ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
ஆக்கம் - தோற்றம், அளவு - வரையறை இறுதி - இறப்பு, முடிவு, இல் - இல்லாதவன் , அனைத்து உலகும் - எல்லா உலகு, ஆக்குவாய் - படைத்தல், காப்பாய் - காத்தல், அழிப்பாய் - அழித்தல்,
அருள் - கருணை, போக்கு - புகல், தஞ்சம், புகுவிப்பாய்- உட்படுத்தல், தொழும்பு- கடவுள் திருப்பணி, நாற்றம் -தோன்றுதல் , நேரி - அணுவாய், சேயாய்- கடவுள் நணியான் - அருகிலிருப்பவன், மாற்றம் - உருமாற்றம்,மனம் - ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, கழிய -தேவையில்லாதவைகளை நீக்குதல் , மறையோன் -ஒளிந்து இருப்பவன், மறைந்து இருப்பவன்
நம்முடைய இறைவன் சிவன், தோற்றமும், முடிவும், எந்த ஒரு வரையறையும் இல்லாதவன் என்றும், அனைத்து உலகங்களையும் ஆக்குபவன், அழிப்பவன், காப்பவன் என்றும், அவன் தன் மேல் கருணை காட்டி, தஞ்சமளித்து, இறை பணிக்கு உட்படுத்தினான் என்றும், ஆன்மாவினுள் அணுவாய் மறைந்திருக்கும் இறைவன், நம் மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்களை நீக்கும் பொழுது, மனதில் மாற்றம் ஏற்படும் பொழுது, தோன்றுவான் என்றும் மாணிக்கவாசகர் மிக அழகாக அற்புதமாக இங்கே சொல்லியிருக்கிறார். இறைவன் நம் மனதில் ஆன்மாவாய் ஒளிந்திருக்கிறான் என்று சிவபுராணத்தில் திரும்பத் திரும்ப மாணிக்கவாசகர் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். மேற்கண்ட வரிகளில் அதுவும் குறிப்பிட்டு மிகத்தெளிவாக “ மாற்றம் மனம் கழிய” என்று இறைவனை உணரக்கூடிய ரகசியத்தை சொல்லி விட்டார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று நிறைய பேர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதை எத்தனை பேர் உணர்ந்திருப்போம். மொத்தம் 12 திருமுறை இருக்கிறது ஆனால் எட்டாம் திருமுறையாக திருவாசகத்திற்கு மட்டும் ஏன் மனது உருக வேண்டும்? அதில் என்ன அப்படி இருக்கிறது? ஏற்கனவே நம் பதிவில் பதிவிட்டு இருந்தபடி, திருவாசகம் தன்மை ஒருமையில்( First Person singular) எழுதப்பட்டிருக்கிறது. எனவே கண்டிப்பாக ஏதோ சில வரிகள் படிக்கும்பொழுது நமக்காகவே சொல்லப்பட்டது போல் அந்த வரிகளை உணர, நம் கண்ணில் கண்ணீர் பெருகும். நான் முதன் முறை திருவாசகம் பாராயணம் செய்த பொழுது எனக்கு திருவாசகம் குறித்து ஒன்றும் தெரியாது. புரிகிறதோ இல்லையோ படிப்போம் என்று பாராயணம் செய்தேன். “யானேபொய் என்நெஞ்சும் பொய், என்அன்பும் பொய்” என்கிற வரிகளை படித்தவுடன், என் மனதில் மாணிக்கவாசகரே, அவருடைய அன்பு பொய் என்று சொல்கிறார், நாமெல்லாம், எம்மாத்திரம் என்று நினைத்தவுடன் மிகவும் கஷ்டமாக இருந்தது, கண்ணில் கண்ணீர் பெருகி விட்டது. யாராவது நம்மிடம் வந்து நாம் நம் குழந்தையின் மேல் வைத்திருக்கும் அன்பு பொய் என்று சொன்னால் எப்படி கோபம் வரும்? எப்படி வலிக்கும்? அதுபோல் முதன்முதலில் அந்த வரிகளைப் படித்த போது மனது வலித்தது. என்னால் அந்த வரிகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இன்றும் அந்த வரிகளைப் படிக்கும் போது கண்கள் கலங்கும். நமக்கு வேண்டியவராக, நம்மில் ஒருவராக, நாம் இறைவனை பார்க்கும் பொழுது, நாம் அன்பு செலுத்தும் பொழுது, இறைவன் நம்மிடத்தில் காட்டும் அன்பை பலவிதங்களில் உணரமுடிகிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளி, பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் ஆகாயத்திற்கு (Space) சென்று சேர்கிறது. இது மறுக்க முடியாத அறிவியல் உண்மை. அதுபோல் இறைவனிடம் நாம் அன்பு செலுத்தும் பொழுது, அது பிரதிபலிக்கப்படுகிறது. அவருடைய அன்பை உணர கூடிய சூழ்நிலை நமக்கு கண்டிப்பாக அமைகிறது. “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” வரியில் மாணிக்கவாசகர் சொல்லி இருப்பது போல் தேவையில்லாத எண்ணங்களை நீக்க , நாம் நமக்கு பிடித்த மந்திரத்தை அல்லது ஸ்லோகத்தை அல்லது பிடித்த பாராயணத்தை செய்யும் பொழுது நம்முடைய மனம் தேவையில்லாத எண்ண சூழலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கின்றது. இதுபோன்ற பாராயண குழுக்கள், மற்றும் நம்மைப்போல் இறைவனிடம் பக்தி கொண்டவர்களிடம் பழகும்பொழுது, அடுப்பில் உள்ள தோசைக்கல் சூடாக இருக்கும் பொழுது, எப்படி தோசை கரண்டியை வைத்தால், எப்படி அதுவும் சூடாகுமோ, அதுபோல் அடியவர்களுடன் இருக்கும் பொழுது, அந்த அடியவர்கள் இறைவன் மேல் காட்டும் அன்பினால், அந்த அன்பு பிரதிபலிக்கப்படுகிறது. அடியவர்களுடன் இருப்பதினால், நம் மேலும்
பிரதிபலிக்கப்பட்டு, நாமும் பயன் அடைகிறோம். நம் அனைவரையும் இணைத்து பாராயணம் செய்து வைத்துக் கொண்டிருக்கிற இறைவனின் திருப்பாதங்களை வணங்கி, அவருடைய அன்பை உணர்வதற்கு மாணிக்கவாசகர் மூலம், திருவாசகம் மூலம் வழிகாட்டிக் கொண்டிருக்கும் அவருடைய கருணையை போற்றி வணங்குவோம், இறைவனை உணர்வோம்!
*ஒரு பணிவான தாழ்மையான வேண்டுகோள். *ராக்கினார்கோட்டை , கோட்டைக்காடு (தேவகோட்டை பக்கத்தில்) என்கிற இடத்தில் மிகப்பழமையான சிவலிங்கம் கோயில் இன்றி இருக்கிறது. அங்கே தண்ணீருக்காக இப்பொழுது, போர் போடப்பட்டு கொண்டிருக்கிறது ஆனால் ஆழம் இறங்க இறங்க, வெறும் பாறைகளாக இருக்கிறது. எனவே அனைவரும் அங்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள் அங்கே தண்ணீர் கிடைத்து விட்டால், வரும் சனிக்கிழமை சனிப்பிரதோஷம் அன்று, அந்த தண்ணீர் கொண்டு அங்கே பூஜை செய்ய வேண்டும் என்று ஒரு அடியவர் மிகவும் விரும்புகிறார். 17 வருடங்களாக அங்கு இருக்கும் நாகலிங்கேஸ்வரருக்கு கோவில் கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நாளைக்கும் அங்கு தண்ணீர் கிடைத்த விடவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து, அதற்காக இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை ஒரு முறை பாராயணம் செய்யவும்.*
மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். *தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*
*தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்*
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment