Skip to main content

சக்தி சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு!



உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு!



கையிலாய மலையில் மாணிக்க மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் அமர்ந்து விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் தந்து அருளிக் கொண்டிருந்தார். வந்தவர்கள் எல்லோரும் சென்றுவிட்ட நிலையில், ஒரு முனிவர் சிவபெருமானை மட்டும் பணிந்து வணங்கி விட்டுச் செல்ல ஆரம்பித்தார். அதைப் பார்த்த பார்வதி தேவி துணுக்குற்று சிவபெருமானை நோக்கி ""ஸ்வாமி! என்னைச் சிறிதும் மதியாமல் தங்களை மட்டும் நமஸ்கரித்துவிட்டுச் செல்லும் இந்த முனிவர் யார்?'' என்று வினவினார்.
அதற்குச் சிவன், "தேவி! சகலமும் சிவனே, அனைத்தும் சிவமயமே'' என்று உறுதியாய் நினைத்துச் செயல்படும் வீரன் இந்த முனிவன். பிருங்கி என்று பெயர் படைத்தவன்'' என்றார்.
"எல்லாமே சிவமயமா இவனுக்கு? இருக்கட்டும். இவன் செருக்கை அடக்குகிறேன்' என்று எண்ணிய உமை, பிருங்கி முனிவரது உடலில் சக்தியின் கூறாக உள்ள ரத்தம், தசை முதலியவற்றைக் கவர்ந்தார்! பிருங்கி முனிவர் பாவம், சிவத்தின் கூறுகளாகிய எலும்பும் தோலுமாய் வெற்று நரம்புகளுடன் தள்ளாடித் தள்ளாடி நிற்கக்கூட முடியாதவராய் தவித்தார்! தன் பக்தன் தவிப்பதைப் பார்க்கச் சிவனுக்குப் பொறுக்குமா? உடனே பிருங்கி முனிவருக்கு மூன்றாவதாய் ஒரு காலைக் கொடுத்து உதவினார்! பிருங்கி உடனே அந்த மூன்றாவது காலின் உதவியோடு சிவத்தை மட்டும் வணங்கி விட்டுச் சென்றார். அதைக் கண்டு உள்ளூர பொருமிய உமை "இந்த முனிவன் தன்னையும் வணங்குமாறு எப்படி செய்வது' என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். சிவனும் தானும் இப்படித் தனித்தனியே இல்லாமல் ஒருவராய் இருந்தால் அந்த முனிவன் அப்போது தன்னையும்தானே சேர்த்து நமஸ்கரித்தாக வேண்டும்?' சிவபெருமானிடம் "உங்கள் உடலில் ஒருபாகத்தை எனக்குத் தாருங்கள்' என்று நேரடியாக கேட்க விரும்பாமல் அதற்கு வேறு ஓர் உபாயம் கண்டு பிடித்தார்!
ஒருநாள் சிவபெருமான் தனித்து வீற்றிருக்கையில் அவர் பின்புறமாக வந்த உமை விளையாட்டாய் அவரது கண்களைப் பொத்தினார். அவ்வளவுதான்! அடுத்த கணமே அண்ட சராசரமெல்லாம் ஒளியிழந்து எங்கும் ஒரே இருட்டு. உயிர்கள் அனைத்தும் தடுமாறின. தேவர்கள் அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கி உலகை உய்விக்க வேண்டினர். அப்போது சிவன் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து ஒளியை உண்டாக்கினார். ஜீவராசிகள் பிழைத்தன. தான் விளையாட்டாய் சிவனின் கண்ணைப் பொத்த அது எத்தகைய விபரீதத்தை விளைத்து விட்டது என்பதை உணர்ந்து பதைபதைத்த உமா தேவி சிவனிடம் தனது அந்த பாவந்தீர பூமிக்குச் சென்று தவம் செய்ய விரும்புவதாய்க் கூறினார். அதற்குச் சிவன் புன்னகைத்தபடி, ""தேவி! எந்தப் பாபமும் உன்னை அணுகாது. இருப்பினும் உலகம் உய்யத் தவம் செய்ய விரும்புகிறாய் என்பது எனக்குப் புரிகிறது. மண்ணுலகில் தவம் செய்யச் சிறந்த இடம் காஞ்சியேயாகும். எனவே அங்குச் சென்று தவம் மேற்கொள்'' என்கிறார்.

உமையம்மை தன் பரிவாரங்கள் சூழ கச்சியம்பதி என்று அழைக்கப்படும் காஞ்சிக்குச் சென்று, அங்கு வேதமே மாமரமாகி நிற்க, அதன்கீழ் மணலால் லிங்க உருவைப் படைத்து பெருவெள்ளம் பெருகும்படி சிவன் திருவிளையாடல் புரிகிறார்! எங்கே வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என்று அஞ்சி பதைத்த தேவி, லிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார்! தேவியின் அன்பில் மனம் நெகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்ற, தேவி அவரைப் பணிந்து, ""பெருமானே! உமது இடப்புறத்தை தந்து என்னை உமது ஒருபாதியாக்கிக் கொள்ள வேண்டும்!'' என்று வேண்ட, அதற்கு சிவபெருமான், ""உமையே! இங்கு தவம் புரிந்ததால் கண்களைப் பொத்திய வினை கழிந்தது. ஆனால் எமது இடப் பாகம் வேண்டும் என்றால் நினைக்க முக்தியளிக்கும் திருவண்ணாமலை சென்று அங்கு தவம் செய். அங்கு அதனை அருள்வோம்'' என்று கூறி மறைந்தார்.
தேவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "தனக்கு உடலில் இடது பாகத்தைத் தர ஈசன் சம்மதித்து விட்டாரே... தவம்தானே செய்ய வேண்டும்? அது என்ன பிரமாதம்? கடும் தவம் புரிந்து இடது பாகத்தையும் பெற்றுவிட்டால்... பிருங்கி முனிவா... அப்போது என்ன செய்வாய் நீ?' என தான் பெறப்போகும் மகத்தான வெற்றியை மனதில் ஓடவிட்டபடி மகா சந்தோஷத்துடன் தன் பரிவாரங்களுடன் விநாயகர், முருகர் உட்பட திருவண்ணாமலை நோக்கிப் பயணித்தார்.

வழியில் திருவண்ணாமலை நெருங்கும்போது ஓரிடத்தில் சற்று ஓய்வெடுத்தபோது அங்கு முருகக் கடவுள் வாழைப்பந்தல் இட்டார்! பின்பு நீராடித் தூய்மை பெற தன் திருக்கரத்திலிருந்த வேலாயுதத்தை ஏவி அருகிலிருந்த மலை ஒன்றினைப் பிளந்து அதனிலிருந்து ஒரு நதியை உருவாக்கினார் ஆறுமுகப் பெருமான். சிவ, பார்வதியின் சேய் தருவித்ததால் அந்த நதி "சேயாறு' என வழங்குவதாயிற்று. "வாழைப்பந்தல்' இட்ட இடம் இன்றும் வாழைப்பந்தல் என்ற திருத்தலமாக விளங்குகிறது. உமையும் மற்றவரும் சேயாற்றில் நீராடித் தூய்மையாக திருவண்ணாமலையை அடைந்தனர். அங்கு ஏற்கெனவே தவம்புரிந்து கொண்டிருந்த கௌதம முனிவர் உமையையும் மற்றவர்களையும் மகா அன்புடன் வரவேற்று உபசரித்து உமையம்மை தவம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் சிறப்புற செய்து தந்தார்.

இங்கும் அன்னை மேற்கொண்ட தவத்திற்கு இடையூறு செய்ய மகிடாசுரன் என்ற அரக்கன் தன் பெருத்த சேனைகளுடன் வந்து கலகம் விளைவித்தான். ஆனால் உமை சிறிதும் கலங்காமல் தன் சொரூபமாக துர்க்கையைத் தோற்றுவிக்க அவள் கடும் ஆவேசத்துடன் பாய்ந்து மகிடாசுரனையும் அவன் சேனைகளையும் துவம்சம் செய்தாள்.

பின்பு நெடுங்காலம் உமை அங்கு தவம் புரிந்தார். கடைசியில் அந்த நாளும் வந்தது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி அண்ணாமலையானைத் தொழுது நின்றார் உமையம்மை. அப்போது மலைமேல் கோடானுகோடி சூரியர்கள் ஒருசேர உதித்தாற்போல் ஒரு பெரும் ஜோதிப்பிழம்பு தோன்றியது. தன்னை வணங்கி நின்ற உமையம்மையை அந்த மலையை வலம் வருமாறு ஓர் அசரீரி பணித்தது. அதுகேட்ட அம்மை தன் பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க அண்ணாமலையை வலம் வந்தார். பல திசைகளிலும் பணிந்த பின்னர் இறுதியாகக் கீழ்த்திசை வந்து தொழுதபோது சிவபெருமான் ரிஷபத்தின்மீது வீற்றிருந்தபடி காட்சி தந்து உமையம்மைக்குத் தன் உருவில் பாதியைத் தந்து கலந்தருளினார்.

தொண்டை மண்டலம், வடதிருமுல்லைவாயில் தலத் திருப்புகழ்ப்பாடலான "அணி செவ்வியார் திரை சூழ்'' எனத் துவங்கும் பாடலில் ""குணவில்ல தாமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெரு குணசாத குடிலில்ல மேதரு'' என்ற அடிகளில் இந்த நிகழ்ச்சியை படம்பித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர். இந்தப் புராண நிகழ்வு இன்னும் வேறு சில திருப்புகழ்ப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.
- மயிலை சிவா.

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...