும் பொழுது, என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல், ஆன்மாவாய், மனசாட்சியாய், என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று படிப்பவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருப்பதை உணருமாறு மாணிக்கவாசகர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம். ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன். அதாவது நமக்கு புரியும் வகையில், பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள் என்று ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்கிற வரியில் பார்த்தோம். ஆக இறைவன் என்பவன் நம் உள்ளத்தில், அதாவது நம் அகத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை மிகத்தெளிவாக முந்திய வரிகளில் மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார். அதாவது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் என்பவன் அகத்தார். அகத்தார் என்றால் உடனுறைபவர். புறம் என்றால் வெளியிடம் என்று பொருள். சேயோன் என்றால் தொலைவிலிருப்பவன் என்று பொருள். இறைவன் என்பவன் அகத்தில் இல்லை, புறத்தில் எங்கோ இருக்கிறான் என்று தேடுபவர்களை மாணிக்கவாசகர், புறத்தார் என்று அழைக்கிறார். இதைத்தான் கண்ணதாசன் மிக அழகாக,
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே” என்று பாடியிருப்பார்.
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே” என்று பாடியிருப்பார்.
இறைவன் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறான், சிவனின் தன்மை என்றும் மாறுவதில்லை. ஆனால் அதை உணராது வெளியே தேடுபவர்களுக்கு இறைவன் தொலைவில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். இன்றைய நடைமுறை வாழ்வில் ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், ஒரு பொருள் தொலைந்து விட்டதாக நினைத்து எங்கெங்கோ தேடுவார், கடைசியில் அது அவர்களின் சட்டைப் பையில் இருக்கும். அதுபோல அகத்தின் உள்ளே ஆன்மாவாய், மனசாட்சியாய் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கும் இறைவனை உணராமல் வெளியே தேடுபவர்களுக்காக மாணிக்கவாசகர் புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க என்று பாடுகிறார்.
இன்றைய வாழ்க்கை கோணத்தில் இந்த வரியை பார்ப்போம். புறத்தல் என்றால் ஒதுக்கி தள்ளுதல் என்று பொருள். இறைவன் என்பவன் அகத்தாராய், நம்முள் உடனுறைபவராய், அகத்துரைப்போனாய் இருக்கிறான். நம் உள்ளத்தில், மனசாட்சியாய் இருக்கும் இறைவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனசாட்சி இல்லாமல், தன்னிஷ்டப்படி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறைவன் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறான் என்று மணிக்கவாசகர் சொல்வதாக பொருள் கொள்ளலாம். மனசாட்சியை ஒதுக்கித் தள்ளியவர்களை, புறத்தார் என்று மாணிக்கவாசகர் கூறுவதாக இங்கு பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு உயிருக்குள்ளும், ஆன்மாவாய் இறைவன் இருக்கிறான் என்பதால் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். இதை உணர்ந்து, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு உயிரையும் மதித்து, நம்மால் முடிந்த உதவியை பிற உயிர்களுக்கு செய்வதன் மூலம் இறைவனை போற்றி வணங்குவோம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment