Skip to main content

திருவாஞ்சியம் தலவரலாறு



வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் திருவாஞ்சியம்



  இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாஞ்சியநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி

தேவாரப்பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. 


பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது. சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் உடையது. பிரதான இராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

இயமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற / இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன் ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம் கூறுகின்றது.

மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். 

மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.


குப்தகங்கை தீர்த்தம்; மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.

உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோக நிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள் பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. தலவிநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் சந்தன மரம்.


கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும் நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார். இஃது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும். அருகிலுள்ள பெரிய ஊர் நன்னிலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...