Skip to main content

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 20 - 30

அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20

மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்

தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்

வானிற் கலப்பு வைத்தோன் மேதகு

காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்

நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25

மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று

எனைப்பல கோடி யெனைப் பல பிறவும்

அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று 

அருக்கன் - சூரியன், சோதி - ஒளி, அமைத்தோன் -சிருஷ்டித்தல், திருத்தகு - பரிசுத்தமான, மதி - நிலவு, தண்மை - குளுமை, வைத்தோன் - கொடுத்தவன், திண்திறல் - பிழம்பு,  தீ- அக்னி, வெம்மை - வெப்பம்,ஒளி செய்தோன் - வைத்தவன்,

பொய்தீர் - முடிவே இல்லாத, வான் - ஆகாயம், கலப்பு - விரிவடையும் தன்மை, கால் - காற்று, பூக்கள்,  ஊக்கம் -  உற்சாகம், நிழல்திகழ் - இயற்கையாகவே குளிர்ச்சியாக உள்ள, நீர் - தண்ணி, இன்சுவை - இனிய சுவை, நிகழ்ந்தோன் - ஏற்பட வைத்தவன், வெளிப்பட - பரந்து இருக்கும், திண்மை - வலிமை,  என்றென்று - இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தால் என்றென்றும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் காலம் போதாது என்கிற பொருளில் இந்த வார்த்தையை மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார். எனை -  நினைத்து பார்க்க முடியாத, கோடி -  எண்ணிறந்த, கணக்கிட முடியாத , பல பிறவும் - மற்ற பல விஷயங்களும், அனைத்தனைத்தும் - இப்படி எல்லாவற்றையும், 

தவ்வு - நம்மால் பண்ண முடியாத, செய்தாலும் வெற்றி பெற இயலாத, அடைத்து - பூரணமாக, முழுமையாக, அஃதான்று - அதுஇல்லாமல், 


சூரியனின் ஒளியைப் படைத்தவன் இறைவன், பரிசுத்தமான நிலவில் குளுமையை வைத்தவன் இறைவன்,  தீப்பிழம்பில் வெப்பம் மற்றும் ஒளி இருக்குமாறு செய்தவன் இறைவன், முடிவே இல்லாத ஆகாயத்தை விரிவடைந்து கொண்டே இருக்கும் வண்ணம் வைத்தவன் இறைவன், வீசும் காற்றினால், பூக்கும் பூக்களினால்  உற்சாகத்தை கொடுக்குமாறு செய்தவன் இறைவன், இயற்கையாகவே குளிர்ச்சியாக உள்ள தண்ணீரில் இன்சுவையை கொடுத்தவன் இறைவன், எங்கும் பரந்து இருக்கும் மண்ணில் வலிமையை வைத்தவன் இறைவன், இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தால் என்றென்றும் சொல்லிக்கொண்டே இருக்கலாம், காலம் போதாது என்கிற பொருளில் என்றென்று என்கிற இந்த வார்த்தையை மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார். நம்மால் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு, இந்த உலகில், கோடி கோடியாய் மற்ற பல விஷயங்களும் இருக்கிறது. இப்படி உலகிலுள்ள எல்லாவற்றையும், நம்மால் பண்ண முடியாத, செய்தாலும் வெற்றி பெற இயலாத எல்லாவற்றையும் பூரணமாக படைத்தவன் இறைவன் என்று, இறைவனின்  பெருமைகளை மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்.


வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்று சொல்வார்கள்! நமக்கென ஒரு வீடு அல்லது ஒரு கல்யாணத்தை பண்ணி முடிப்பதற்குள் நமக்கு மூச்சு முட்டுகிறது. இன்றைய காலத்தில் மேடை அலங்காரம், சாப்பாடு, பூ அலங்காரம் என ஒவ்வொரு விஷயத்தையும் வேறு வேறு நபர்களிடம் செய்யச் சொல்லிக் கொடுத்துவிட்டு நாம் பணத்தை கொடுத்து விடுகிறோம். அப்படி செய்யும் பொழுதே, “அப்பாடா, ஒருவழியாய் எல்லாம் நல்லபடியாக முடிந்ததுஎன்கிற பெருமூச்சு நம்மிடம் இருந்து வருகிறது. இப்படி நம் குடும்பத்திற்கு ஒரு விஷயத்தை செய்வதற்குள் மலைத்துப் போய் நிற்கிறோம். ஆனால் இறைவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சூரியன், சந்திரன், காற்று, தீ, மண், பூக்கள், கடல் என இன்னும் எத்தனை எத்தனை எத்தனை கோடிகளான விஷயங்களை படைத்திருக்கிறான். அவ்வாறு படைத்த பொழுது, ஒவ்வொரு உயிருக்கும் பொருளுக்கும், அதற்கு ஏற்ற தன்மையை இறைவன் கொடுத்திருக்கிறான். சூரியனில் ஒளியும்,  மண்ணில் வலிமையையும், தண்ணீரில் குளிர்ச்சியையும் என ஒவ்வொரு விஷயத்திற்கும், தேவையான பொருத்தமான இயல்புகளை இறைவன் படைத்திருக்கிறான். சூரியனுக்கும், அக்னிக்கும் மண்ணிற்கும், தண்ணீருக்கும் அதற்குரிய இயல்பை கொடுத்த இறைவன் நம்மைப் போன்ற உயிர்களைப் படைத்து, ஒவ்வொன்றிற்கும் இந்தப் பிறப்பில் நம்முடைய கர்மாக்களை கழிப்பதற்கான விஷயங்களை நமக்கு கொடுத்திருக்கிறான். நம்மில் பலருக்கு இறைவன் இன்னும் நமக்கு வேண்டிய பலவற்றை கொடுத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் நிறைய உண்டு. அது நம்முடைய அறியாமையை காண்பிக்கிறது. எவ்வளவு உணவு இருந்தாலும் நம் வயிறு நிரம்பும் வரை மட்டும்தான் சாப்பிட இயலும். நம்முடைய வயிறு நிறைய, சாப்பிட்டு முடித்தவுடன் போதும் என்ற ஒரு திருப்தி ஏற்படும். அதற்கு மேல் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டாலும் நமக்கு அந்த திருப்தி மறைந்து ஒருவிதமான அசவுகரியம் ஏற்படும். ருசியாக இருக்கிறது என்று சாப்பிட்டுவிட்டு கஷ்டப்படுவார்கள் பலபேர். இறைவன் அனைத்து உயிர்களையும் சரிசமமாக பார்க்கிறான், இதனை நாம் அனைவரும் உணர வேண்டும். இன்றைக்கு நாம் அனைவரும் நாம் என்னவாக இருக்கிறோமோ, என்ன இன்ப துன்பங்கள் நம் வாழ்க்கையில் உள்ளதோ, அது அத்தனையும் நம்முடைய கர்மாக்களை கழிப்பதற்காக மட்டுமே. இந்த விஷயத்தை நாம் அனைவரும் உள்ளத்தில் உணர வேண்டும்.  நம்முடைய நோக்கம் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இந்த இன்பத் துன்பங்களை அனுபவிப்பது அல்ல என்பதை நாம் உணரும் பொழுது, நாம் இந்தப் பிறவியில் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் இறைவனை நினைத்து செய்து இறைவனுக்கு அர்ப்பணிப்போம். நமக்கு கிடைக்கும் பாராட்டாக இருக்கட்டும், வசைச் சொல்லாக இருக்கட்டும், அனைத்தும் சிவார்ப்பணம் என்று நினைக்கத் தோன்றும்.  நம் வாழ்க்கையில், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மாக்களின் துன்பங்களை அனுபவிக்கும் பொழுது,  திரு அண்டப் பகுதியின் 20 வரியிலிருந்து 30 வரி  வரை எடுத்து படிப்போம். அவ்வாறு படிக்கும் பொழுது இறைவன் நம் வாழ்க்கையில் நமக்கு கொடுத்திருக்கும் இன்ப துன்பங்களில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை, இவை அனைத்தும்  நம் கர்மாக்களே! இதனை அனுபவிக்கும் வலிமையை இறைவன் நமக்குக் கொடுத்து, இறைவன் நமக்கு பாதுகாப்பாக நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் அனைவரும் மனப்பூர்வமாக நம்ப வேண்டும். நமக்கு ஏதேனும் கஷ்டம் வரும்பொழுது, சுற்றியுள்ளவர்கள் நாம் கும்பிடும் சாமி நமக்கு என்ன செய்துவிட்டது என்று கேட்கலாம். அது இறைவனை உணராதவர்கள் சொல்லும் வார்த்தைகள். இறைவன் நம்மிடம் கேட்பது ஒரே ஒரு விஷயம்தான், அந்த விஷயம் இறைவன் மேல் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை எல்லாக் கர்மாக்களை கழித்து இந்தப் பிறவி தளையில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். நம்மையும் அறியாமல், நமக்கு துக்கம் ஏற்படும் பொழுது, சலிப்பு ஏற்படும் பொழுது வேதனை ஏற்படும் பொழுது திருவண்டப்பகுதி இருபதாம் வரியிலிருந்து முப்பதாம் வரை வரை திரும்ப திரும்ப படியுங்கள். ஏனெனில் அவன், “தன்னே ரில்லோன் தானே காண்கஇறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டாதவன், தாய் போன்றவன் என்று மாணிக்கவாசகர் அழுத்தந்திருத்தமாக சொல்கிறார். மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள், நம் மனதை மயக்குவதற்காக, கொள்ளை கொள்வதற்காக எழுதப்பட்ட வரிகள் அல்ல. ஒவ்வொரு வரிகளும் அனுபவத்தின் சாராம்சம். வாழ்க்கை என்பது அனுபவம் என்பதை உணரும் பொழுது, திரு அண்டப் பகுதியின் இன்றைய வரிகளின் பொருளை இறைவனின் எல்லையற்ற தன்மையை அன்பை கருணையை நாம் உணர முடியும். இந்த அற்புதமான வரிகளுக்கு, என்னை கருவியாகக் கொண்டு இந்த விளக்கத்தை இங்கு தந்திருக்கும் என்னுடைய குருவாக சாயின் திருவடிகளை பணிந்து கண்ணீருடன் வணங்குகிறேன்.


திரு அண்டப் பகுதியில் 29ஆவது மொழியிலிருந்து 65வது வரி வரைகாண்கஎன்கிற சொல் மாணிக்கவாசகரால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. காண்க என்கிற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்த போது வியந்து போனேன். காண் என்றால் பார், தோற்றம்,  என்றால் அக்னி. காண்க என்றால் அக்னியாய் தோற்றமளித்தவன். இந்த 37 வரிகளில் மாணிக்கவாசகர், அக்னியாய் தோன்றிய நம்முடைய சிவனின் பெருமைகளை புகழை மிக அழகாக சொல்கிறார். இங்கு காண்க என்பது பார் என்கிற பொருளிலும் வருகிறது. காண்க என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நாம் சில சமயம் பத்திரிகைகள் படிக்கும் பொழுது இதன் தொடர்ச்சியை இருபத்தைந்தாம் பக்கம் காண்க. இந்த விஷயங்களைப் பற்றிய குறிப்பை புத்தகத்தின் முடிவில் காண்க. அதாவது ஒரு விஷயத்தை மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் குறிப்பிடும் வழிமுறைகளை பின்பற்றினால், அதாவது அந்தப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பக்கத்தை பார்த்தால், மேற்கொண்டு  அந்த  விஷயத்தை தெரிந்து கொள்ளலாம். பரீட்சைக்கு கொடுக்கப்படும் கேள்வித்தாளில் இதற்கு விடை காண்க என்று கொடுத்திருப்பார்கள். அதாவது செயல் முறை கட்டளையாக, அறிவுறுத்துவதாக நமக்கு சொல்லி இருப்பார்கள். அதே போல் தான் மாணிக்கவாசகரும் இறைவனை,  அவர் உணர்ந்த விதத்தை  நாம் தெரிந்துகொள்ளும் விதமாக குறிப்பிடுகிறார் என்று பொருள் கொள்ளலாம். அல்லது இறைவனை இந்த விதத்தில் எல்லாம் பார் என்று நமக்கு அறிவுறுத்தி வதாகவும் பொருள் கொள்ளலாம்.


முன்னோன் காண்க முழுதோன் காண்க

தன்னே ரில்லோன் தானே காண்க


அஃதான்று - அதுஇல்லாமல், முன்னோன் -  மூலபுருஷன், அவன் தான் முன்னோடி தலைவன் இறைவன், முழுதோன் - ஒப்பில்லாதவன் , absolute - viewed or existing independently and not in relation to other things; not relative or comparative. தன்னே ரில்லோன் - பாகுபாடு இல்லாதவன், யாரிடமும் பாகுபாடு பார்க்காதவன், தானே - தாயைப் போல் அன்பு உடையவன்



அக்னியாய் தோற்றமளித்த இறைவன்தான் இந்த பிரபஞ்சத்தின்  மூலபுருஷன், நம் முன்னோடி, நம் தலைவன் என்றும் மற்றும் இறைவனை ஒப்பில்லாதவன் என்றும் கூறுகிறார். ஒப்பில்லாதவன் என்றால் இறைவனை யாரோடும் எந்த ஒரு விஷயத்தோடும் ஒப்பிட்டு சொல்ல இயலாதவன், தனித்தன்மை வாய்ந்தவன் என்கிற பொருளில் மிக அழகாக ஆணித்தரமாக சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டாதவன், தாய் போன்று அன்பு உடையவன் என்று சொல்கிறார். இந்த வரிகள் எல்லாம் மாணிக்கவாசகர் உணர்ந்த வரிகள். இந்த வரிகளை படித்து விட்டு ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பின்னோக்கி சென்று பாருங்கள். எத்தனை, எத்தனை முறை நமக்கு இறைவன் உதவி இருக்கிறான், நம்மை பாதுகாத்து இருக்கிறான், தாயாக உடனிருந்து இருக்கிறான் என்பதை உணர முடியும். கோவில் செல்ல வேண்டாம், பூஜை செய்ய வேண்டாம், அன்பு இருந்தால் உள்ளத்தில் இறைவனை உணர முடியும்.  இறைவனை உணர உணர, நம் மனதில் கிடைக்கும் அந்த அற்புத உணர்வு, வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒரு உணர்வு. நம் வாழ்க்கையில் நாம் இப்பொழுதுதெல்லாம், ஸ்டிரெஸ், டென்ஷன், டிப்ரஷன்  போன்ற வார்த்தைகளை மிக அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். எப்பொழுதும் ஒரு விதமான பதைபதைப்பான மனதுடன் இருக்கிறோம். இறைவனை உணரும் பொழுது, பதைபதைப்பு மறைந்து ஓர் அற்புதமான அமைதி கிடைக்கிறது. இவைகளெல்லாம் வெறும் வேதாந்தங்கள் அல்ல. என்னுடைய வீட்டிற்கு, என்னுடைய தோழி தன்னுடைய ஆறு வயது குழந்தையுடன் வந்திருந்த பொழுது, குழந்தைக்கு உணவு கொடுத்தாள், குழந்தை சாப்பிட்டவுடன் போதும் என்று சொன்னது. அதற்கு என்னுடைய தோழி, கொஞ்சம் தான் சாப்பிட்டாய், அது எப்படி போதும் என்று கேட்டாள்? அதற்கு அந்த குழந்தை என் வயிறு நிரம்பி விட்டதா இல்லையா என்று எனக்கு தானே தெரியும் உனக்கு எப்படி தெரியும், நிரம்பவில்லை என்று? என்று திரும்பவும் கேட்டான். அந்தக் கேள்வி எங்களை திகைக்க வைத்தது. நாம் இறைவனை உணரும் பொழுது அதை எந்த விதத்திலும் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல இயலாது அது தாயாக இருந்தாலும், சரி கணவனாக இருந்தாலும் சரி அந்த உணர்வை மற்றவருக்கு புரிய வைத்தல் என்பது இயலாது. இறைவனின் அன்பை உணரும் பொழுது மனதில் வரும் ஒரு அற்புதமான அமைதி எவ்வளவு கோடி கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். பட்டினத்தார் தனக்கு இருந்த மலை மலையாக இருந்த செல்வத்தை விட்டுவிட்டு இறைவனை நோக்கி சென்றார் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நாம் பட்டினத்தார் போல் துறவி இல்லை, இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள். நாம் இறைவனை உணரும் பொழுது, நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்க தோன்றாது. மற்றவர்களுடன்ரேட் ரேஸ்” (Rat race)எனப்படும் ஓட்டப்பந்தயம் ஓடத் தோன்றாது. நம் கடமைகளை தைரியமாக இறைவனை எண்ணி செய்யும் துணிவும், அதை மனநிறைவுடன் செய்வதற்குரிய வழியும், நமக்குக் கிடைப்பதை உணரலாம். இறைவனை உணரும் போது, நம்முடய பொறுப்புக்கள்   பாரமாக தோன்றாது. நம்முடைய பொறுப்புகளை செய்வதற்குரிய அத்தனை வழிகளையும் இறைவன் காண்பிப்பதை உணர முடியும். தினமும் ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும், மானசீகமாக இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு நாம் சாப்பிட்டு வந்தாலும், குளிக்கும்பொழுது நம் உள்ளத்தில் இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்தோடு குளிக்கும் தண்ணீரை அபிஷேகம் ஆக நினைக்கும் பொழுது, இறைவனை கண்டிப்பாக உணர முடியும். மாணிக்கவாசகர் பாணியில், “உள்ளத்தில் அன்பாய் காண்கஎன்று இந்த பதிவை நிறைவு செய்கிறேன். அதாவது அக்னியாய் தோன்றிய இறைவன் நம் உள்ளத்தில் அன்பாய் நிறைந்திருக்கிறான். அவனை உணர்வோம்! ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...