பித்ரு தர்ப்பணம் வீட்டிலேயே செய்வது எப்படி? ஏன் செய்ய வேண்டும்? என்பது குறித்த விஷயங்கள்
பித்ரு கடமைகள்:
வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், கோடை காலம் இவையெல்லாம் ஒரு சுழற்சியாக வருவது போல நம் வாழ்க்கையும் ஓர் சுழற்சி. வாழ்க்கை மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலான அனைத்துமே ஒரு சுழற்சி தான். நாம் சாப்பிடும் உணவை எடுத்துக்கொண்டால் உணவு நம் உள் உறுப்புக்களால் செரிமானம் ஆகி, பிறகு கழிவாகி, மீண்டும் ஊட்டச்சத்தாக மாறி பிறகு சிறிது காலம் கழித்து நமக்கு மீண்டும் உணவாக மாறுகிறது. ஆனால் பிளாஸ்டிக்கை எடுத்துக்கொண்டால் அவை மறுசுழற்சி ஆகாமல் தேங்கி விடுவதால் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். மறு சுழற்சி மற்றும் தேங்கி விடுதல் இவைகளை அடிப்படையாகக் கொண்டு பித்ரு கர்மாக்கள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
பிறப்பும் இறப்பும் இதுவரை அறிவியலால் விளக்க முடியாத ஒன்று, ஆனால் நம்முடைய புராணங்கள் அவற்றை குறித்து தெளிவாக சொல்லி இருக்கிறன. அதன்படி ஒரு உயிர் உடலை விட்டு நீங்கும் போது அதை ஆன்மா என்று சொல்லுகிறோம். அந்த ஆன்மாவானது தன்னுடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மற்றொரு பிறவியில் வேறு ஒரு உடல் எடுத்து பிறக்கின்றது. நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்து, கழிவாகி , ஊட்டச்சத்தாகி, பிறகு மட்டுமே மீண்டும் உணவாக மாறுகிறது. அதுபோல் ஆன்மாவும் உடனடியாக வேறு ஒரு பிறப்பு எடுப்பது என்பது இயலாது. அந்த இடைப்பட்ட நேரத்தில் பல்வேறு விதமான நிலைகளை அந்த ஆன்மா தன்னுடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அனுபவிக்கின்றது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த ஆன்மாக்களானது பித்ருக்கள் என்று அழைக்கப்படுகிறன. அந்த ஆன்மாவானது சில சமயங்களில் வேறொரு பிறப்பு எடுக்க முடியாத அளவுக்கு தேங்கி விடும் வாய்ப்புகளும் உண்டு. நாம் செய்யும் பித்ரு கடமைகள்தான் அந்த ஆன்மாக்களின் இடைப்பட்ட காலத்திலும், தேங்கியிருக்கும் நிலையிலும் உதவுகிறது . புராணங்களின்படி அந்த இடைப்பட்ட காலத்தில், தேங்கியிருக்கும் நிலையிலும் நம்முடைய முன்னோர்கள் தண்ணீர் தாகத்தினாலும், பசியினாலும் மிகவும் வருத்தம் மற்றும் துன்பம் அடைவார்கள். இது உண்மையா என்று கேட்பவர்களுக்கு , நமக்கு பூமி உருண்டை என்று சொன்னார்கள், பூமி சுழல்கிறது என்று சொன்னார்கள் நாம் அதனை பார்த்ததில்லை ஆனால் அதனை நம்புகிறோம். கல்வி முறை வழியாக, பாடப்புத்தகங்கள் வழியாக சொல்லப்படும் எத்தனையோ விஷயங்களை நாம் மறு கேள்வி கேட்பதில்லை. அறிவியல் முறையாக சொல்லப்பட்ட பல விஷயங்கள் பல்வேறு காலகட்டங்களில் புதிய ஆராய்ச்சி என்று செய்யப்பட்டு பழைய கருத்துக்கள் மறுக்கப்பட்டு புதிய கருத்துக்கள் உருவாகின்றன. ஆனால் நம்முடைய புராணங்கள் சொன்ன விஷயங்கள் என்றும் மாறுவதில்லை. இந்த விஷயங்களை ஒருசாரார் ஏற்றுக்கொள்ளலாம், மறுசாரார் மறுக்கலாம். அது குறித்த விவாதங்கள் பயனற்றவை, நேரத்தை வீணாக்குபவை. இந்தப் பக்கத்தின் நோக்கம் புராணங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை மற்றவருக்கு புரியும்படி எளிதாக்கி, பகிர்ந்து கொள்வது மட்டுமே. நம்புவதும், அதனை பின்பற்றுவதும் , வேண்டாம் என்று ஒதுக்கி விடுதலும், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விஷயம்.
சமீப காலங்களில் நிறைய புயல் வெள்ளம் போன்றவற்றால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு அதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிக்க இயலாமல் நிறைய பேர் தவித்ததை நாம் பார்த்திருக்கலாம் , படித்திருக்கலாம். இது போல கடையடைப்பு நேரத்திலும், போராட்டம் மற்றும், நிறைய வன்முறை காலங்களிலும், வயதானவர்களும் ஓட்டல்களை நம்பி சாப்பிடுபவர்களும் உணவு கிடைக்காமல், உடல்நிலை சரியில்லாதவர்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை, நம் நெருங்கிய உறவுகளுக்கு ஏற்படும்பொழுது நம் மனம் பதைபதைக்கும், எப்படியாவது அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அதற்குரிய அனைத்து வழிகளையும் யோசித்து செய்ய முற்படுவோம். இப்படி ஒரு தவிக்கும் நிலை தான் பித்ருக்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் நமது கண்ணால் காணவோ, உணரவோ முடியாது. இந்த உணரமுடியாத நிலையினால் தான், நம்மில் நிறைய பேர் பித்ரு கடமைகளை ஒழுங்காக செய்வதில்லை. இன்றைக்கு இருக்கும் அறிவியல் வளர்ச்சியில், ஒரு இதய ஆபரேஷன் நடக்கும் பொழுது, எவ்வாறு நடக்கிறது? டாக்டர் என்ன செய்கிறார்? என்பதை வீடியோ மூலமாக கூட காண முடியும். இதையே நாம் ஒரு மனநல மருத்துவரிடம் அவர் எப்படி மனநிலை சரியில்லாதவர்களுக்கு மருத்துவம் அளிக்கிறார்? அது எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதைக் கேட்டால் காண்பிக்க முடியுமா ? மற்ற உடல் உறுப்புகளைப் போல், ஒரு மனநல மருத்துவரால் மனம் எங்கே இருக்கிறது என்று கூட சொல்ல இயலாத நிலை தான். அதற்காக அதற்கான படிப்புகளை நம்மால் மறுக்க இயலுமா ? அப்படி மறுத்து பேசிக் கொண்டிருந்தால் அது விதண்டாவாதமாகத்தான் முடியும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. மன அழுத்தத்தால் மற்றும் மன நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு பிறகு சரியானவர்களை மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கேட்டால் சொல்வார்கள் மனநல மருத்துவர்கள் எங்கள் குல தெய்வம் போல என்று. நமக்குத் தெரியாத ஒன்றை, புரியாத ஒன்றை, அனுபவம் இல்லாத ஒன்றை மறுப்பதை விட, நம்முடைய முன்னோர்களுக்கு கஷ்டம் என்று சொல்லும்பொழுது அதை செய்வதே மேன்மையானது. நம்முடைய குழந்தைகள் என்று வரும்பொழுது தடுப்பூசிகள் போடுகிறோம் அதை நாம் போடாமல் விடுவதில்லை. ஏனென்றால் எதற்கு ரிஸ்க் என்று நினைத்து, டாக்டர் சொல்வதை செய்துவிடலாம் என்று செய்கிறோம். பித்ரு கடமைகளும் அதுபோலவேதான்.
பித்ரு கடன்கள் :
இங்கு பித்ரு கடன்கள் என்று சொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் கடன் என்று வந்து விட்டால் கண்டிப்பாக அதை அடைத்தே ஆகவேண்டும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறது திருக்குறள். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று படித்திருக்கிறோம் கேள்விப்பட்டிருக்கிறோம். யாரோ என்றோ சொன்னதை மேற்கோள் காட்டி விட்டால் நாங்கள் அதை நம்ப வேண்டுமா? அதன் படி செய்ய வேண்டுமா ? என்ற கேள்வி சிலருக்கு தோன்றும்.
நம் உடலின் உறுப்புகள் அனைத்தையும் வடிவமைத்தது, அதை அற்புதமாக இயங்க வைத்துக் கொண்டிருப்பது அறிவியலா? மனிதனா? இதை நாம் ஆழமாக யோசித்தால் நமக்கு மேற்கொண்டு ஒரு சக்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சக்தியை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் எழுதியது திருமந்திரம், திருமுறைகள் இன்னும் பல இலக்கியங்கள். அறிவியல் அறிவு சார்ந்தது; அறிவு மேம்பட மேம்பட அறிவியலின் கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இறைவன் என்பவன் அறிவுக்கு எட்டாதவன், அவனை உணரத்தான் முடியும். இறைவன் வகுத்த நெறிகளில் பித்ரு கடன்கள் என்பது, வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், வாழ்ந்து முடித்தவர்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக் கடன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் விட்டுச்சென்ற ஏதோ ஒன்றை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதற்கு கைமாறாக செய்ய வேண்டிய நன்றிக் கடன்களே பித்ரு கடன்கள். நம்மில் பெரும்பாலானோருக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் குறித்து சரியாக தெரிவதில்லை . அப்படியே தெரிந்தாலும் அதை முக்கியமானதாகக் கருதுவது இல்லை. இளையதலைமுறைகளுக்கும் இது குறித்து தெளிவான வழிமுறைகள் தெரிவதில்லை. இளைய தலைமுறைக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் தெரிய வேண்டும் என்கிற ஒரு நோக்கத்துடன் இந்த விஷயங்கள் இந்த பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பித்ரு கடமைகளை பற்றி தெரிந்து கொண்டு நம் முன்னோர்களுக்காக, அவரவர் குடும்ப நலன்களுக்காகவும் , வரும் தலைமுறைகளை பாதுகாக்கவும் ஆத்மார்த்தமாக செய்வோம்.
- ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. அப்படி செய்ய இயலாதவர்கள் கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை முன்னோர்களின் திதி அன்றோ அல்லது மகாளய அமாவாசை அன்றோ கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- வருடம் ஒருமுறை நம் முன்னோர்களுக்கு திவசம் அல்லது சிரார்த்தம் செய்து, அன்னதானம் அளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு அமாவாசையன்றும் பசுக்களுக்கு உணவளித்து அப்படி முடியாவிட்டால் குறைந்த பட்சம் தர்ப்பணம் மற்றும் திதி செய்யும் நாள் அன்று பசுக்களுக்கு உணவளிக்க வேண்டும். அப்படி உணவளிக்க முடியாதவர்கள் கோசாலைகளுக்கு பணம் அளிக்கலாம். பசு பராமரிப்பிற்காக கண்டிப்பாக நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்ய வேண்டும் . இவ்வாறு செய்வதனால் வரும் பலனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
- வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் செய்வது மிக மிக நல்லது. இது வரும் ஏழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் . அப்படி வருடம் ஒருமுறை செல்ல இயலாதவர்கள் கண்டிப்பாக தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. முடிந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது காசி சென்று தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. பித்ரு தர்ப்பணம் காசியில், ராமேஸ்வரத்தில் செய்யப்படுவது பல தலைமுறைகளை பாதுகாக்கும். அது என்ன ராமேஸ்வரம் காசி மட்டும் அவ்வளவு முக்கியமான இடங்களா? ஏன் அவரவர்கள் சொந்த ஊரிலேயே செய்தால் போதாதா? என்று சில பேர் தர்க்கம் செய்யலாம். நம் குழந்தைகளை படிக்க அனுப்பும்போது நம் சொந்த ஊரில் காலேஜ் இருந்தாலும் ஏன் அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி என எதற்கு ஒரு சில காலேஜ்களுக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்? பித்ரு தர்ப்பணம் அதுபோலத்தான். ஒவ்வொரு ஊரின் தண்ணீர் சுவை வேறுபடுவது போல, மண்ணின் வளத்திற்கு ஏற்ப போல பயிர்கள் விளைவது போல, பித்ரு காரியங்களும் சில இடங்களில் செய்யும் பொழுது அதனுடைய பலன்கள் மிக அதிகமாக இருக்கும். ஒரு முக்கியமான விஷயம் ராமேஸ்வரத்தில் பித்ரு தர்ப்பணம் செய்து விட்டதால் கடமை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வருடமும் இறந்தவர்களின் திதி அன்றோ அல்லது மகாளய அமாவாசை அன்றோ கண்டிப்பாக திதி கொடுத்தல் மற்றும் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
- மகாளய அமாவாசைக்கு முன் வரும் 14 நாட்களும் மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது . முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ப்பணம் இவற்றை இந்த 14 நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பதினான்கு நாட்களில் நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல நாம் ஆசையாக வளர்த்து இறந்து போன வளர்ப்பு பிராணிகள் அல்லது நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த 14 நாட்களில் அவர்களை நினைத்து திதி செய்யலாம் . எந்த இறந்துபோன ஆன்மாவிற்கும் நாம் திதி மற்றும் மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் பொழுது அதனுடைய பலன் இதை செய்தவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் சென்று சேரும்.
- தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது போல திவசம் மற்றும் தர்ப்பணம் செய்யும்பொழுது மகன்கள் பேரக்குழந்தைகள் அவர்களுக்கும் இதனுடைய முக்கியத்துவத்தை சொல்லி அவர்களையும் உடன் அழைத்து செல்வது நல்லது. இவ்வாறு சொல்லிக் கொடுப்பதன் மூலம் தலைமுறை தலைமுறையாக இந்த விஷயங்கள் விடாமல் செய்யப்படும்.
- அப்பா இருக்கும் போது மகன் திதி கொடுப்பது தவறு, பேரன் திதி கொடுப்பது தவறு என பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன . திதி மற்றும் தர்ப்பணம் நாம் எந்தெந்த மூதாதையர்களை நினைத்து செய்கிறோமோ அவர்களுக்கு மட்டுமே அது போய் சேருகிறது. எனவே அப்பா இருக்கும் போது மகன் கொடுத்தாலும், பேரன் கொடுத்தாலும் அவர்கள் யாருக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை மட்டுமே சேரும். முன்னோர்களை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக நினைத்து அவர்கள் செய்த விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , பிரார்த்தனை செய்து திதி கொடுக்கும் பொழுது கண்டிப்பாக அது அவர்களை சென்று சேரும். ராமாயணத்தில் ராமனுக்கு பதிலாக சீதை தசரதனுக்கு திதி கொடுத்த வரலாறு இருக்கிறது. எனவே பெண்களும் திதி கொடுக்க முடியும்.
- இறைவன் குறித்த எந்த விஷயங்களும் வெறும் ஆடம்பரமாக இல்லாமல், ஆத்மார்த்தமாக செய்வது என்பது மிகமிக முக்கியம். பித்ரு காரியங்களை அய்யர் சொல்ல சொல்ல இயந்திரத்தனமாக செய்வதினால் பலனேதும் கிடைக்காது. நாம் பித்ரு காரியங்களை செய்யும்போது நம்முடைய முன்னோர்களை அவர்களுடைய பெயர் தெரிந்தால், அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தால், அவை அனைத்தையும் நினைத்து நன்றியுடனும் ஆத்மார்த்தமாகவும் பித்ரு காரியங்களை செய்யும் பொழுது அதற்கு பலன் மிக மிக அதிகம் .
- ஸ்ரீ ராம விஜயம் என்கிற புத்தகம் pdf ஆக கூகுள் டிரைவில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய லிங்க் https://drive.google.com/open?id=1DHBg2RhzRnASwRtujKc8QgTXyep_qKtc என்கிற வெப்சைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது . திதி தர்ப்பணம் என்பது அமாவாசை அன்று மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் இந்தப் புத்தகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். இறந்தவர்கள் யாரை வேண்டுமானாலும் நினைத்து இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது அதனுடைய பலன் அவர்களை சென்று சேரும். எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், யாருக்காக வேண்டுமானாலும் படிக்கலாம்.
- பித்ரு தர்ப்பணம் செய்யும்பொழுது சில விதிமுறைகள் உண்டு. நிறைய பேர் தாங்களாகவே தர்ப்பணம் செய்கின்றனர். எப்படி செய்யவேண்டும் என்று தெரிந்து பின் அதுபோலவே செய்வது தவறு இல்லை. நிறைய இளைய தலைமுறையினரின் கேள்வி, தர்ப்பணம் செய்யும் பொழுது நம்முடைய கையை ஏன் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் வைத்து தர்ப்பணம் செய்ய வேண்டுமா? வேறு முறையில் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார்கள்? நாம் எல்லோருமே நம்முடைய வேலை பார்க்கும் இடத்தில் என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் பின்பற்றுகிறோம். விதிமுறைகள் என்று இருப்பது தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்குதான். எடுத்துக்காட்டாக சாலை விதிமுறை அடையாள படங்கள் போன்றவை பெரும்பாலும் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் . அந்த விதிமுறைகளை அவரவர் வசதிகளுக்கு ஏற்ப மாற்றினால் குழப்பங்களும் விபத்துகளும் ஏற்படும். அதுபோலவே பித்ருக்கள் என்ற வரும்பொழுது ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளையும், வழிமுறைகளையும் நாம் பின்பற்றுவதால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம்.
- கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் கடுமையான பிதுர்தோஷம் நீங்கும்
- ஒரு குடும்பத்தில் மூன்று நான்கு பேர் அண்ணன் தம்பிகள் இருப்பார்கள். அவர்களில் ஒரு சகோதரர் குடும்பம் மட்டும் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அப்பொழுது அனைவருக்கும் எழக்கூடிய ஒரு கேள்வி ஏன் பித்ருதோஷம் ஒரு சகோதரரை மட்டும் பாதிக்கிறது? மற்றவர்களை பாதிக்கவில்லை. பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை வருடாவருடம் ஒழுங்காக செய்வதினால் பித்ருகடன் என்கிற கடன் சுமையில் இருந்து தப்பிக்க முடியும். அவ்வாறு அந்தக் கடன்களை நாம் கழிக்காவிட்டால் அந்த கடன்களின் சுமைகள் அடுத்த பிறவியில் நமக்கு பித்ரு தோஷமாக மாறுகிறது. இந்தப் பிறவியில் நன்றாக இருப்பவர்கள் தங்களுடைய பித்ரு கடமைகளை சரியாக செய்யாவிட்டால் அந்த கடன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் பித்ரு தோஷமாக மாறும். எனவே நாம் ஒவ்வொருவருமே அந்தந்த வருடங்களுக்குரிய பித்ரு கடமைகளை சரியாக செய்து விட்டால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.
- இந்த புத்தகத்தில் முன்பே சொல்லியிருந்தது போல் நாம் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தும் நாம் முன்ஜென்மத்தில் செய்த வினைகளின் பலனே! ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது , அதற்கு வேண்டிய பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று யார் மூலமேனும் அவருக்கு தெரிய வருவது என்பது தெய்வத்தின் அனுக்கிரகம். அவரின் முன்ஜென்மத்தில் பித்ரு கடமைகளை சரியாக செய்யாவிட்டால் இந்த பித்ரு தோஷம் ஒரு பரிகாரமாக சொல்லப்படுகிறது. உண்மை என்னவெனில் பித்ரு கடமைகளை நாம் செய்வதன் மூலம் அந்த ஆன்மாவிற்கு விடுதலை கிடைக்கிறது. அதாவது பித்ரு கடமைகளைச் செய்வதன் மூலம் ஒரு ஆன்மாவிற்கு உதவி செய்வதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் முன் ஜன்ம பித்ரு கடன்கள்அழிக்கப்படுகின்றன. நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை விட கஷ்டப்படுபவர்களிடம் பரிகாரம் என்று சொல்லும்பொழுது செய்யும் வாய்ப்புகள் மிக அதிகம் . நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் தங்களுடைய பித்ரு கடமைகளை வருடாவருடம் சரிவர செய்வதன் மூலம், தன்னுடைய தலைமுறையில் வந்த ஆன்மாவிற்கு உதவி செய்வதன் மூலம், தன்னுடைய கணக்கில் அதிக புண்ணியங்களை வரவு வைத்துக் கொள்கிறார். பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள் அவர்கள் வேறு ஒரு பிறவி எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக போய் சேரும்..
- பித்ரு கடன்களை நாம் செய்வதன் மூலம், அதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவருமே நமக்கு நன்மை செய்து கொள்கிறோம். ஏனெனில் நம்முடைய அடுத்த தலைமுறை நமக்கு செய்தால் மட்டுமே நம் ஆன்மா தப்பிப் பிழைக்கும். நம் காலத்திற்கு பிறகு நம் ஆன்மாவும் அவ்வாறான இடைப்பட்ட காலத்தில் மாட்டிக்கொள்ளவும் மற்றும் தேங்கி விடவும் வாய்ப்புகள் அதிகம். தயவுசெய்து யாரும் நமக்கு எல்லாம் அப்படி நடக்காது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . இன்றைய கால மாற்றத்தில் பணத்துக்கும் ,வாழ்க்கை வசதிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் இருக்கிறது. சரி எது தவறு எது என்று நினைக்கக் கூட நேரம் இல்லாமல் பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே பின்பற்றும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை, சமூகத்திற்காக, சமூக கௌரவத்திற்காகவே பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய கணக்கு வேறு, இறைவனின் துல்லியமான கணக்கு வேறு. இறைவனின் கணக்கிற்கு யாரும் விதிவிலக்கு அல்ல!
- வீட்டிலேயே தர்ப்பணம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து கீழ்கண்ட இணைய தளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. https://agasthiar.org/a/tharpanam.htm ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம், ஒரு உயிர் இறந்தபின் எங்கே செல்கிறது? என்பதை அறிவியலால் சொல்ல முடியவில்லை. ஆனால் புராணங்கள் முக்கியமாக, கருடபுராணம் உடலை விட்டு உயிர் பிரிந்த பின், ஆன்மா எங்கே செல்கிறது? ஆன்மா படக்கூடிய கஷ்டங்கள் போன்றவற்றை விரிவாக சொல்கிறது. சாய் சத்சரிதத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், ஒரு உயிர் பிரிந்து மேலே செல்லும் பொழுது, என்ன நடக்கிறது ?என்பதை இலை மறைவு காய் மறைவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான ஸ்க்ரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆன்மா உயிர் பிரிந்து மேலே செல்லும் பொழுது அந்த ஆன்மா ஒரு வருடம் மிக கடினமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும். அப்பாதையில் செல்லும் பொழுது, வரும் அபாயங்களைத் தவிர்க்க அந்த ஆன்மா அந்தப் பிறவியில் அன்னதானம் செய்து இருக்க வேண்டும்ப். பசுக்களுக்கு உணவளித்து இருக்கவேண்டும். இறைவனுக்கு தினமும் ஒரு இலையாவது அன்புடன் போட்டு வணங்கி இருக்க வேண்டும். ஒரு உயிர் பிரிந்தவுடன் அடுத்து வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு, அந்த உயிரின் சொந்தபந்தங்கள், அந்த ஆன்மாவிற்கு செய்ய வேண்டிய விஷயங்களான பிண்டம் போடுதல் அன்னதானம் செய்தல் பசுக்களுக்கு உணவிடுதல் மோட்ச தீபம் ஏற்றுதல் போன்ற பல்வேறு விஷயங்களை முறைப்படி செய்தல் வேண்டும். இந்த விஷயங்களை அவர்கள் சொந்த பந்தங்கள் ஒழுங்காக செய்யாவிடில் அந்த ஆன்மா பல துயரங்களுக்கு ஆளாக நேரிடும். அதனால்தான் நாம் ஒவ்வொருவருமே நம்முடைய வாழ்நாள் இருக்கும் பொழுது நம்முடைய பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்யும் பொழுது, சுற்றி உள்ள சொந்தபந்தங்கள் அதை பார்த்து தெரிந்து அதை தாங்களும் செய்வதற்கு முயற்சி செய்வார்கள். நாம் வாழும் பொழுது கண்டிப்பாக இந்த விஷயங்களை ஏனோதானோ என்று செய்யாமல் முழு நம்பிக்கையுடன் நாம் செய்ய வேண்டும். அதே நம்பிக்கையை நம்மைச் சுற்றியுள்ள நெருங்கியவர்களின் மனதில் விதைத்து அவர்களுக்கும் பித்ரு காரியங்கள் செய்வதற்கு சொல்லிக் கொடுத்தல் வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் ஒரு குண்டூசி எதையும் நம்மால் கொண்டு செல்ல இயலாது ஆனால் நாம் செய்த அன்னதானத்தின் பலன் பசுக்களுக்கு செய்ததன் பலன் பூஜை செய்ததன் பலன் போன்றவற்றை அந்த ஒருவருடம் ஆன்மா செல்லும் கடின பாதையில் மிக மிக உதவும். அதுமட்டுமன்றி இறந்தவர்களுக்காக ஒரு வருடம் ஒவ்வொரு அமாவாசையும் இறந்தவரின் நெருங்கிய சொந்த பந்தங்கள் செய்கின்ற விஷயங்கள் மிக மிக முக்கியமானவை. அந்த விஷயங்கள் அந்த ஆன்மா படும் கஷ்டங்களில் இருந்து காப்பாற்றும். நாம் வெளிநாட்டிற்கு பயணம் செய்தால் அந்த நாட்டிற்கு வேண்டிய விசா மற்றும் அந்த நாட்டு கரன்சி நமக்கு தேவைப்படுகிறது அதே போல் தான் நாம் செய்யும் அன்னதானம் பசுக்களுக்கு செய்யும் தானம் மற்றும் உணவு கொடுத்தல் இறைவனுக்கு ஆத்மார்த்தமாக செய்யும் பூஜைகள் போன்ற எல்லா விஷயங்களும் நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது நமக்கு மிக மிக உதவுகிறது. ஒரு பிறவி எடுத்து ஒரு உயிர் வாழும் பொழுது அது சுகமாக வாழ்ந்து இருக்கலாம் அல்லது மிகவும் கஷ்டப்பட்டு கூட இருந்திருக்கலாம் ஆனால் உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மாவாக பயணம் செய்யும் பொழுது, ஏதேனும் ஒரு உயிருக்கு அவர்கள் அளித்த உணவு, பசுவிற்கு கொடுத்த உணவு இறைவனுக்கு போட்ட ஒரு இலை இவற்றின் பயன் தான் அவர்களை அங்கு காக்கும். சித்தர்கள் மற்றும் அருளாளர்கள் பிறவி வேண்டாம், பிறவி வேண்டாம் என்று சொல்வதற்கு, கதறுவதற்கு ஒரு முக்கிய காரணம், உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் அந்த ஆன்மா படும் துயரம் தான் காரணம். எனவே நாம் அனைவரும் அவரவர்களுடைய முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் மற்றும் அன்னதானம் மற்றும் பசுக்களுக்கு உணவிடுதல் போன்ற விஷயங்களை ஆத்மார்த்தமாக செய்வோம். பித்ரு கடமைகளை குறித்து சாய் எனக்கு உணர்த்திய விஷயங்களை கீழ்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். https://thiruvasagammeaning.blogspot.com/p/blog-page_18.html
பித்ரு கடமை என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம் அனைத்து விஷயங்களையும் இங்கு கோர்வையாக சேர்த்து கொடுத்து இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. முடிந்தவரை நான் உணர்ந்தவகைகளை இங்கு எழுத்தில் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பிறகு ஒரு யூடியூப் பதிவும் இது குறித்து நான் பதிவிடுகிறேன். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments
Post a Comment