Skip to main content

சிவபுராணம் வரிகள் 50 - 55 விளக்கம்



ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம் . *சிவபுராண விளக்கம்*
வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

வல்வினையேன் - எண்ணற்ற வினைகளை உடையவன்,  தன்னை - இறைவன்,
மறைந்திட - ஒளிந்திருக்க, மூடிய - காரணமான, மாய இருள் -  மாயப்பிறப்பு
அறம் - செயல், பாவம் - எண்ணங்கள்,  என்னும் - சகலரும், அரும் - கடுமையான, கடினமான, 
கயிறு - நங்கூர கம்பி வடம், கட்டி - பிணைத்து, புறம்தோல் - வெளியே தெரியாவண்ணம், வெளியே தோல் கொண்டு ,  போர்த்து - மறைத்து அடக்கிக்கொள்ளுதல், புழு - கிருமி, 
அழுக்கு - மாசு , மலம் - ஆணவம், போன்ற மும்மலம், சோர் - வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுதல், குடில் - குடிசை, வீடு (இங்கு நம் உயிர் ஆன்மா குடி கொண்டிருக்கும் உடலை குறிக்கிறது),  மலங்கப் - குழப்பம், புலன் ஐந்தும் - நம் ஐந்து புலன்கள், வஞ்சனை- ஏமாற்றுதல்
,
எண்ணற்ற வினைகளை உடையவர்களான நம் உள்ளே, இறைவன் ஒளிந்திருக்க காரணமான மாயப்பிறப்பு, சகலரையும் அதாவது அனைவரையும், எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற கடினமான நங்கூர கம்பி வடம் கொண்டு பிணைத்திருக்கிறது என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். நங்கூர கம்பி வடம் என்பது  மிகப் பொருத்தமான வார்த்தை. ஏனெனில் பிறவி என்னும் பெருங்கடலை கடக்க விடாமல், நம்முடைய செயல்களும் எண்ணங்களும் நங்கூர கம்பி வடம் போன்று பிணைந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் பிறவி என்னும் பெருங்கடலை கடந்து,  நமக்காக காத்திருக்கும் இறைவனை அடைய முடியும். “சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றிஎன்கிற வரியில் இந்தக் கருத்தையே மறைமுகமாக மாணிக்கவாசகர் வலியுறுத்தியிருந்தார். சீர் - நற்பேறு, ஆர் - அரிய , பூரணமான, பெருந்துறை - கப்பல் நிறுத்துமிடம், இறங்குமிடம்.  கடலில் செல்லும் கப்பல்கள் அடையவேண்டிய இடத்தை  அடைந்தவுடன், கப்பல் நிறுத்த துறைமுகம் தேவைப்படுவது போல, ஆன்மாக்கள் நற்பேறு கிடைத்து, பூரணத்துவம் அடைந்து தன்னை வந்து சேரும் இடமாக துறைமுகமாக, நம்மைப் பாதுகாக்கும் தேவனாக இறைவன் இருக்கிறான் என்று ஏற்கனவே பார்த்தோம். இறைவன் அன்பாய் பொறுமையாய், கருணை உள்ளவனாய், தன் குழந்தைகளான ஆன்மாக்கள் எப்பொழுது தன்னை வந்து சேரும் என்று ஆவலுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள தாயாய், தந்தையாய் காத்திருக்கிறான். அத்தகைய அன்பு மிக்கவன், நம்முடைய சிவன். சிவனுடைய அந்த அன்பை உணரும் பொழுது, வேண்டுதல் அனைத்தும் மறைந்து, அன்பு இவ்வளவு ஆனந்தம் தருமா ?இவ்வளவு அமைதி தருமா? என்கிற நிலை ஆன்மாக்களுக்கு ஏற்படும்.

 ஒன்பது வாசல்களை (செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று) கொண்ட நமது உடல்,  தோல் மற்றும், அழுக்கு , கிருமிகள் இவற்றால் மட்டும் மூடி இல்லாமல், நான் என்கிற ஆணவம், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுதல் போன்ற மாயை இருளாலும்  மூடியிருக்கிறது. நமது புலன்கள் ஐந்தும் குழம்பி, நம்மை ஏமாற்றுகிறது என மணிக்கவாசகர் இங்கே குறிப்பிடுகிறார். நம்மை நாம், அகமென்றும், புறமென்றும் பிரித்துக்கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் புறத்தின் வழியே, அதாவது புலன்களின் வழியே மட்டும் செல்வதால் தான், நம்மால், நம்முள் இருக்கும் இறைவனை உணர முடிவதில்லை.  மனிதர்களாகிய நமக்கு குடும்பம், கடமைகள் போன்றவைகள் இருக்கின்றன. அவைகளை சரிவர செய்வதற்கு, கண்டிப்பாக நாம் புலன்களை உபயோகப்படுத்த வேண்டும். குடும்பம் மற்றும் அலுவலகம் போன்றவற்றில் நம் பணிகளை ஒழுங்காக செய்ய அல்லது நாம் மற்றவர்களை தலைமை ஏற்று நடத்திச் செல்ல, கண்டிப்பு, கோபம் போன்றவற்றை சரியான அளவில் உபயோகப்படுத்தலாம். ஆனால் அந்த கோபம் அகத்திலிருந்து வருதல் கூடாது. சினிமாவில் நடிப்பவர்கள், அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்ப, அந்த நேரத்தில் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு, கோபப்பட்டு என்று பல்வேறு வேடங்களை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப அந்த நிமிடம் நடித்துவிட்டு, பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். அதுபோல் நாமும், நம் வாழ்வில், அந்தந்த இடங்களுக்கு ஏற்றாற்போல், பாத்திரங்களை செய்துவிட்டு பிறகு இயல்பாக விட வேண்டும். கோபத்தையும், வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் உள்வாங்குதல் கூடாது. நம் அகத்தில் ஆன்மாவாய் இறைவன் குடியிருக்கிறான். எனவே, அங்கு தேவையில்லாத கோபங்கள், எண்ணங்கள், பொறாமை, பழிதீர்க்கும் எண்ணம் போன்றவைகளை வைத்தல் கூடாது. கண்டிப்பாக அந்த குப்பைகளை மனதில் சேர்த்து வைத்தல் கூடாது.  ஆன்மீகத்தில்,  அடிக்கடிமௌனமாய் இருஎன்று கேள்விப்பட்டிருப்போம். மௌனம் என்பது நம் அகத்துக்காக சொல்லப்பட்டது. அதாவது தேவையற்ற எண்ணங்கள்,  நம் மனதில் தோன்றும் பொழுது பலவற்றை நினைத்து, உள்ளுக்குள் மறுகுவோம், உள்ளுக்குள் மனது வெம்பி தவிக்கும், பலவாறு புலம்பும். அப்படி இல்லை எனில் பழைய நினைவுகளை நல்லது, கெட்டது இரண்டுவிதமான நினைவுகளையும் அசை போடுவோம். அது தான் மனதின் இயல்பு. இதைத்தான் மாணிக்கவாசகர், “அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிஎன்று சொல்கிறார். மனதின் எண்ணங்களை அமைதிப்படுத்தி, தேவையற்ற எண்ணங்கள் எழும் பொழுது அதை உணர்ந்து, அந்த நேரத்தில் பாராயணம் மற்றும் நாம ஜபம் செய்ய வேண்டும். இதுதான் மௌனமாக இருப்பதற்கு அர்த்தம். அகத்திற்குள் இந்த மௌனம் வரும் பொழுது, நமக்கு இறைவனிடம் வேண்டுவது கூட நின்றுவிடும். ஏனெனில் நாம் இறைவனை உணரும் பொழுது, அவன் நம்மை அன்புடன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான், வழி நடத்திக் கொண்டிருக்கிறான் என்கிற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை ஏற்படும். உள்ளுக்குள் இறைவனை உணர்ந்த பிறகு, அவன் அங்கே இருக்கிறான் என்பதால் அவனுடைய நாமம் அல்லது மந்திர ஜெபம், மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதுதான் நம்மையும் அவனையும் பிணைக்கும் அன்பாக மாறும்.   கீழே உள்ள கந்தகுரு கவச வரிகள், மேலே சொல்லியிருக்கும் விஷயத்தை, மிக அற்புதமாக அழகாக சொல்லி இருக்கிறது.கந்தகுரு கவசத்தில் ஒவ்வொரு வரிகளையும் ஊன்றி கவனித்தால், பலவிதமான விஷயங்கள் மிக அழகாக மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200


“சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான், அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே, அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்” இவைகள் மிக சத்தியமான வரிகள். குரு வேண்டும் என்று நினைப்பவர்கள் கந்த குரு கவசத்தை குரு வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஜெபித்து வாருங்கள் கண்டிப்பாக நம்முடைய வாழ்வில் குரு கிடைப்பார்.
இறைவனை உணர நமக்கு தியானம் தேவையில்லை . நாம் செய்யும் பாராயணம் மற்றும் நாமஜபம் நமக்கு இறைவனை உணர்த்தும். திரு பாலகுமாரன் அவர்கள் சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியதங்கக்கைஎன்கிற புத்தகத்தையும், அக்கல்கோட் மகராஜ் அவர்களின் சரித்திரத்தையும் படித்துப்பாருங்கள். மந்திர ஜபம் குறித்து, அவ்வாறு செய்வதினால் கண்டிப்பாக இறைவனை பார்க்க முடியும் என்பது குறித்து, இந்த இரண்டு புத்தகத்திலும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகம், கந்தகுருகவசம், மகான்களின் சரித்திரங்கள் ஆகிய அனைத்தும் இறைவனை உணர்வதற்கு மிக எளிய முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் நாம ஜெபம், மற்றும் பாராயணம். இன்றைக்கு நம்மைத் தாக்கும் வைரஸ் ஒரு துன்பமாக இருந்தாலும் இந்த வைரஸினால்தான், நாம் இன்று பாராயணம் செய்கிறோம், இவ்வாறு செய்யும் பாராயணம் இறைவனை உணர்வதற்கு உரிய மிக எளிய வழி. சிவபுராணம் பாராயணம் செய்யும் அடியவர்கள், திருவாசகம் பாராயணம் செய்யும் அடியவர்கள் பலர்,  தங்களுக்கு இந்தப் பாராயணம் மிக உதவியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதை பாராயணம் செய்யும் அனைத்து அடியவர்களும் ஏதோ ஒரு விதத்தில் உணர்ந்திருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கருணை காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கும் அந்த அன்புடைய இறைவன் பாதங்களை போற்றி வணங்குவோம்! இறைவனை உணர்வோம்!
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...