Skip to main content

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்!




நாரைக்கு முக்தி கொடுத்த படலம்








நாரைக்கு முக்தி கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னிடம் அன்பு செலுத்தி மீனினை உண்ணாமல் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்ததை பற்றிக் கூறுகிறது.
மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் எடுத்து உரைக்கிறது.
நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்கு கொடுத்த வரம், பொற்றாமரை குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.



நாரையின் மனமாற்றம்

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட தடாகம் (குளம்) ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது.
ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது.
அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது.
அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அத்தடாகத்தினை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.
முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும்போது மீன்கள் அவர்களின் மீதும், அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை ‘இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது’ என்று எண்ணியது.
தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

நாரைக்கு அருளல்

மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது.
பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது.
சொக்கநாதரிடம் கொண்ட அன்பினால் நாரை மீனினை உண்ணும் எண்ணம் நாரைக்கு மறந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது.
நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி “என் இனிய நாரையே நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.
அதற்கு நாரை “ஐயனே, இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டது.
இறைவனாரும் “அவ்வாறே ஆகுக.” என்று அருள் புரிந்தார்.
பின்னர் நாரை நான்கு தோள்களும், மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது.
நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.

நாரைக்கு முக்தி கொடுத்த படலம் கூறும் கருத்து

பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...