தத்தாத்ரேய குரு அவதாரங்கள்
தத்தாத்ரேய குரு அவதாரங்கள் யார் என்பதைப் பற்றியும் அந்த அவதாரங்களின் நோக்கம் மற்றும் மகத்துவத்தைப் பற்றி சொல்வதாக இந்தப் பதிவு அமைகிறது.
தத்தாத்ரேய குரு அவதாரங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் அவதாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம். அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள். மனிதன் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். அவதாரம் என்பது மனித உடல் அல்லது மனித மற்றும் விலங்கு உடல் கொண்டு அல்லது விலங்கு உடலாகவோ இருக்கலாம். அவ்வாறு விஷ்ணு எடுத்த அவதாரங்கள்தான் தசாவதாரங்கள்.
மும்மூர்த்திகளும் இணைந்து கலியுகத்தில் மக்களை உய்விப்பதற்காக தெய்வ குரு அவதாரமாக வந்தவர் ஸ்ரீ தத்தாத்ரேயர்.
தெய்வ குருவாக தத்தாத்ரேயரை மகா பெரியவர் தன்னுடைய தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார். “குரு பரம்பரை : தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி பகுதியில்” இருந்து கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ தத்தாத்ரேயரை அடுத்து, தத்தாத்ரேய குரு அவதாரங்களாக இந்த உலகிற்கு வந்தவர்கள்:
1. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் (1300 A .D )
2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)
3. மாணிக் பிரபு.1817 A .D
4. கஜானன் மஹராஜ்
5. அக்கல்கோட் மகராஜ்
6. சீரடி சாய்பாபா அவர்கள்
இறைவனுக்கு எந்த உயிரிலும் பாரபட்சம் இல்லை. இது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி என்றால் இறைவன் மாணிக்கவாசகருக்கு மட்டும்தான் குருவாக வருவாரா? நமக்கெல்லாம் குருவாக வர மாட்டாரா? என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடையாகத்தான் இந்த தத்தாத்ரேய குரு அவதாரங்கள் விளங்குகிறார்கள்
குருவருள் இருந்தால் மட்டும்தான் ஒரு ஆன்மா முக்தி அடைய முடியும் என்பதால்தான் குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை என்று சொல்லப்பட்டது. இன்றைக்கும் பல பேர் தன்னுடைய குரு யார் என்று தேடிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். குரு என்பவரை நாம் தேடி செல்ல இயலாது! நம்மைத் தேடி சரியான நேரத்தில் குரு வருவார் என்பதுதான் சத்தியமான உண்மை.
தத்தாத்ரேய குரு அவதாரங்களுக்கும் மகா கணபதிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பு உணர்த்தப்பட்டது என்பதால்தான், இறை அருளுடன் இன்றைக்கு இந்த பதிவு எழுதப்படுகிறது. அதனைப் புரிந்துகொள்ள விநாயகர் புராணத்தில் இருந்து சில விஷயங்களை மேற்கோளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த விநாயகர் புராணத்தை நான் தேடிச் செல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் விநாயகர் புராணம் என்று ஒன்று இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. நாம் தத்த புராணம் என்கின்ற புத்தகத்தை கூகுளில் தேடி சென்றேன். அப்பொழுது முதல் பக்கத்தில், முதல் பதிவாக எனக்கு கிடைத்தது இந்த விநாயகர் புராணம். இந்த விநாயகர் புராணம் இலங்கையில் சுண்ணாகம் என்கின்ற இடத்தில் தொகுக்கப்பட்டு அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகம். இந்த புத்தகம் இணையதளத்தில் எங்கே கிடைக்கும் என்கின்ற இணையதள முகவரி இந்தப் பதிவின் முடிவில் கொடுக்கப்படும்.
பெரும்பாலும் அனைவருமே விநாயகரை முழுமுதற்கடவுள் என்று அழைப்போம். ஆனால் எத்தனை பேருக்கு அவ்வாறு அழைப்பதன் பொருள் என்ன என்று தெரியும்? விஷ்ணு பிரம்மா சிவன் என்று அழைக்கப்படும் மும்மூர்த்திகளையும் படைத்தவர் விநாயகர் என்பதினாலும், பிரபஞ்சத்தின் மூலம் விநாயகர் என்பதினாலும் முழுமுதற்கடவுள் என்று அவரை அழைக்கிறோம். இதனால்தான் விநாயகரை முதலில் வணங்கி விட்டு நாம் எந்த விஷயத்தையும் செய்கிறோம். இதற்கு சாட்சியாக விநாயகர் புராணத்தில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரு - கு என்றால் அஞ்ஞானம்(இருள்),ரு என்றால் நீக்குபவர் (ஒளியை உண்டாக்குபவர்). குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள். நம் மனதில் இருக்கும் இருளை நீக்குபவர். இதைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில்
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 38
உண்மையான ஞானம் கிடைக்கும் பொழுது ஒளியாக பிரகாசிப்பவனே,
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 39
உண்மையான ஞானம் இல்லாதபொழுது இருளாக இருப்பவனே,
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
இருளை நீக்கி ஒளியை ஏற்றும் ஞான தீபமே
என்று சொல்லி இருக்கிறார்.
விநாயகரை நாம் கடவுளாக வணங்குகிறோம். ஆனால் நம் குருவாக அவரை பார்க்கிறோமா என்றால் இல்லை. குருவாக ஒருவரை நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுதுதான் அவர் நமக்கு வழிகாட்டியாக அமைகிறார். இன்று பல லட்சக்கணக்கான மக்கள் சீரடி சாய்பாபாவை வணங்குகிறார்கள் ஆனால் எத்தனை பேர் அவரை குருவாக உணர்ந்திருக்கிறார்கள். நாம் ஒருவரை குருவாக ஏற்று வணங்கும் பொழுது அவர் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் வழிகாட்டியாக இருக்கிறார். மகா கணபதியே குருவாக அவதரித்த அவதாரம்தான் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர். சுயம்புவாக தோன்றிய காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் இன்றைக்கும் இதற்கு சாட்சியாக விளங்குகிறார். இதைப்பற்றி ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் சரித்திரத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மார்ச் 25ஆம் தேதி எங்களுடைய வட்டாரத்தில் உள்ள ஒருவருக்கு நடந்த விஷயங்கள் மூலமாக இது எங்களுக்கு உணர்த்தப்பட்டது. நாங்கள் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரத்தை பாராயணம் செய்து இருந்தாலும் கூட, அவர் மகா கணபதியின் அடையாளமாக விளங்குகிறார் என்று படித்து இருந்தாலும் கூட அதை அனுபவபூர்வமாக உணர்ந்த பொழுது வியந்து நின்றோம். இந்த உணர்வுகளை மெய்ப்பிக்குமாறு திரும்பத்திரும்ப விநாயகர் மற்றும் காணிப்பாக்கம் சம்பந்தமாக ஏதேனும் ஒரு விஷயங்கள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. அந்த விதத்தில் இன்று மாடம்பாக்கம் பதினெட்டு சித்தர்கள் கோவிலில் இருந்து வந்த ஒரு வீடியோ, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தொடர்பு உடையதாக அமைந்தது கண்டு மெய்சிலிர்த்து நின்றோம். இன்றைய பதிவோடு அந்த விநாயகர் வீடியோவை பதிவு செய்கிறோம். மார்ச் 25ஆம் தேதி முதல் நடந்த விஷயங்களை முடிந்தால் எழுத்துப் பதிவாகவும், இல்லை என்றால் யூடியூப் பதிவாகவும் கூடிய சீக்கிரத்தில் அதை பதிவு செய்கிறோம். தற்சமயம் இவ்வளவு மட்டும்தான் எழுத இயன்றது. கூடிய சீக்கிரம் இறையருள் இருந்தால் நாங்கள் உணர்ந்து விஷயங்களை மேலும் பதிவு செய்கிறோம். தத்த அவதாரங்களான
1. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் (1300 A .D )
2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)
3. மாணிக் பிரபு.1817 A .D
4. கஜானன் மஹராஜ்
5. அக்கல்கோட் மகராஜ்
6. சீரடி சாய்பாபா அவர்கள்
ஆகிய அனைத்து குரு அவதாரங்களுக்கும் சரித்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அனைவராலும் அந்த சரித்திரங்களை படிக்க முடியுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும். அப்படி இந்த குரு சரித்திரங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் வாழ்வில் குரு வந்து விட்டார் என்றுதான் அர்த்தம். குரு நம் வாழ்க்கையில் வரும் பொழுது நாம் அவரை குருவாக உணர்ந்து மதித்து வணங்கும் பொழுதுதான் குரு அருளை முழுமையாக உணர முடியும். மாணிக்கவாசகர் அந்தணராக வந்தவர் குரு என்பதை உணர்ந்தார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை படிக்கும் அனைவருக்கும் குருவை உணர்ந்து வணங்கக் கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் அனைத்து குரு சரித்திரங்களும் மற்றும் விநாயகர் புராணம் தரவிறக்கம் செய்து அடியவர்கள் அனைவரும் படிக்கலாம்.
குரு சரித்திரங்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
விநாயகர் புராணம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்



Comments
Post a Comment