Skip to main content

திருஓமாம்புலியூர் தல வரலாறு



திருஓமாம்புலியூர்




திரு ஓமாம்புலியூர்
     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.
     கொள்ளிடக் கரையில் உள்ளது.
      சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. 
     சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7கி.மீ.தொலைவு. 
     சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. கோயில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.
இறைவர்          : பிரணவ வியாக்ரபுரீசுவரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீசுவரர்.
இறைவியார்      : புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி.
தல மரம்          : வதரி (இலந்தை)
தீர்த்தம்           : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்.
தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - பூங்கொடி மடவாள்
                               2. அப்பர்   -  ஆராரும் மூவிலைவேல்


 உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். 

 அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரசுவதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள் என்றும் சொல்லப்படுகிறது. அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான் என்றும் ஒரு செய்தி கூறப்படுகிறது). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.  இந்தக் கதை வேறு சில திருக்கோயில்களுக்கும் கூறப்படுகின்றது.
         கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரிதீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.. அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் காட்சிதருகின்றார். சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப் பட்டுள்ளன.
         இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு. இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்திருத்தலத்தில் மட்டும் தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம்.
         இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.
         பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவை யாவன:
பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),
கானாட்டம்புலியூர்,
எருக்கத்தம்புலியூர்,
திருப்பாதிரிப்புலியூர்.
         இவற்றில் கானாட்டம்புலியூர், இத்திருத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. திரு எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். திருப் பெரும்பற்றப்புலியூர், திரு ஓமாம்புலியூர், திருக் கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் சிவனை வழிபட்டுள்ளார்.
         இத்திருத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் உள்ளன. 
     திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தில் இத்தலம் "ஓமமாம்புலியூர்" என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் "ஓமாம்புலியூர்" என்று வருகிறது. 
     இருவரும் தங்கள் பதிகங்களில் இத்திருக்கோயிலை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீசுவரர்.
     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விண் இடை வாம்ஆம் புலியூர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும் ஓமாம் புலியூர் வாழ் உத்தமமே" என்று போற்றி உள்ளார்.
         காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...