Skip to main content

சிவபுராணம் வரிகள் 36 - 40 விளக்கம்


வெய்யாய்தணியாய்இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

வெய்யாய் - விரும்புதற்குரிய, தணியாய் - மனதின் வேகத்தை தணித்து, இயமானன்- ஆன்மா, அகக்கடவுள், ஆம் -தங்கியுள்ள, விமலா - மாசற்றவன், குற்றமற்றவன், தூயவன் பொய் - மாயை,  அகல - விலகுதல், நீங்குதல் ,  மெய்- உண்மை, ஞானம் - அறிவு, மெய்ச்சுடரே- கடவுளை ஒளியாய் வர்ணித்தல், எஞ்ஞானம் - எந்த ஒரு அறிவும், இல்லாதேன் - இல்லாத எனக்கு,  இன்பப் பெருமானேகம்= இ + அப்பெருமானே, இ என்றால் விளக்கமற்ற, தெளிவற்ற, குழப்பமான, நுண்மையாய் மறைந்திருக்கிற என்கிற பொருள். (In English, appear dark, gloomy or indistinct) அஞ்ஞானம் =  அந்த + ஞானம், தன்னை- இறைவன்,   அகல்விக்கும் - இருளை விலக்கி ஒளியேற்றும், நல் அறிவே - ஞானதீபம்

மனதின் வேகம் தணிக்கப்பட்டு, இறைவன் ஆன்மாவாய், அகக்கடவுளாய் தங்கி இருப்பதை உணர்ந்ததினால், தன் மனம் இப்பொழுது விரும்பக்கூடியதாய் இருக்கிறது என்று மாணிக்கவாசகர் சொல்வதாக பொருள் கொள்ளலாம். அதற்கு முன்பு தன் மனதில் எழுந்த தேவையற்ற எண்ணங்களினால் தன் மனம் விரும்பத்தகாததாக இருந்தது என்று மாணிக்கவாசகர் சொல்வதாக இங்கு பொருள் கொள்ளலாம். சிவன் வந்து ஆட்கொண்டதால், அருளியதால் மாயை என்னை விட்டு விலகி , அறியாமை நீங்கி, சிவனே ஒளியாய், ஞானமாய் தன்னுள் ஒளிர்வதாக மாணிக்கவாசகர் பாடுகிறார். சிவபுராணத்தில் 39-வது வரியான எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே என்கிற இந்த வரியில், இன்பப் பெருமானே என்கிற சொற்கள் இ + அப்பெருமானே என்று பிரிக்கப்பட வேண்டும். இ என்றால் விளக்கமற்ற, தெளிவற்ற, குழப்பமான, நுண்மையாய் மறைந்திருக்கிற என்கிற பொருள். (In English, appear dark, gloomy or indistinct) தனக்கு எந்த ஞானமும் இல்லாத 
பொழுது மாயை என்னும் இருள் மறைத்திருந்ததினால், 
தன் மனதில், நுண்மையாய் மறைந்திருக்கிற அப்பெருமானை காணமுடிய வில்லை என்று குறிப்பிடுகிறார். அதற்கு அடுத்த வரியியை நாம் கவனித்தோம் என்றால், “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே” என்று சொல்கிறார்.  அந்த ஞானமாக இறைவன் வந்த பொழுது, அதாவது இறைவனை உணரும் ஞானம் பெற்ற பொழுது,  மாயை என்னும் இருள் விலகி  ஞான தீபமாக ஒளிர்ந்த இறைவனை உணர முடிந்தது என்று பொருள்படும்படி மாணிக்கவாசகர் 
பாடுகிறார். அதாவது இறைவன் எப்பொழுதும், ஒளியாக நம்முடைய ஆன்மாவில் இருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அதை பார்க்க இயலாதவாறு நம் கண்ணை மாயை என்கிற இருள் அல்லது அறியாமை என்கிற இருள் மறைக்கிறது. இன்றைய காலத்தில் , நமக்கு புரியும் படி இதை சொல்ல வேண்டுமென்றால், நாம் சாவியையோ அல்லது போன் போன்றவற்றை எங்கோ வைத்துவிட்டு தேடுவோம். அந்தப் பொருள், பெரும்பாலும் நம் கண்முன்னே இருக்கும் ஆனால் பதட்டத்தில், அவசரத்தில் தமக்கு தெரியாது. அப்புறம் அம்மா அல்லது வேறு யாரோ வந்து இங்க தான கண்ணு முன்னாடி இருக்குதுஅல்லது, தெரியலையா? என்று சொல்வார்கள். அப்போதுதான் தெரியும், அட நம்ம கண்முன்னாலேயே இருந்திருக்கு நமக்கு அது தெரியலையே என்று? அதுபோல் இறைவன்  நம்முள் ஆன்மாவாக எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறான், ஆனால் நம்முடைய நோக்கம் கல்வி , தொழில், பணம் என்று  பலவற்றை நோக்கியே ஓடிக் கொண்டிருப்பதால் நமக்குள் உள்ளே இருக்கும் இறைவனை நாம் உணர்வது இல்லை. அவ்வாறு உணரும் நேரம் வரும் பொழுது, அப்பொழுது கிடைக்கக்கூடிய உணரக்கூடிய மாற்றம் மிக அற்புதமான மாற்றமாக இருக்கும். அதை மற்றவர்கள் உணர முடியாது அவர்கள் மட்டுமே உணர முடியும் . அப்படி உணரும் பொழுது மனதில் தேவையற்ற எண்ணங்கள் குறைந்து இருப்பதை உணரலாம், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் என்கிற அடியின் பொருளை உணரலாம். வெய்யாய், தணியாய், ஆட்கொண்டஇயமானனாம் விமலா என்கிற வரியின் பொருளை உணர முடியும். நேற்றைய பதிவில் சொல்லி இருந்தார் போல் பிரார்த்தனைப் பத்து பதிகத்தின் முதல் பாடல் விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

கலந்து நின்னடியா ரோடன்று
    வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
    புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
    உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
    ஆர்வங் கூர அடியேற்கே 

உன் அடியாரின் ஒருவராய் கலந்து மகிழ்ந்து இருந்தேன், அந்த காலம் முடிந்து, இப்பொழுது இருக்கும் காலத்தில் வருத்தமும் வேதனையும் தவிப்பும்தான். அந்த தவிப்பை நான் காய்ந்து போலானேன் இறைவனே, “உலவா இன்பச் சுடர்காண்பான்” என்கிற வரியில், உலவா என்பது என்றும் மங்காத ஒளி என்று பொருள். இன்பச் சுடர் என்பது  இ + அச்சுடர் என்று பிரிக்கப்பட வேண்டும். இ என்றால் விளக்கமற்ற, தெளிவற்ற, குழப்பமான, நுண்மையாய் மறைந்திருக்கிற என்கிற பொருள். (In English, appear Dark, gloomy or indistinct).  காண்பான் என்பது, எப்பொழுது உன்னை காண்பேனோ என்கிற பொருளில் வருகிறது. பான் என்பது தமிழ் இலக்கணத்தில் வினையெச்ச விகுதி என்று சொல்வார்கள். மங்காத ஒளியாக இறைவன் இருந்தாலும், மாயை எனும் இருள் மறைப்பதினால், உன்னை காணாது தவிக்கின்றேன் என்கிற பொருள்படுமாறு மாணிக்கவாசகர் பாடுகிறார். அலந்து போனேன் என்றால் மனம் தடுமாறி தவிக்கிறேன் என்று பொருள். அதாவது மாணிக்கவாசகர் இறைவன் தன்னை ஆட்கொண்ட பிறகு அவருடன் சென்று விட வேண்டும் என்று துடித்தார் ஆனால் இறைவன் அவரை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. அந்த தவிப்பில் பாடிய பாடல்கள் இவை.  இந்த மண்ணுலகில் பக்தியோடு, உன்னைக் காணாமல், மனம் தடுமாறி நிற்கிறேன் உடனடியாக என் மீது கருணை காட்டு என்று பொருள்படுமாறு மாணிக்கவாசகர் பாடுகிறார்.

நான் நேற்றைய தினம் பதிவிட்டு இருந்ததுபோல், இந்த இரண்டு பாடல்களில் வரும் இன்பச்சுடர் மற்றும் இன்பப் பெருமானே இரண்டிற்கும் பொருளை உணர்த்தியவர் இறைவன் மட்டுமே. எனக்கு திருவாசகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. திருவாசகம் விளக்கத்தை எழுதச்சொல்லி இறைவன் பணித்தார், அவருடைய வழிகாட்டுதலுடன், தமிழ் அகராதி  உதவியோடும், எழுத ஆரம்பித்திருக்கிறேன். நான் தமிழில் புலமை ஏதும் பெற்றவர் அல்ல. இறைவனின் வழிகாட்டுதலை யார் வேண்டுமானாலும் உணர முடியும். அதற்கு தேவை, இறைவனிடம் உண்மையான அன்பு செலுத்துவது. தேவையற்ற எண்ணங்களை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு நாம ஜெபம் செய்வதும், பாராயணம் செய்வதும், ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் மானசீகமாக இறைவனுக்கு கொடுத்துவிட்டு சாப்பிடுவதும், இறைவனிடம் அன்பு செலுத்துவதற்கு உரிய மிக எளிய வழிகளாகும். இறைவனிடம் உண்மையான அன்பை செலுத்துவோம் இறைவனை உணர்வோம் நம்மை இணைந்து பாராயணம் செய்ய வைத்துக்கொண்டிருக்கிறார் இறைவனின் திருப்பாதங்களை போற்றி வணங்குவோம்.

 ஒரு பணிவான தாழ்மையான வேண்டுகோள்.   ராக்கினார்கோட்டை , கோட்டைக்காடு (தேவகோட்டை பக்கத்தில்) என்கிற இடத்தில் மிகப்பழமையான சிவலிங்கம் கோயில் இன்றி இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு கூடிய சீக்கிரம் கோயில் எழும்பவும், அதற்கு கும்பாபிஷேகம் நடக்கவும்  அனைவரும் பிரார்த்தனை செய்து, அதற்காக  இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை ஒரு முறை பாராயணம் செய்யவும்.

 மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். *தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* 

*தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்*
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...