புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
புல் - புல்லாகியும், பூடு - சிறு செடி மற்றும் உள்ளிப்பூண்டு, புழு - புழுவாகியும், மரமாகி - மரமாகியும், பல்விருகமாகி - பல மிருகங்களாகியும், பறவையாய் - பறவையாகியும், பாம்பாகி - பாம்பாகியும், கல்லாய் - கல்லாகியும், மனிதராய் - மனிதராகியும், பேயாய் - பேயாகியும், கணங்களாய் - பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவராய் - முனிவராகியும், தேவராய் - தேவராகியும், செல்லா- பயனற்ற, மதிப்பிழந்த , தாவர சங்கமம் - அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்கள், இளைத்தேன் - சோர்வுற்றேன், தளர்ந்தேன் , மெய்யே - மெய்ப்பொருள், கடவுள், பொன் - அழகு, ஒளி, வீடு - வினைநீக்கம், உற்றேன் - அடைந்தேன், பெற்றேன்.
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லாகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பூத கணங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும், பயனற்ற, மதிப்பிழந்த, அசையும் அசையா பொருட்களாக எல்லாப் பிறவியிலும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே! மெய்ப்பொருளே, கடவுளே அழகும் ஒளியும் நிறைந்த உன் திருவடிகள் கண்டு வினை நீங்கப் பெற்றேன் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர். நின்று என்றால் எப்பொழுதும் என்று பொருள். செல்லா நின்ற என்று மாணிக்கவாசகர் சொல்வதற்கு காரணம் எவ்வளவு காலம் ஆனாலும், எப்பொழுதும் அசையும் அசையா பொருட்களாக பிறப்பதினால் மதிப்பு ஏதுமில்லை. சிவனின் திருவடியை அடைந்து முக்தியை அடைவதுதான் மேலான நிலை என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
மாணிக்கவாசகர் முக்கியமாக நமக்கு குறிப்பிடும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் பிறவியில் நாம் மனிதனாக பிறந்து இருந்தாலும், அடுத்த பிறவியில் நாம் மனிதனாக பிறப்போம் என்பது நிச்சயம் கிடையாதும். அசையும் அசையாப் பொருள்களாக அதாவது கல்லாக, மரமாக முள் செடியாக ஆடாக, மாடாக, பாம்பாக தேளாக கழுதையாக என்னவாக வேண்டுமானாலும் பிறக்கலாம். சம்பாதிக்கும் காலத்தில் நம்முடைய முதிய, தள்ளாத வயதில், அல்லது அவசர காலத்திற்கு தேவைப்படும் என்று நாம் பணத்தை பொருட்களை சேமிக்கிறோம். ஏனெனில் பணம் இல்லை என்றால் கஷ்டப்படுவோம் என்று அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். வாழ்க்கையில் பணம் இல்லாதவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால் இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு அவ்வுலக வாழ்க்கையில் என்னென்ன கஷ்டங்கள் வரும் என்பதை புராணங்களில் மட்டுமே படித்திருப்பதால் அதை நம்ப நம் மனம் வருகிறது. இதைத் தான் மாயை என்று புராணம் சொல்கிறது. பணம் இல்லாதவர்கள் படும் கஷ்டங்களை பார்த்துவிட்டு நாம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாம் செய்யும் செயல்கள், எண்ணும் எண்ணங்கள் நம்முடைய கர்மாக்கள் ஆக மாறி, நம்முடைய அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. போன ஜென்மத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்கு எப்படி தெரியும்? இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேட்பவர்கள் நிறைய பேர் உண்டு. ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் பொழுது அந்த நிறுவனத்தின் சட்டதிட்ட விதிகளை ஒத்துக் கொள்வதாக கையெழுத்திட்டு விட்டு தான் நாம் அந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்ய முடியும். அதுபோல தான் நம் மனித வாழ்க்கையும். மனித வாழ்க்கைக்கான கர்ம விதிகள் உண்டு. கர்ம விதிகளை மீறி இறைவன் ஆனாலும் சரி இயற்கையாலும் சரி எதையும் செய்ய இயலாது. இன்று நாம் செய்யும் அனைத்து நல்ல விஷயங்கள், தீய விஷயங்கள் அனைத்தும் கர்மாக்களாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவிலிருந்து யாருக்கும் விதி விலக்கு கிடையாது, கடவுளே என்றாலும் கர்மா பதிவிலிருந்து விதிவிலக்கு கிடையாது. அதற்கு எடுத்துக்காட்டாக ராமாயணம் இருக்கிறது. ராமன் சீதை அனுபவித்த துன்பங்கள் அனைத்திற்கும் கர்மாக்கள் தான் காரணம். அனைத்திற்கும் கர்மாதான் காரணம் என்று உணர நாம் இறைவனை உணர்ந்தால் தான் முடியும். “நான் படித்தேன், நான் சம்பாதிக்கிறேன், நான் தொழிலை சாமர்த்தியமாக செய்கிறேன், நான் மாமியார்” என நான் நான் நான் என்று நாம் மனதளவில் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கும் வரை நம்முள் இருக்கும் இறைவனை நம்மால் உணர முடியாது. ஒரு சிறு விதையிலிருந்து பெரிய மரத்தை கொண்டுவந்தது யார்? மனிதனா? ஒரு விந்துவில் இருந்து மனிதனை அல்லது விலங்குகளை உருவாக்கியது யார்? மனிதனா?நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை இயக்குவது யார்? மனிதனா? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நுணுக்கமான பாகங்களான மூளை சிறுநீரகம் கல்லீரல் என அனைத்தையும் உருவாக்கியது யார்? மனிதனா? நம் உடல் உறுப்புக்கள், மற்றும் உள்ளுறுப்புகள் செயல் இழந்து போனால் எவ்வாறு சரி செய்வது என்பதை நாம் அறிவியல் மூலம் கற்றுக் கொண்டதைத் தவிர நம் உடல் உறுப்புகளை, உள் உறுப்புகளை உருவாக்கியது நிச்சயமாக மனிதன் அல்ல. மனிதர்களாகிய நாம் உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் பொருட்களும் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியல் மூலம் புரிந்து கொண்டு அதன் மூலம் மனிதனால் எதையும் செய்ய முடியும் என்கிற மாயையை வளர்த்துக் கொள்கிறோம். இயங்குபவைகளை மட்டுமே நாம் புரிந்துகொள்ள ஓடிக்கொண்டிருப்பதால் நம்மை இயக்கும் ஒருவனை புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். வைரஸ்கள் நமக்கு அவ்வப்பொழுது நம்மை இயக்குபவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது அவன் சிறப்பாக வேலை செய்தால் படிப்படியாக முன்னேறி மேல் நிலைகளை அடையலாம். அந்த மனிதன் செய்யும் வேலைகள் சிறப்பாக இல்லாமல் போனால், அதே பொறுப்பிலேயே அவன் இருக்க நேரிடலாம் அல்லது அவனுடைய வேலைகள் சிறப்பாக இல்லாமல் இருந்தால் வேலை நீக்கம் செய்யப்படலாம். இது போலவே ஒவ்வொரு பிறவியிலும் மனிதன் அல்லது ஒவ்வொரு உயிரினங்களும் செய்யும் செயல்களைப் பொறுத்து அவர்களுடைய அடுத்த பிறவியில் இன்பத் துன்பங்கள் அமைகின்றன. எப்படி ஒரு நிறுவனத்தில் பிரமோஷன் கொடுத்து சம்பள உயர்வு கொடுக்கிறார்களோ அதுபோல நாம் நன்மைகளை ஒரு பிறவியில் செய்யும் பொழுது இறைவன் மகிழ்ந்து அடுத்த பிறவியில் நமக்கு வாழ்க்கை வசதிகளையும் இன்பங்களையும் கொடுக்கிறான் நாம் அது இறைவன் கொடுத்தது என்பதை மறந்துவிட்டு நான் உழைத்தேன் அதனால் எனக்கு கிடைத்தது என்று எண்ணிக் கொள்கிறோம். நம் கடமையை கண்டிப்பாக நாம் செய்யவேண்டும் ஆனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டும் என்பது இறைவனால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. இதை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய வகையில் சொல்ல வேண்டுமென்றால் பிறக்கும் போது குழந்தைகள் ஏன் சில குழந்தைகள் பணக்கார வீட்டிலும், சில குழந்தைகள் பாலுக்கே வழி இல்லாத ஏழைகள் வீட்டிலும், மற்றும் சில குழந்தைகள் பிறக்கும் போதே ஏன் சில பல குறைகளுடன் பிறக்கின்றனர்? இந்த கேள்விக்கு மனிதனால் பதில் சொல்ல இயலுமா? மனிதனால் எந்த குழந்தை எந்த வீட்டில் பிறக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியுமா அல்லது யார் எப்பொழுது இறக்க வேண்டும் என்பதை மனிதனால் சொல்ல இயலுமா? அல்லது இறந்தபின் பின் உயிர் எங்கு செல்கிறது என்பதை மனிதனால் திட்டவட்டமாக சொல்ல இயலுமா? இவற்றை எல்லாம் மனிதன் யோசித்து கர்மாக்களும் பிறவிகளும் நம்மை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை புரிந்து கொண்டு இறைவன் திருவடியில் மனதை செலுத்தி திரும்பவும் பிறவா வரம் வேண்டி துதிக்க வேண்டும்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment