தமிழ் அகராதி பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு தமிழ் அகராதி பயன்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டி, ஏன் தமிழ் அகராதி நமக்கு முக்கியமானது? ஏன் அதை உபயோகப்படுத்த வேண்டும்? என்பதற்கு உதாரணங்களையும் விளக்கங்களையும் இங்கு கொடுத்துள்ளேன்
நான் வாழ்ந்து கொண்டிருப்பது இங்கிலாந்தில். இங்கே இங்கிலாந்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து கண்டிப்பாக தினமும் ஒரு புத்தகம் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்தே குழந்தைகளுக்கு அகராதியை பார்த்து பொருள் விளங்கிக்கொள்ள கற்றுக் கொடுப்பார்கள். இங்கிலாந்தின் தாய்மொழி ஆங்கிலம்தான். தங்கள் தாய் மொழியை கற்றுக்கொள்ள அனைத்து குழந்தைகளும் அகராதி பார்த்து பொருள் விளங்கி படிப்பார்கள். என்னுடைய தாய்மொழியான தமிழுக்கு நான் பள்ளிக்கூடத்தில் அகராதியை பார்த்ததாக நினைவில்லை. சொல்லப்போனால் தமிழுக்கு அகராதி உண்டு என்பதே திருவாசகத்திற்கு விளக்கம் எழுத ஆரம்பித்த பின்பு தான் எனக்கு தெரிந்தது. சிறுவயதில் படிக்கும்பொழுது திருக்குறள் என்றாலும் புறநானூறு என்றாலும் கோனார் தமிழ் உரை பார்த்து படித்து, அதில் இருப்பதை அப்படியே விடையாய் எழுதி விட்டு மதிப்பெண் வாங்கி அடுத்த வகுப்பிற்கு செல்வோம். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு அப்புறம் தமிழ் படிப்பதை மறந்து, சமூக கௌரவத்திற்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும், கல்லூரிப் படிப்பு படித்து, மேற்படிப்பு படித்து வேலை வாங்கி என்று எல்லோருடைய வாழ்க்கையும் இப்படியே சென்றது இன்றும் இந்த காலத்திலும் இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. திருவாசகம் மட்டுமல்ல எந்த திருமறை எடுத்தாலும் வலைதளத்தில் பார்க்கும் அனைத்து விளக்கங்களும் சரியானவைதானா என்று கூட நமக்கு தெரியாது. வலைத்தளங்களில் சிவ புராணத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கங்களைப் பார்க்க பார்க்க மிகவும் வேதனையாய் இருக்கிறது. புரிந்தும் புரியாமலும் தவறான விளக்கங்களும் வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அது கண்டிப்பாக அவர்களுடைய தவறு அல்ல . ஏனெனில் ஆங்கிலத்தில் குழந்தைகள் படிக்கும் பொழுது synonynms அதாவது ஒரு வார்த்தைக்கு பல விதமான அர்த்தங்கள் உண்டு என்பதை குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டி எந்தவிதமான பொருள் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமானது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். நம் தமிழ் மொழிக்கு ஏன் யாரும் இவ்வாறு சொல்லிக் கொடுக்கவில்லை என்று நினைக்க நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது. திருவாசகத்தில் வரும் “விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற வரிகளுக்கு அவரவர் தங்களுடைய மனதிற்கு தோன்றிய புரிந்த விளக்கங்களை கொடுத்து இருந்தார்களே தவிர, விலங்கு என்றால் தமிழ் அகராதியில் வேறு விதமான அர்த்தங்கள் இருக்கிறதா என்று யாரும் பார்த்ததாக தெரியவில்லை. விலங்கு என்கிற இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல சிவபுராணத்தின் பல்வேறு இடங்களில் எடுத்துக்காட்டாக நாற்றம் நேரி போக்குவாய், சோர் என பல்வேறு தமிழ் வார்த்தைகளுக்கு அகராதியில் வேறு ஏதாவது அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று வலைத்தளங்களில் தங்களுடைய விளக்கங்களை கொடுத்தவர்கள் பார்த்து இருப்பதாக தோன்றவில்லை. இதற்கு காரணம் இவ்வாறு தமிழ் அகராதியை நாம் பார்க்கவேண்டும் என்று நமக்கு குழந்தைப்பருவத்தில் இருந்து யாரும் நமக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. இந்த ஒரு காரணத்தினால் திருவாசகம் தேவாரம் திருமந்திரம் என அனைத்து திருமுறைகளுக்கும் வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது.
தமிழ் அகராதியை அகராதியை பயன்படுத்தி நாம் திருமுறைகளுக்கு பொருள் புரிந்துகொண்டால் இறைவனின் பெருமையை மட்டுமல்ல, தமிழின் பெருமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். இதற்கு எடுத்துக்காட்டாக சிவபுராணத்தின் 92-வது அடியான “சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்” என்பதைக் கொண்டு விளக்க முயற்சி செய்துள்ளேன். “சொல்லற்கு” என்கிற வார்த்தையை பிரித்தால் சொல் + அற்கு. சொல் என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பலவித அர்த்தங்களை இந்த தமிழ் அகராதி வலைத்தளத்தில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த தமிழ் அகராதி வலைத்தள முகவரி:
மேலே கொடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வார்த்தை பொருத்தங்களில் இங்கு மாணிக்கவாசகர் சொல்லி இருக்கிற அதற்கு பொருத்தமான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சொல் - உறுதிமொழி, அறிவித்தல் பறைசாற்றுதல், அற்கு- காலத்தினால் அழியாத, எப்பொழுதும் அழியாத, நிலைத்து நிற்பவன், அரிய - அபூர்வமான,பலரும் அறியாத,அருமையான, சொல்லி - என்று கூறி.
இந்த வரியில் சொல் என்ற வார்த்தை இரண்டு விதமான அர்த்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லற்கு என்கிற வார்த்தையில் வரும் சொல், மாணிக்கவாசகர் நமக்கு அளிக்கும் உறுதிமொழி, பறைசாற்றுதல் என்னும் பொருளில் வருகிறது. அல்லது அவர் நமக்கு அறிவித்தல் என்னும் பொருளில் வருகிறது. காலத்தினால் அறியாதவன் இறைவன், எப்பொழுதும் அழியாது நிலைத்து நிற்பவன் இறைவன் என்று நான் உறுதி சொல்கிறேன் அல்லது அறிவிக்கிறேன், அதுமட்டுமல்ல அவன் அபூர்வமானவன், பலரும் அறியாதவன் என்றும் நான் கூறுகிறேன் என்று மாணிக்கவாசகர் இந்த வரியில் நமக்கு சொல்லி இருக்கிறார். சொல் என்கிற வார்த்தை நம்மால் தினமும் பலமுறை பல இடங்களில் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. அந்த ஒரு சிறிய வார்த்தைக்கு எத்தனை விதமான அர்த்தங்கள் இருக்கின்றன, அதை மாணிக்கவாசகர் மிக, மிக, மிக அழகாக அற்புதமாக உபயோகித்து “சொல்லற்கு அரியானைச்” என்று வர்ணித்திருக்கிறார். என்றால் நிலைத்து நிற்பவன் அழியாதவன் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். எனக்கு இன்றுதான் தெரிந்தது. சொல்லற்கு என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பொழுது நான் மிகவும் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து நின்றேன். நம்முடைய தமிழ் மிக மிக உயர்வானது அற்புதமானது மாணிக்கவாசகர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய தமிழ் மொழியை “ சொல்லற்கு அரியாளை” என்றுதான் அறுதியிட்டு சொல்ல வேண்டும். இறைவனை மட்டுமல்ல தமிழையும் உணர்ந்தால்தான் அவற்றின் அற்புதம் நமக்கு புரியும். இறைவனை உணர அன்பும் பக்தியும் தேவை. தமிழை உணர நமக்கு இன்று தேவை நல்ல தமிழ் அகராதி. இதை நாம் உணர்ந்து இனி வரும் காலத்திலாவது தமிழுக்கு, தமிழ் அகராதியை நாம் அனைவரும் உபயோகப்படுத்துவோம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் தமிழ் அகராதியை உபயோகப்படுத்த கற்றுக் கொடுப்போம்.
திருவாசகம், திருமந்திரம் படிக்க ஆசைப்படும் அனைத்து அடியவர்களுக்கும் மிகத் தாழ்மையுடன் அன்புடன் பணிவுடன் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தயவு செய்து அனைவரும் தமிழுக்கு ஓர் அகராதியை வாங்குங்கள். தமிழுக்கு அகராதி கண்டிப்பாக ஒவ்வொருவரும் வீட்டிலும் இருக்க வேண்டிய மிக அத்தியாவசியமான ஒரு புத்தகம் . நிறைய பேர் வீட்டில் ஆங்கிலத்திற்கு அகராதி வைத்திருப்பார்கள் ஆனால் தமிழுக்கு எனக்கு தெரிந்து யாராவது அகராதி வைத்திருக்கிறார்களா? முதலில் தமிழுக்கு அகராதி கடைகளில் விற்பனை செய்கிறார்களா என்பதே சந்தேகமாய் இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும், தமிழ் அகராதி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வு இனியாவது நமக்கு வரவேண்டும் என்கிற ஆதங்கத்துடன் இந்த பதிவை இங்கு பதிவிட்டுள்ளேன். ஓம் சாய் ஓம் நமசிவாய
Very Nice explanation (Sanath Kumar Jatadharan)
ReplyDelete