கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
கர - முழுமையற்றவர்கள்,வினையை கழிக்காதவர்கள் கரப்பவை - மறைத்து, கரு - உயிரியாக, தா - தாய்,
கருத்து - வடிவமைப்பு, உருவாக்கப்பட்ட வடிவம், திரு - கருவளம்,
தகு- சாத்தியமான, உள்ளடக்கிய, கடவுள் - உள்ளே நுழைத்து
முழுமையற்றவர்களை அதாவது வினையைக் முழுமையாக கழிக்காதவர்களை, தாயின் வயிற்றில் கருவாக உள்ளே நுழைத்து, மறைத்து பாதுகாத்து பின் உயிரியாக அதாவது வடிவமைக்கப்பட்ட உருவமாக இறைவன் பிறக்க வைக்கிறார் என்று மாணிக்கவாசகர் மேற்கண்ட வரிகளில் குறிப்பிடுகிறார்.
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அறு - முடித்து, அறுத்து, வகை - முன்வினை, சமயம் - மன ஒருமைப்பாடு, மாறுபாடில்லாமை, தறு - பிணைத்தல், யோர் - தனது, நெருங்கிய உறவுடைய, வகை - உயிரினங்கள் ,
வீடு - பிறப்பு, பேறாய் - குழந்தை பிறப்பு, நின்ற - எஞ்சிய,
கீடம் - புழு, புரை - பூமியில், கிழவோன் - இறைவன், நாள் - உயிர்களை, தொறு - பேரெண்ணிக்கையாக
இறைவன், தன்னுடன் மாறுபாடில்லாத நிலைமை அதாவது தன்னுடன் ஒன்றிய நிலை அடைந்தவர்களுக்கு, அனைத்து முன்வினைப் பிறப்புகளையும் அறுத்து முக்தி அளிக்கிறார். முக்தி பெற்ற ஆன்மாக்கள் போக எஞ்சி நிற்கும் ஆன்மாக்களை, மனிதப் பிறப்பாக, தேவர்களாக , எண்ணிலடங்கா புழு பூச்சி உயிர்களாக, பூமியில் பிறப்பிக்க வைக்கிறான் இறைவன் என்று மேற்கண்ட மூன்று வரிகளில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
ஆன்மீகம் = ஆன் +மீ+ கம். ஆன் - பசு என்கிற உயிர், மீ என்றால் மகோன்னதமான உயர்நிலைக்கு உயர்த்துதல், கம் - ஆன்மா. ஆன்மீகம் என்றால் பசுவாகிய உயிர்களின் ஆன்மாக்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துதல் என்று பொருள். இப்பொழுது தமிழ் அகராதி படி அறிவியல் என்கிற சொற்றொடருக்கு பொருள் பார்ப்போம். அறிவு + இயல் = அறிவியல். அறிவு என்றால் கற்றுக்கொள்ளுதல். இயல் என்றால் இயங்குந்திறன் என்று பொருள். அறிவியல் என்றால் ஒரு விஷயம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கற்றுக் கொள்வது என்று பொருள். நம்மை இயக்குபவன் அடைய வேண்டுமென்றால் நமக்கு தேவை ஆன்மீகம். வாழ்வியல் ரீதியாக இயங்குபவகளை எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள நமக்கு அறிவியல் தேவை. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடல் கொடுத்து வடிவமைத்து இருக்கிறார் அந்த உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது அது எவ்வாறு இயங்குகிறது அதை எப்படி சரிசெய்வது என்பதை புரிந்துகொள்ள அறிவியல் தேவை. ஆனால் அந்த உயிர் உடலை விட்டு நீங்கும் பொழுது ஆன்மாவாக எங்கே செல்கிறது என்பதை அறிவியலால் சொல்ல இயலாது. ஆனால் இங்கே நம் திருவாசகம் தெள்ளத் தெளிவாக மிக அழகாக சொல்கிறது. அனைத்து வினைகளையும் கழித்தவர்கள், இறைவனோடு ஒன்றோடு ஒன்றாக கலந்து விடலாம் என்று மிக அழகாக சொல்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் எவ்வாறு வினையை சேர்க்கிறோம் என்று மிக அழகாக நடராஜப் பத்தின் 8ம் பாடலில் சிறுமணவூர் முனுசாமி முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு மிக அழகாக பாடலாக பாடி வைத்து சென்றிருக்கிறார்.
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லையென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
ஒரு வாரத்திற்கு முன்பு நடராஜர் பத்து என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் திருஅண்டப்பகுதி விளக்கத்திற்கு உதவியாக இந்தப் பாடலை காண்பித்து, என்னை ஒரு கருவியாக வைத்து, சிவபுராணம் மற்றும் திருவாசகம் அனைத்து அடியவர்களுக்கும் இதை உணர்த்துவது இறைவனே! சிவபுராணம் மற்றும் திருவாசகம் படிக்கும் அனைத்து அடியவர்களையும் உயர்த்தி, பிறவி முடிந்தவுடன் மீண்டும் பிறக்கா வண்ணம் தன்னுடன் ஒன்றிணைத்துக் கொள்ள இறைவன் உருவாக்கிய குழுக்கள் இவை என்றே தோன்றுகிறது. நாங்கள் உண்டு, எங்கள் சிறு குழு உண்டு இருந்த எங்களை, 108 சிவபுராணம் பாராயணம் செய்வதற்கு இயலாமல் இருந்த நாங்கள், இன்று மூணரை மாதங்களில், கிட்டத்தட்ட 8.75 லட்சம் சிவபுராணம் பாராயணங்கள் செய்யப்பட்டிருப்பது இறைவன் செயல் என்பதை எங்களால் நன்கு உணர முடிகிறது. இன்றைய காலத்தில் நம் குழந்தைகளுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தையும் வாங்கிக் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு அதன் அருமை புரிவதில்லை. என்னுடைய கணவர் சொல்வார், அவருடைய அப்பா சிறுவயதில் அவர் கேட்டதை எதையும் வாங்கிக் கொடுத்தது இல்லை என்று. ஆனால் என்னுடைய கணவர் கல்லூரி சென்ற பிறகு, அவருக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன தேவையோ, அவை அனைத்தையும் ஒரு வார்த்தையும் என் கணவர் கேட்பதற்கு முன்பே வாங்கிக் கொடுத்தார் என்று. என்னுடைய கணவருக்கு ஒரு வயது வந்து, பொறுப்பு வந்த பிறகு, அவருக்கு என்ன தேவையோ அதனை அவர் கேட்காமலேயே செய்தார் அவருடைய தந்தை. என்னுடைய கணவர், தன்னுடைய தந்தையின் வளர்ப்பு குறித்து இன்றும் பெருமைப்படுகிறார், நினைத்துப் பார்க்கிறார். இறைவன் அது போலத்தான். நாம் வேண்டியது அனைத்தையும் அவர் கொடுப்பதில்லை. நமக்கு எது எப்பொழுது தேவையோ, அப்பொழுது அதனை நாம் கேட்காமலேயே கொடுக்கிறார். சிறுவயதில் தான் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காத அப்பாவிடம் கோபித்துக் கொள்வது போல், நம் கேட்பதை இறைவன் கொடுக்கவில்லை என்றால், நாம் இறைவனிடம் கோபித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு செய்வதையெல்லாம் புரிந்துகொள்ள ஒரு பக்குவம் வரும் பொழுது, இறைவன் எவ்வளவு கருணையுடையவன், எவ்வளவு அன்பானவன், நமக்கு எத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது, அன்று நமக்கு எதுவும் பேசத் தோன்றாமல் கண்களில் கண்ணீர் மட்டும்தான் பெருகும். தன் குழந்தைகள் கேட்பது அனைத்தையும், அவர்களுக்கு அது நல்லதா கெட்டதா என்பதை யோசிக்காமல் வாங்கி கொடுத்து விட்டு பின்னால் வருத்தப்படும் எத்தனை பெற்றோர்களை நாம் பார்க்கிறோம் என்பதையும் இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது குறித்து ஒரு சம்பவம், சமீபத்தில் ஒரு வார இதழில் படித்தது, அதனுடைய ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நம் கர்ம வினைக்கு ஏற்பவே நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்து, இந்தப் பிறவியில் வினைகளை சேர்க்காது இருக்க, இறை நாமம் மற்றும் பாராயணம் செய்வோம். ஒவ்வொரு முறை பாராயணம் செய்யும் பொழுதும், இறைவன் நமக்கு, நம்முடைய குருவை காட்டட்டும் என்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பாராயணம் செய்வோம். நம் வாழ்வில் குரு வரும் பொழுது நம்முடைய அனைத்து வினைகளையும் அழிப்பதற்கு அவர் வழிகாட்டுகிறார். நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு , நம்முடைய குருவை காட்டட்டும் என்கிற பிரார்த்தனையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம், நிறைய தவறு செய்பவர்கள், தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் , மிக நன்றாக இருப்பதைப் பார்த்து, கடவுள், பாவம், புண்ணியம் இவையெல்லாம் உண்மைதானா என்று பல பேருக்கு மனதில் தோன்றுகிறது. அறிவியலால் உணரமுடியாத விஷயமான, பிறவி சுழற்சியை அதாவது முற்பிறவி, மறுபிறவி உண்டு என்பதை திருவாசகம் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது. பிறவி சுழற்சி என்பது உணர வேண்டிய ஒரு விஷயம். வாழ்க்கையில் உணரக்கூடிய விஷயங்கள் அனைத்துமே வெளியே சொல்லி புரிய வைக்க முடியாத விஷயங்கள், நிரூபிக்க முடியாத விஷயங்கள். அன்பு என்கிற உணர்வை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பை ஒரு சில விஷயங்களில் நாம் வெளிப்படுத்த முடியுமே, தவிர ஆனால் முழுவதுமாக மற்றவருக்கு எடுத்துச் சொல்ல இயலாது. கீழ்க்கண்ட பாடல் மிக அழகாக உணர்ந்த அனைத்தையும், மற்றவருக்கு நிரூபிக்க அல்லது புரிய வைக்க முடியாத ஒரு விஷயம் என்பதை மிக அழகாகச் சொல்கிறது.
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ங்னே"
பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் .தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?.
திருவாசகம், பிறவி இருக்கிறது, அதில் நாம் அல்லல் படுவோம், இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்த பிறவியில் என்னவாக வேண்டுமானாலும் பிறக்கலாம், முந்தைய பிறவியில் நாம் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் |
மேற்கண்ட சிவபுராணம் வரிகள் மூலமாக படிப்பவர் அனைவருக்கும் எத்தனை பிறவிகள் இருக்கிறது என்பதை மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார்.
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
மேற்கண்ட திருஅண்டப்பகுதி வரிகள் வாயிலாக, முக்தி பெற்ற ஆன்மாக்கள் போக, எஞ்சி நிற்கும் ஆன்மாக்களை, மனிதப் பிறப்பாக, தேவர்களாக , எண்ணிலடங்கா புழு பூச்சி உயிர்களாக, பூமியில் பிறப்பிக்க வைக்கிறான் இறைவன் என்று மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.
குழந்தைக்கு தவழும் வயதில் எதைப் பார்த்தாலும் போய் எடுக்க தோன்றும் கீழே எது இருந்தாலும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். அதற்கு சரி எது? தவறு எது? அதனால் வரும் நன்மை தீமை எது என்று எதுவும் தெரியாது. அதுபோல
நம் வாழ்க்கை சூழலில் பார்க்கும் மனிதர்கள் தவறு செய்துவிட்டு, ஆனால் நன்றாக வாழ்கிறார்கள், எனவே நாமும் அவ்வாறு வாழலாம் என்று நினைப்பது தன் குழந்தை கீழே இருப்பதை எல்லாம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு பிறகு தொண்டையில் சென்று மாட்டிக் கொண்டவுடன் அழுவது போல், நாமும் அழுது, அலற நேரிடும். தவழும் குழந்தைக்கு அம்மாவும் அப்பாவும் உடனிருந்து பாதுகாப்பது போல நமக்கு இறைவன் மாணிக்கவாசகர் போன்றவர்களை பூமிக்கு அனுப்பி திருவாசகம் இன்னும் மற்ற திருமுறைகள், நடராஜர் பத்து, புராணங்கள் இதிகாசங்கள் போன்றவற்றின் மூலம் நாம் செல்ல வேண்டிய வழியை காண்பித்திருக்கிறார். ஆனால் நாம் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குழந்தைகள் பார்ப்பதை எல்லாம் வாங்க ஆசைப்படுவது போல், நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வசதிகளை மட்டுமே பார்க்கிறோம். அதனால்தான் மாணிக்கவாசகர் மற்றும் இன்னும் பல அருளாளர்கள், அடியவர் கூட்டத்தோடு இணைத்து விடு என்று வேண்டி தொழுதார்கள். நம்முடைய குழந்தைகளை எடுத்துக்காட்டாக கொள்வோம். நாம் பள்ளிக்கு அனுப்பும் பொழுது நம்முடைய குழந்தைகளுக்கு இருக்கும் நண்பர்கள் நல்லவர்களா? அவர்கள் குடும்பத்தினர் எப்படிப்பட்டவர் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் மிக கவனமாக பார்க்கிறார்கள். நம்முடைய சிவபுராணம் குழுக்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மற்ற அடியவர்கள் பாராயணம் செய்வதை பார்த்து நாமும் அதுபோல் பாராயணம் செய்ய வேண்டும் என்று நிறைய அடியவர்கள் பாராயணம் செய்கிறார்கள். இதுபோல் திருவாசகம் படிக்க ஆரம்பித்த நிறைய அடியவர்களும் உண்டு. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல் அடியவர்களோடு நாம் சேரும் பொழுது நம் வாழ்க்கை கண்டிப்பாக மாறுகிறது. வாழ்க்கை என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைவதில்லை. கர்ம விதிகளின் அடிப்படையில் தான் வாழ்க்கை சுழற்சி அமைகிறது. இந்த அடிப்படை விஷயத்தை உணராதவரை, வாழ்க்கையில் மன அமைதி என்பது கிடையாது. கர்ம விதிகளின் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை என்று புரியும் பொழுது முதலில் மனது அமைதி அடையும். அவ்வாறு உணரும் வரை நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களை பார்த்து நம் வாழ்க்கை அவ்வாறு இல்லையே என்று ஒப்பிட்டு கொண்டேதான் இருப்போம். *செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து 14 நாட்கள் மகாளய பட்சம். இந்த நாட்களில், பித்ருக்களுக்கு நாம் தினமும் தர்ப்பணம் செய்யலாம். பசுக்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் பித்ருக்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவ முடியும். இந்த 14 நாட்களில் செய்யும் அன்னதான புண்ணியம், பித்ருக்களுக்கு செல்லும். நாம் காக்கைக்கும் காக்கைக்கு மற்ற உயிரினங்களுக்கும் கொடுக்கும் உணவு போன்றவற்றின் புண்ணியம் பித்ருக்களுக்கு சென்று சேரும் அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் அவ்வாறு உதவும் பொழுது அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிப்பார்கள் அந்த ஆசீர்வாதம் நம்முடைய பலவிதமான இன்னல்களை தீர்த்து நம் தலைமுறையை மனநிறைவுடன் வாழ வைக்கும். இவ்வாறு பித்ருக்களுக்கு நாம் செய்வதன் மூலம் நம்முடைய குழந்தைகளுக்கும் இதனுடைய முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்து அதனால் எதிர்காலத்தில் அவர்களும் அவர்களுடைய பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்வதற்கு வழி செய்கிறோம். வயதான காலத்திற்கு என நாம் சேர்த்து வைப்பதுபோல கண்டிப்பாக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு பேரக் குழந்தைகளுக்கு பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் நம்முடைய காலம் முடிந்த பிறகு நாம் கஷ்டப்பட நேரிடலாம். வங்கியின் சேமிப்பு கணக்கும் நாம் சேர்க்கும் சொத்துக்களும் இந்த பூமியில் வாழும் வரை உதவும். உடலைவிட்டு உயிர் நீங்கும் பொழுது, நமக்கு தேவையானவற்றை நம் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள்தான் செய்ய இயலும். நாம் நம்முடைய பித்ருக்களுக்கு செய்வதன் மூலம்தான், அவர்களுக்கு அதனுடைய முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்க இயலும்.* நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளை நமக்கு உணர்த்தி, நமக்குப் பின் நம்முடைய குழந்தைகளும் நமக்கு செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments
Post a Comment