சீரடி சாய் எழுத வைத்த திருவாசக விளக்கம்
முழுமுதற் கடவுளான கணபதியின் தாள் வணங்கி , ஒலி மற்றும் மொழிகளின் தலைவியான சரஸ்வதி தாயின் தாள் வணங்கி, என்னுடைய குலதெய்வமான பச்சைவாழியம்மன் தாள் வணங்கி, திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் தாள் வணங்கி, 63 நாயன்மார்கள் தாள் வணங்கி, அங்கிங்கெனாதபடி எங்குமே ஒளியாய் நிறைந்திருக்கும் சிவனின் தாள் வணங்கி, என்னுடைய குருவான சீரடி சாய் அவர்களின் தாள் வணங்கி, இந்த உரையை எழுதுகிறேன்.
இந்த புத்தகம் எவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்டது என்கிற அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திருவாசக பாராயணம் வாட்ஸ்அப் குழுவை நடத்தி வருகிறேன். எங்கள் குழுவில் சப்த பாராயணம் ஆக, திருவாசகம் ஒவ்வொரு வாரமும் பாராயணம் செய்யப்படுகிறது. குழுவின் அடியவர் ஒருவர் அடிக்கடி திருவாசக பாடல்களுக்கு விளக்கம் போடுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவர் இவ்வாறு என்னை கேட்ட பொழுது நான் திருவாசகத்திற்கு உரை எழுதினால் என்ன என்று என் மனதில் தோன்றியது. தோன்றிய அடுத்த நிமிடத்தில் , நாமாவது திருவாசகத்திற்கு உரை எழுதுவது ?அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே அழித்தேன். இருந்தாலும் அந்த எண்ணம் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் திருவாசக வரிகள் நினைவிற்கு வந்து அதற்கு இப்படி விளக்கம் எழுதலாம் என்றெல்லாம் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது. இந்த நினைவில் இருந்து விடுபட எனக்கு ஒரு வழி தோன்றியது. அதாவது நான் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் இப்பொழுது என்னால் எழுத இயலாது, ஏனெனில் தமிழில் டைப் செய்வது மிகவும் கடினம். பொதுவாக நான் தமிழில் டைப் செய்ய ஸ்பீச் டைப்பிங் வலைதளத்தை உபயோகிப்பேன்.அந்த வலைத்தளம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வேலை செய்யவில்லை. எனவே அந்த வலைத்தளம் வேலை செய்தால் என்னை எனது குருவான சாய் எழுத தூண்டுகிறார் என்று எடுத்துக் கொள்கிறேன் என்று மனதில் நினைத்தேன் . அடுத்த நாள் வியாழக்கிழமை மதியம் திடீரென மனதில் ஒரு எண்ணம் எழுந்துகொண்டே இருந்தது , போய் அந்த வலைத்தளத்தை பார் என்று. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஏன் இப்படி தோன்றுகிறது என்று. எப்படியும் அந்த வலைத்தளம் வேலை செய்யாது எதற்கும் போய்த்தான் பார்க்கலாமே என்று அந்த வலைதளத்தை சென்று பார்த்த பொழுது அதிர்ச்சி ஆகி நின்றேன், ஏனெனில் அந்த வலைத்தளம் திரும்பவும் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தது. இறைவன் கொடுத்த கட்டளையாக நான் நினைத்தாலும் மிகவும் தயக்கமாக இருந்தது . திருவாசக வரிகளுக்கு எழுதவேண்டிய விளக்கங்கள் என்னுள் தோன்றி கொண்டே இருந்ததால் திருவாசகத்திற்கு உரை எழுத ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த புத்தகத்தை எழுதுவது சீரடிசாய் அவர்கள்தான், நான் இங்கே வெறும் கருவி தான். எனவேதான் புத்தகத்தின் தலைப்பு சீரடிசாய் எழுத வைத்த திருவாசக விளக்கம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
படைத்தல் என்பது ஒரு மிக மிக அற்புதமான விஷயம். மரங்கள் , மற்ற உயிரினங்கள், மனிதன் இப்படி கடவுள் படைத்த உயிரினங்களின் உள்ளுறுப்புகள் அமைந்த விதம், அவை செயல்படும் விதம் இவற்றை ஆழ்ந்து நோக்கினால், எப்படி இவ்வளவு துல்லியமாக, நுணுக்கமாக உள்ளுறுப்புகள் படைக்கப்பட்டு அவைகள் தானாகவே இயங்குகின்றன என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கும் . இவற்றை படைத்தது அறிவியலா? நம் இதயத்தை இயக்குவது அறிவியலா? நம்முடைய செரிமானத்தை செய்வது அறிவியலா? அறிவியல் எந்த உயிரினங்களையும் படைக்கவில்லை. அறிவியல் என்பது இறைவன் படைத்த படைப்புகளை பலவிதமாய் பிரித்துப் பார்த்து ஆராய்ந்து அது எவ்வாறு இயங்குகிறது ? என்று புரிந்துகொள்ள உதவுகிறது. நம்முடைய உறுப்புக்கள் பழுதடைந்து போனால் எவ்வாறு சரி செய்வது ? என்பதற்கு அறிவியல் உதவுகிறது. அறிவியல் உலகில் உள்ள இயங்கும் பொருட்களை புரிந்து கொள்ள உதவுகிறது. திருமுறைகள் நம்மை இயக்குபவனை உணர்ந்து கொள்ள உதவுகிறது.
திருவாசகம் கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டிருந்தாலும் அதற்கு 19ஆம் நூற்றாண்டில் தான் உரை எழுதினார்கள் . அனைவருமே தங்களுக்கு தெரிந்த வகையில், புரிந்த வகையில் , உணர்ந்த வகையில் உரை எழுதினார்கள். இந்த விளக்கவுரை முழுக்க முழுக்க எனது குருவான சீரடி சாயின் துணை கொண்டும் தமிழ் அகராதி வலைத்தளங்களின் துணைகொண்டு எழுதப்பட்ட உரை. நாம் ஒருவரிடம் பேசும்போது அவர்கள் பேசும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல அவர்களின் முகபாவனைகள் குரலின் ஏற்ற இறக்கம் இவை அனைத்தும் சேர்ந்துதான் ஒருவர் பேசும் வார்த்தைகளுக்கு முழுமையான அர்த்தத்தை கொடுக்கின்றன. அதுபோல வெறும் வார்த்தைகளின் பொருளை, அர்த்தத்தை தெரிந்து கொள்வதினால் திருவாசகத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. இந்த புத்தகம் திருவாசக வரிகளின் பொருளை மட்டும் பார்க்காமல் மாணிக்கவாசகர் இவ்வாறு எழுதியதற்கு அடிப்படை காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதை எனது குரு எனக்கு உணர்த்தியதை , எனக்குத் தெரிந்தவரையில், புரிந்த வரையில் உணர்ந்த வரையில் இங்கு விளக்கிச் சொல்ல முயற்சித்து உள்ளேன்.
ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைநிறைய உப்பை போட்டு கலக்குங்கள். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வீர்கள். அந்த உப்பை இப்பொழுது என்னிடம் காட்ட முடியுமா அல்லது நீங்கள் போட்ட இரண்டு கையில் உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது என்று சொல்வீர்கள். தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம் ஆனால் அந்த உப்பின் தன்மையை உணரமுடியும். அந்த தண்ணீரை எடுத்து நான் சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போலத்தான் அவனை உணரத்தான் முடியும். இதைதான் மாணிக்கவாசகர்
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்”
என்று சொல்லியிருக்கிறார். திருவாசகத்தின் முழுமுதற் பொருளாக இருப்பவன் நம்முடைய பாட்டுடைத் தலைவன், அங்கிங்கெனாதபடி ஒளியாய் நிறைந்திருக்கும் நம்முடைய சிவன். திருமாலும் பிரமனும் காணமுடியாத அந்த ஈசனின் திருவடியை, மனிதர்களான நாம் நம் அன்பினால் மிக எளிதாக உணரமுடியும். அத்தகைய அற்புதமான, ஆனந்தமான சிவனின் திருவடியை மனக்கண்ணில் நினைத்து வணங்கி, போற்றி, திருவாசகத்தின் பொருளையும், திருவாசகம் சொல்லும் கருத்துக்களையும் , அவைகள் எப்படி நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் உணர்ந்து கொள்ள முயற்சி செய்வோம்.
Click here to read சிவபுராணம் விளக்கம் - 1 ( வரிகள் 1 - 15)
Click here to read சிவபுராணம் விளக்கம் - 1 ( வரிகள் 1 - 15)
சிவன் திருவடிக்கு சமர்ப்பணம்
Sir Super O Super Starting (Sanath Kumar Jatadharan)
ReplyDelete