Skip to main content

சிவபுராணம் வரிகள் 46 - 50 விளக்கம்


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான்



கறந்த - வேறு கலப்பின்றித் தூய்மையாய், பால் - ஆன்மா, கன்னல் - ஊன், உடம்பு, நெய் - அன்பு,  சிறந்த - மேன்மை ஆக்குதல், உயர்நிலை பெற செய்தல், அடியார் - அடியவர், சிந்தனை - மீண்டும்மீண்டும் நினைத்தல், தேன் - இனிமையான,  ஊறி - இடைவிடாது சொரிதல்,சுரத்தல்;  நின்று - எப்பொழுதும் நம் பக்கத்திலிருந்து, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - பிறவித் தளையிலிருந்து விடுவிக்கும் நம்பெருமான், நிறங்கள் - குணம், தன்மை;  ஐந்து - பஞ்ச; உடை-  வெளிப்படுத்துதல், விண்ணோர்கள்  - தேவர்கள், ஏத்த - தொழுதல், மறைந்திருந்தாய்,- ஒளிந்து இருத்தல்,



கறந்த பாலில் சர்க்கரை சேர்த்து, நெய் சேர்த்து ( பால்கோவா) செய்தால் எவ்வளவு இனிமையாக இருக்குமோ, அதுபோல நம் உடலுக்குள், கலப்பின்றித் தூய்மையாய் இருக்கும் ஆன்மாவாகிய இறைவனை உணர்ந்து, அவனிடம் அன்பு செலுத்தும் அடியவரை, மேன்மையாக்கி, உயர்நிலையை அடைய செய்து, அடியவரின் சிந்தனையுள், இனிமையான திரவமாய், இறைவன் ஊற்று போல் சுரந்துகொண்டே இருப்பார் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். சிவபுராணத்தின் பதினாறாம் வரியான, “ஆராத இன்பம் அருளும் மலை போற்றிஎன்கிற வரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. திருமந்திரத்தின் 695வது பாடலும் தலையில் வரும் அமிர்தத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. சகஸ்ரதளத்தில் அமிர்தம் வருவது, தலை உச்சியில் இருந்து  ஊற்று வ்ருவது போல இருக்கும். தலை உச்சியில் இருந்து ஒரு இனிமையான திரவம் சுரப்பது என்பது சத்தியமான ஒரு உண்மை. இதனை என் அனுபவத்தில் எழுதுகிறேன். இந்த நிலையில் கிடைக்கும் ஆனந்தததை விளக்குவதற்கு வார்த்தைகள் என்பது கிடையாது.  அன்பே சிவம் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அன்பாகவே இறைவன் இருப்பதினால் அவருடைய தலையில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமிர்தத்தை நாம் கங்கை என்று உருவகமாக சொல்கிறோம் என்றும் சொல்லலாம். தலையில் இருந்து அமிர்தம் வருவது யோகநிலை யாளர்களுக்கு மட்டுமே என்று பலர் சொல்லுவார்கள், ஆனால் இங்கு மாணிக்கவாசகர் மிக எளிமையாக, மிக அழகாக அனைத்து அடியவர்களும் இந்த நிலையைப் பெற முடியும். அதற்கு தேவை இறைவனிடம் முழுமையான அன்பு செலுத்துவது ஒன்று மட்டுமே என்பதை, “ கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்என்கிற வரியின் மூலம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். திருமந்திரத்தில் நிறைய விஷயங்கள், மிக அழகாக, நாலு வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் அன்பே சிவம் என்பது பற்றி சொல்லப்பட்டிருக்கிற ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

நம் உடலில் ஆன்மாவாக இருக்கும் இறைவனை உணர்ந்து, நாம் அன்பு செலுத்தும் பொழுது, நம் மனதில் மட்டுமல்ல, நம் வாழ்வில், நம்மை சுற்றி இருக்கும் சூழலில் ஒரு அற்புதமான மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணரமுடியும். அந்த அன்பை உணரும் பொழுது, கண்டிப்பாக நமது பிறவித்தளை அறுபடும் என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார். நிறங்கள் என்கிற வார்த்தைக்கு பொருள் குணம் அல்லது தன்மை. இங்கே மாணிக்கவாசகர், நம்முடைய இறைவன் சிவன் பஞ்சபூத  தன்மையாய் இருக்கிறார் என்பதைநிறங்கள் ஓர் ஐந்து உடையாய்என்று சொல்கிறார்.  பஞ்சபூதங்கள் வேறு அல்ல, இறைவன் வேறு அல்ல என்பதை நமசிவாய வாழ்க என்கிற வரிக்கு விளக்கமாக ஒரு வீடியோ பதிவு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது . புதிதாக வந்துள்ள அடியவர்களுக்காக, அந்த லிங்க், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  தேவர்கள் துதிப்பதற்கு கூட தன்னை காட்டாமல் மறைந்து நிற்கும் இறைவன், நம் மேல் கருணை கொண்டு நம் அருகில், ஆன்மாவாய் இருக்கிறான் என்பதை சிவபுராணத்தில் பல்வேறு இடங்களில் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் ஆன்மாவாய் இருக்கிறான், தேவையில்லாத எண்ணங்களை நீக்கும் பொழுது, இறைவனிடம் அன்பு செலுத்தும் பொழுது, ஆன்மாவாக இருக்கும் இறைவனை உணர முடியும் என்று மாணிக்கவாசகர் திரும்ப திரும்ப சிவபுராணத்தில் வலியுறுத்தி இருக்கிறார். இதை எழுதும் பொழுதும், சொல்லும் பொழுதும் மிக எளிமையாக இருந்தாலும், நம்மால் ஏன் இதனை செய்ய முடியவில்லை என்று யோசித்தால், ஒரு விஷயம் மிகவும் பூதாகரமாக தெரிகிறது. நம்மில் பெரும்பாலானோர், நம்மை சுற்றியுள்ளவர்கள்,  நம்முடைய உறவினர்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்களோ, அதைவிட ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டும் என்பதே, நம் வாழ்க்கை நோக்கமாக இருக்கிறது. அவர்கள் என்ன கார் வைத்திருக்கிறார்கள், எப்படிப்பட்ட வீடு வைத்திருக்கிறார்கள், எந்த பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது எல்லாம் நம்முடைய கண்களுக்குத் தெரிகிறது, உணரமுடிகிறது. எனவே அதுவே நம் நோக்கம் ஆகிவிடுகிறது. நம்மை சுற்றியுள்ளவர்களின் வெளியே தெரியும் வாழ்க்கை, நம்மை கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது.  அவர்களின் வாழ்க்கையில் உள்ளே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அப்படி தெரிந்தால் மற்றவர்களைப் போல் நாம் இருக்கவேண்டும், வாழ வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக நம்மில் பலருக்கு இருக்காது. இன்று நம்மில் பல பேர் ஆன்மீக வாழ்க்கையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாம் தியான முறைகளை கற்றுக்கொள்கிறோம், இன்னும் பல வகுப்புகள் செல்கிறோம் நிறைய முயற்சிகள் எடுக்கிறோம். அதுவுமே மற்றவர்கள் செய்கிறார்கள் என்றுதான் நாமும் ஆரம்பிக்கிறோம், இருந்தும் நம்மால் ஒரு நிலைக்கு மேல் செல்ல இயலவில்லை. மாணிக்கவாசகர், திருவாசகம் மூலம் நமக்கு  சொல்லியிருக்கும் மிக மிக எளிய வழியை முயற்சி செய்து பார்ப்போம். அந்த எளிமையான வழி இறைவனிடம் அன்பு செலுத்துவது. இறைவனிடம் அன்பு செலுத்துவது என்றால் மணிக்கணக்காக பூஜைகள் செய்வது அல்ல. இதைப்படிக்கும் இன்றைய தினம், ஒரு சிறிய சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். இந்த சங்கல்பம் மிகவும் கடினமானது அல்ல. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் இறைவனை நினைக்காமல், இறைவனுக்கு நன்றி சொல்லாமல், மானசீகமாக இறைவனுக்கு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்று சங்கல்பம் வைத்து, அதை மறக்காமல் கடைபிடித்து வருவோம். இந்த ஒரு சிறிய விஷயம் நம் வாழ்வில் மிகப்பெரிய பல மாற்றங்களை ஏற்படுத்தும். நம் ஆன்மாவில் ஒளிந்திருக்கும் இறைவனை, இந்த சிறிய விஷயம் வெளியே வர செய்யும். நாம் மட்டுமல்ல, நம் குழந்தைகளுக்கும் இந்த ஒரு சிறிய விஷயத்தை ஆனால் மிக மகத்தான ஒரு விஷயத்தை, நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.  இந்த ஒரு சிறிய விஷயம், நம் வாழ்வில் பல விஷயங்களில் இறைவன் நமக்கு வழிகாட்டுவதை, புரிந்துகொள்ளும் ஒரு ஆரம்பமாக இருக்கும்.இந்த விஷயத்தை நாம் செய்து பார்த்தால் மட்டுமே, நம் அனுபவத்தில் மட்டுமே, உணர முடியும். இந்த சங்கல்பத்தை எடுத்துக் கொள்பவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை கண்டிப்பாக  ஏதாவது ஒரு குழு பொறுப்பாளருக்கு அனுப்பி வைக்கவும். பஞ்சபூதங்களாக இருக்கும் சிவனை கீழ்வருமாறு வணங்கி போற்றி துதிப்போம்.  தண்ணீரை வீணாக்காமல் இருப்பது, கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருப்பது, அவ்வாறு வேறு யாரேனும் கொட்டி இருந்தாலும் அதை சுத்தப்படுத்துவது, மரம் செடி கொடிகளை வளர்ப்பதன் மூலம் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது, வீட்டில் விளக்கேற்றி அக்னியை வணங்குவது, தினமும் சூரியனை வணங்குவதன் மூலம் அனைத்து பஞ்சபூதங்களையும் வணங்குவது (இதுகுறித்து நமசிவாய வாழ்க என்ற வரிக்கு விளக்கம் கொடுத்து உள்ள வீடியோவில் உள்ளது) என்று பஞ்சபூதங்களால் இருக்கும் சிவனை வணங்கி போற்றி துதிப்போம்! இறைவனை உணர்வோம்!



நேற்று கோட்டைக்காடு என்கிற இடத்தில் உள்ள நாகலிங்கேஸ்வரருக்கு, கோவில் கட்டுவதற்கு முதல் படியாக, தண்ணீருக்கு ஃபோர் போடப்பட்டது . அங்கு வெறும் பாறையாக இருக்கிறது என்பதினால், நேற்று பிரார்த்தனை செய்யச் சொல்லி அனைவரையும் கேட்டிருந்தோம். பிரார்த்தனை செய்த அனைத்து அடியவர்களுக்கும் மிகவும் நன்றி. இன்று அந்த இடத்தில் தண்ணீர் கிடைத்துவிட்டது. அடுத்த கட்டமாக கோவில் கட்டும் வேலையும் எந்தவித தடையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து அடுத்த ஒரு வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அனைவரும் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்வோம்.

மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். *தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* 

*தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்*
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...