ஓம் நமசிவாய, திருச்சிற்றம்பலம், அறிவியலின்படி, அண்டம் தோன்றுவதற்கு முன்பு அண்டம் ஒரு நுண்ணிய புள்ளியாக இருந்ததாகவும், பின் அது "ஒரு நாள்" திடுமென மிகப் பெரிய முழக்கத்தோடு வெடித்துச் சிதற, அதிலிருந்து இப்போது நாம் காணும் எல்லாப் பொருட்களும் (விண்மீன்கள், விண்மீன் குழுக்கள் ஆகியன) தோன்றியதென்றும் கூறுகின்றனர். அன்று தொடங்கி இன்று வரை அண்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஊது பை (balloon) போன்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது. இதுவே பேரிடி தோற்ற கோட்பாடு ( Big Bang Theory) என்று அழைக்கின்றனர். இதனை சிலர் பெருவெடிப்பு தத்துவம் என்றும் சொல்கின்றனர். என்னுடைய கருத்துப்படி இது பேரொளி தோன்றலின் அடிப்படை என்று அழைக்கப்பட வேண்டும். தமிழ் அகராதியில் இடி என்றால் ஒளி அல்லது தீ என்று பொருள். என்னுடைய புரிதலில் இறைவன் அணுவாக இருந்து ஏதோ ஒரு காரணத்தினால், ஒரு நொடியை நூறு பகுதிகளாகப் பிரித்தால் கிடைக்கும் அந்த கண நேரத்தில், இறைவன் விஸ்வரூப ஒளியாக (பேரொளி) அல்லது தீயாக தோன்றினார். அறிவியல் படி, மிகக் குறைந்த நேரத்தில், மிகப்பெரிய தீ ஏற்படும்போது, சக்தி (எனர்ஜி ) வெளிப்படும் பொழுது மிகப்பெரிய வெடிப்பு( Explosion) ஏற்படும். இவ்வாறு இறைவன் பேரொளியாக தோன்றி வெடித்து சிதறியதால், விண்மீன்கள், விண்மீன்கள் குடும்பம் என பல்வேறு வகைப்பட்டவை தோன்றி நாலாபுறமும் சிதறியது. அதுமட்டுமல்லாமல் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே சென்றது. இன்றுவரை அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, அதனால் தான் இறைவனுக்கு எந்தவித பரிணாமமும் இல்லை. அதாவது இறைவனுக்கு எந்த விதமான வரையறை, எல்லை, காலநேரம், நீள அகலம் என்று எதுவுமில்லை. என்னால் முடிந்தவரை பேரொளி தோன்றியதன் அடிப்படையை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். என்னுடைய புரிதலில் இறைவன் பேரொளியாக எழுந்த பொழுது வெடித்து சிதறியதில் இருந்து தோன்றிய மிகச்சிறிய பொறிகள் நாம். நம்முடைய நல்வினை தீவினை இரண்டும் தீர்க்கப்படும் பொழுது, நாம் முக்தி அடையும் பொழுது அந்த பொறிகள் மீண்டும் தீயாக இருக்கும் இறைவனை சென்றடைந்து அடைகிறது. இதனை அடிப்படையாக கொண்டு திருவண்டப் பகுதிக்கு விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
படைக்கும் திறன் ஒருவனுக்குத்தான் உண்டு, அந்த ஒருவன் இறைவன் ! அறிவியலால் எதையும் படைக்க முடியாது, தோற்றுவிக்க இயலாது! இயக்குபவன் ஒருவன், அவன் இறைவன் ! அறிவியல், இயங்குபவைகளை எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறது. அவ்வாறு புரிந்ததை அறிவியலார் உலகுக்கு எடுத்துச் சொல்கின்றனர். அறிவியல் மனிதனை படைக்கவில்லை, விலங்குகளை படைக்கவில்லை, எந்த நுண்ணுயிர்களையும் படைக்கவில்லை. அறிவியலால் அவ்வாறு படைக்கவும் முடியாது. இறைவன் படைத்த உயிர்களான மனிதன், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தையும் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிவியல் புரிந்துகொள்ள முயற்சி செய்து, அவை ஒழுங்காக இயங்க வில்லை எனில் அதனை எவ்வாறு சரிப்படுத்துவது என்பதை மட்டுமே அறிவியல் செய்து வருகிறது. மருத்துவ அறிவியல் டெஸ்ட் டியூப் குழந்தைகளை உருவாக்குகிறது என்றால் அதற்கு விந்துவும், கருமுட்டையும் தேவைப்படுகிறது . அந்த விந்துவை, கருமுட்டையை அறிவியலால் உருவாக்க முடியாது. இன்று எத்தனையோ பேர் மாற்று இருதய அறுவைச் சிகிச்சைக்காக, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக, இதுபோன்ற பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. அறிவியலால் இன்னமும் செயற்கை முறையாக இருதயத்தை அல்லது சிறுநீரகத்தை உருவாக்க இயலவில்லை. அறிவியலால் ஏற்கனவே இருப்பதையே உருவாக்க இயலவில்லை. அறிவியலால் படைத்தல் என்பது சாத்தியமற்றது . அறிவியல் நம் வாழ்க்கையை எளிய முறையில் வாழ்வதற்கு ஏற்ப வாழ்க்கை வசதிகளை உருவாக்குகிறது. அறிவியல் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மட்டுமே மாற்றுகிறது. அறிவியலால் எந்த பொருளையும் புதிதாக படைக்க இயலாது அதாவது தோற்றுவிக்க இயலாது! படைப்பது வேறு, உருவாக்குவது வேறு, இரண்டும் ஒன்றல்ல! அதுபோல் புரிதலும் உணர்தலும் ஒன்றல்ல! இறைவன் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்! ஒவ்வொருவரின் அனுபவமும், உணர்தலும் வெவ்வேறு நிலைகளில் இருக்கும். நமக்கு புரிந்ததை மற்றவருக்கு பலவிதமான எடுத்துக்காட்டுகள் வழியாக புரிய வைத்துவிடலாம். நாம் உணர்ந்ததை மற்றவருக்கு புரிய வைக்க இயலாது! இதைக் கீழ்க்கண்ட பாடல் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
"அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்"
பாடல் :
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ங்னே"
பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் . தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?
அதனால்தான் இங்கே மாணிக்கவாசகர் தான் உணர்ந்ததை மிக எளிதான வகையில் மற்றவருக்கு புரியும் வகையில் சொல்லவில்லை. அப்படி அவர் சொல்லியிருந்தால் நாம் திருவாசகத்தை ஒரு பொருட்டாகக் கூட மதித்து இருக்க மாட்டோம். ஆனால் இறைவன் நம் மேல் கருணைகொண்டு, மாணிக்கவாசகரை கொண்டு, தன்னை உணர்வது எப்படி என்பதை மறைபொருளாக சிவபுராணத்தில் எழுத வைத்திருக்கிறார். மறைபொருளாக இறைவன் திருவாசகத்தில் இருப்பதினால் அதனை உணர்வதற்கு ஒரு பக்குவ நிலை வேண்டும். திருவண்டப் பகுதியில் அண்டம் உருவானது எப்படி என்பது சொல்லப்பட்டிருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக நமக்கு இல்லை. அதனால் பின்னால் வந்த அறிவியலைக் கொண்டு என்றோ எழுதப்பட்ட திருவண்டப்பகுதியை புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அறிவியல் மூலம் திருஅண்டப்பகுதி கற்பனை அல்ல என்பதை அருளாளர்கள் நம் மீது கருணை கொண்டு நமக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த விஷயத்தை மேற்கொண்டு பரிசீலிப்போம், நமக்கு நம்பிக்கை இல்லை எனில் அந்த விஷயத்தை மேற்கொண்டு தொடராது அது கைவிட்டு விடுவோம். பிறகு நமக்கெல்லாம் உய்வு நிலை என்பது கிடையாது, பிறவி மேல் பிறவி எடுத்து உழன்று கொண்டே இருக்க வேண்டியது தான்! ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை சொன்னால் புரியுமா? ஒரு விஷயத்தை அவரவருக்கு தெரிந்த மொழியில் சொன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே அனைத்தையும் அறிவியல் கண்ணோடு பார்க்கும் நம்மை, நம்பிக்கை என்னும் விதை விதைக்க இங்கு அறிவியலைக் கொண்டு திருவண்டப்பகுதி விளக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு முதல்படி மட்டுமே, ஆனால் அறிவியல் மூலம் இறைவனை உணர முடியாது. அனைத்தையும் உருவாக்கியது இறைவன்தான் என்பதை சொல்லும் பகுதிதான் திருவண்டப்பகுதி. அதனால்தான் மாணிக்கவாசகர், “ முன்னோன் காண்க முழுதோன் காண்க, தன்னே ரில்லோன் தானே காண்க” என்று சொல்லி இருப்பார்.
மேலே உள்ள யூடியூப் பதிவில் திருவண்ணாமலை கோவிலை டெஸ்லா காயிலுக்கு (coil) சமமாக சொல்லியிருப்பார்கள். நமக்கும் அதை பார்க்கும் பொழுது, நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் ஒரு காரணத்தோடு செய்திருப்பார்கள் என்று, பெருமைப்பட்டுக் கொள்கிறோம், கர்வம் கொள்கிறோம். அதிலும் தமிழன் சொல்லியிருந்தால் பலமடங்கு கர்வம் கொள்கிறோம். இறைவன் என்பவன் நாம் கர்வம் படுவதற்கான காரணப் பொருள் அல்ல. இறைவன் என்பவன் அன்பு! அன்பு என்பது ஒரு உணர்வு, எனவே இறைவனை உணர மட்டுமே முடியும். திருஅண்டப்பகுதியில், இறைவன் நாம் வாழ்வதற்காக என்னவெல்லாம் யோசித்து படைத்திருக்கிறான் என்பதை உணர்த்தும் ஒரு பகுதி. நம் வாழ்க்கையில் நம்முடைய தாய் தந்தை நமக்காக யோசித்து யோசித்து விஷயங்கள் செய்யும் பொழுது, நம் மனது எவ்வளவு உருகுமோ அந்த அளவு நம்மை உருக செய்யும் ஒரு பதிகம் திருவண்டப்பகுதி. இறைவன் திருவருளால், திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் திருவடிகளைப் பணிந்து வணங்கி, நமக்காக இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொடுத்து, நாம் அனுபவிக்கும் தண்ணீர், காற்று, பூமி ஆகாயம், நெருப்பு என அனைத்தையும் கொடுத்த இறைவனை, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும் பஞ்சபூதங்களை நினைத்து வணங்குவதன் மூலமும் போற்றுவோம் நன்றி சொல்வோம்!
பிரபஞ்சத்தில் ஒரு கோளுக்கும் மற்ற கோளுக்கும் இடையில் இருக்கும் தூரத்தை கணக்கிட லைட் இயர் (Light Year) அதாவது ஒளியாண்டு என்று சொல்கிறார்கள். பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது பிரபஞ்சத்தின் எல்லைக்கு அருகில் இருக்கும் கோள்கள் மிக வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
அண்டம் தோன்றிய பொழுது பொருள் (Matter) எதிர்ப்பொருள் (antimatter)இரண்டும் தோன்றியது. எளிய முறையில் சொல்ல வேண்டும் என்றால் எடுத்துக்காட்டாக எண் 2, எடுத்துக் கொள்வோம். கணக்குப் பாடத்தில் +2 (Positive 2) மற்றும் -2 (Negative 2) உள்ளது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ரத்து (cancel) ஆகிவிடும். அதுபோல் பொருள் (+) மற்றும் எதிர்ப்பொருள் (-) இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது அழிக்கப்பட்டு சக்தி (energy) உருவானது. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ( Energy can’t be created or can’t be destroyed ). இந்தப் பிரபஞ்சம் உருவான பொழுது என்ன சக்தி இருந்ததோ அதே சக்திதான் இன்று வரை இருக்கிறது. ஒரு சக்தி மற்றொரு சக்தியாக மாறுகிறது. எப்படி நாம் சாப்பிடும் உணவு கழிவாகி மீண்டும் மண்ணுக்கு சென்று மீண்டும் தாவரமாகி, பிறகு உணவாகிறது. அதுபோல் மண் உடலாகி பிறப்பெடுத்து, மீண்டும் நாம் இறக்கும் பொழுது நாம் மண்ணோடு மண்ணாகிறோம். நம் வாழ்வில் நாம் காணும் அனைத்து பொருட்களும் சுழற்சியின் அடிப்படையில் இயங்குகின்றன. நாமும் அதே போன்று பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு இன்பம் துன்பம் என்று மாறி மாறி அல்லல் படுகிறோம்.
அண்டம் தோன்றிய பொழுது பொருள் (Matter), எதிர்ப்பொருள் (antimatter)இரண்டும் தோன்றியது என்று பார்த்தோம். அவ்வாறு தோன்றிய பொழுது, ஒவ்வொரு 100 கோடி எதிர்ப்பொருளுக்கு (antimatter), 100 கோடி மற்றும் 1(one) பொருள் தோன்றியது. 100 கோடி பொருள் மற்றும் 100 கோடி எதிர்ப்பொருளும் மோதி அழிந்து சக்தி உண்டாகியது. இதைப் பற்றி கீழே உள்ள லிங்கில் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கோடிக்கும் மிச்சமிருந்த ஒரு(one) பொருள்தான் (matter), இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களாக இருக்கிறது. ஆக உடல் மற்றும் உடலுக்குள் இருக்கும் உயிர் சிவமாகவும் அதை இயக்கும் விசை சக்தியாகவும் இருக்கிறது. இதைத்தான் சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்று சொன்னார்கள். அறிவியல் படி இந்த பிரபஞ்சத்தில், 'டார்க் மேட்டர்’ (அறியப்படாத பொருள்) எனப்படும் காண முடியாத பொருள் இருப்பது பற்றியும் அது எங்கு இருக்கிறது என்பது பற்றியும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருக்கிறது. பிரபஞ்சத்தின் கட்டமைப்பு பொருளில் பெரும்பங்கு (95%) இந்த டார்க் மேட்டர் (அறியப்படாத பொருள்) மற்றும் டார்க் எனர்ஜி ( அறியப்படாத சக்தி) என்றாலும், இந்தப் பொருளைப் விஞ்ஞானிகளால் பார்க்க இயலவில்லை. இது குறித்தும் எந்த விஷயங்களும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலே கொடுக்கப்பட்டவை ஒரு புரிதலுக்கான விளக்கம் மட்டுமே. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவனின்றி ஓரணுவும் அசையாது என்று சொல்வார்கள். இந்த உலகத்தை உருவாக்கியவன் சிவன், அதை இயக்கிக் கொண்டு இருப்பவனும் அவனே!
கருட புராணம் மற்றும் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்திரம் போன்றவற்றில் சொல்லியிருப்பதை அடிப்படையாகக்கொண்டு, என்னுடைய கோணத்தில் இந்த டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜி என்பது மிகக் கொடிய பாவங்கள் செய்த ஆன்மாக்கள், நரகம் போன்ற இடங்களில் மாட்டி இருக்கும் ஆன்மாக்களை குறிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இந்த பிரபஞ்சத்தின் ஐந்து சதவீத பிரபஞ்சம் மட்டுமே பொருளால் (Matter) ஆனது. கருட புராணம் மற்றும் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்திரத்தில் தண்ணீர் தாகத்தால் வருந்தும் ஆன்மாக்கள் பல அவர்களுக்கென உள்ள லோகத்தில் அடைபட்டு, கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்துக்களை பின்வரும் தலைமுறைகள் அனுபவிக்கின்றன. அவ்வாறு அனுபவிக்கும் பொழுது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பின்வரும் தலைமுறைகள் கண்டிப்பாக செய்தல் வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது ஏதேனும் கொடிய பாவத்தால் ஆன்மாக்கள் கொடிய நரகத்தில் மாட்டி இருக்கும்பொழுது, அவர்கள் தண்ணீர் தாகத்தாலும், பசியினாலும் வருந்தும் பொழுது, பூமியில் செய்யப்படும் தர்ப்பணம் முன்னோர்களின் பசியையும் தாகத்தையும் தீர்ப்பதாக அமைகிறது. மனிதர்களாக நாம் பிறப்பெடுத்த பின் நமக்கு ஏது நமக்கு ஒரு கஷ்டம் வரும்பொழுது நம்முடைய உறவினர்களையோ நண்பர்களையோ அல்லது முன்பின் தெரியாதவர்கள் கூட உதவி கேட்கிறோம் ஆனால் ஆன்மாக்கள் உடலை விட்டு சென்ற பின்பு அவர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு மனிதர்களான நம்மால் மட்டுமே உதவ முடியும். அப்படி உதவுவதற்காகவே, பித்ரு தர்ப்பணம் என்கிற கடமை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் மற்றும் மகாளய பட்சம் எனப்படுகின்ற 14 நாட்களும் ஒவ்வொரு வருடத்திலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவே இருக்கிறது. நம்முடைய முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நாம் நம்முடைய நண்பர்கள், முன்பின் தெரியாதவர்கள் என அனைவருக்கும் காருண்ய தர்ப்பணம் செய்யலாம். அது மட்டுமன்றி நாம் மற்ற உயிர்களான விலங்குகள், பறவைகள் என மற்ற உயிர்களின் ஆன்மாக்களுக்கும் நம்மால் காருண்ய தர்ப்பணம் செய்ய முடியும். அனாதையாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு உதவுவது, மற்றும் மற்ற ஆன்மாக்களுக்கு காருண்ய தர்ப்பணம் செய்வது, தர்ப்பணம் செய்ய விரும்புவர்களுக்காக உதவுவது, முன்னோர்களுக்காக பசுக்களை தானம் செய்தல், பசுக்களுக்கு உணவிடுதல், அன்னதானம் செய்தல், அம்மாவாசையன்று மற்ற உயிரினங்களுக்கு உணவிடுதல் போன்றவை மிகவும் நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள் ஆகும். இந்த பிரபஞ்சத்தில் எத்தனை விதமான லோகங்கள் இருக்கின்றன என்பது ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரித்திரத்தின் ஏழாவது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரித்திரம் படிக்க விரும்புபவர்கள் கீழே அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான கூகுள் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1boirr7xzCEeAVU8n48Hqpd7n5TQHUH74/view?usp=sharing
சமீப வருடங்களில் வெளிநாடுகளுக்கு முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர். இவ்வாறு பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் ஐரோப்பாவின் பல இடங்களை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவர். அவ்வாறு பயணம் செய்யும் பொழுது பெரும்பாலும் பேருந்தில் மிக அதிக நேரம் பயணம் செய்ய அழைத்துச் செல்லப்படுவார்கள். டிராவல் ஏஜென்சி அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருப்பார்கள். இரண்டு மூன்று நாட்களிலேயே அந்த உணவு மிகவும் அலுத்து எப்போது வீடு போய் சேருவோம்? காரசாரமாக ரசம் சாதம் சாப்பிடுவோம் என்கிற ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரும்பாலும் தங்களுடைய பயணங்களைப் பற்றி எழுதுபவர்கள் அல்லது சொல்பவர்கள் தாங்கள் எடுத்த போட்டோக்களையும் தாங்கள் அங்கு பார்த்த ஒரு சில விஷயங்களையும் மிகவும் பெரிதாக பேசுவார்கள். வெளிநாடு பயணம் செய்வது பற்றி தப்பென்று சொல்லவில்லை. ஆனால் நம்முடைய பித்ரு கடமைகளை செய்யாமல் அல்லது அவ்வாறு செய்வதினால் என்ன புண்ணியம் என்று நினைத்து அவைகளை ஒதுக்கிவிட்டு, வெளிநாடு பயணங்கள் அல்லது உள்நாட்டில் ஊட்டி கொடைக்கானல் என்ற என்கிற சுற்றுலா தளங்களை மட்டுமே சுற்றிப் பார்ப்பது போன்றவைகளை செய்யும்பொழுது, நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் தவறான ஒரு வழிகாட்டிகளாக அமைந்து விடுகிறோம். இந்த உலகத்தில் பிறப்பு மட்டுமல்ல அனைத்துமே ஒரு சுழற்சி தான் இன்று நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதை நாம் திரும்பப் பெறுவோம் இன்று நாம் நம்முடைய முன்னோர்களுக்கு செய்யாமல் விடும் பொழுது நமக்கு வரும் அடுத்த தலைமுறை நமக்கு அந்தக் கடமைகளை செய்யாமல் போகும் நிலை ஏற்படும். இன்றைய காலத்தில் வயதாகும் பொழுது நமக்கென நாம் பணத்தை மற்றும் சில சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொள்கிறோம். நாம் செய்யும் பித்ரு கடமைகளும், நம் குழந்தைகளுக்கு பித்ரு கடமைகளை சரிவர செய்ய சொல்லிக் கொடுப்பதும் வயதான காலத்திற்காக பணம் சேர்ப்பது போலத்தான். ஒவ்வொரு மனிதனும் குழந்தைகள் பெற்றுக் கொள்வது தனக்குப் பின்பு தன்னுடைய குழந்தைகள் தனக்கு புத்திர கடமைகளை செய்ய வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காகத்தான். “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்கிறது திருக்குறள். ஏதோ ஒரு வகையில் நாம் நம் முன்னோர்களின் சொத்துக்களை அனுபவிக்கின்றோம். என் முன்னோர்கள் அல்லது என் தாய் தந்தையர்கள் எந்த சொத்துக்களையும் எனக்கு சேர்த்து வைக்கவில்லை. எனவே நான் அவர்களுக்கு பித்ரு கடமைகளை செய்ய வேண்டியதில்லை என்று நினைப்பவர்கள், தங்களுக்கு பிறப்பை அதாவது இந்த உடலைக் கொடுத்தவர்கள் நம்முடைய தாய் தந்தையர்கள் என்கிற அந்த ஒரு காரணத்திற்காகவாது நாம் அவர்களுக்கு பித்ரு கடமைகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
திரு அண்டப் பகுதியின் விளக்கம் பார்க்கும்பொழுது பித்ரு கடமைகளை பற்றி எதற்காக இவ்வளவு தூரம் சொல்லப்படுகிறது என்று நிறைய பேருக்கு யோசிக்க தோன்றலாம். இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை உணரும்போது, மனிதர்களாக பிறந்த நாம் நம்முடைய கடமைகளை சரிவர புரிந்து கொண்டு செய்தல் வேண்டும். அந்தக் கடமைகளை திருமந்திரம் நான்கு வரியில் சொல்கிறது.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே
தினமும் அன்போடு ஒரு இலையாவது இறைவனுக்கு அர்ச்சித்து பூஜை செய்ய வேண்டும் தினமும் ஒரு கவளம் நாம் சாப்பிடும் முன் மற்ற உயிர்களுக்கு கொடுக்க வேண்டும் தினமும் ஒரு கவளம் பசுக்களுக்கு கொடுக்கவேண்டும் யாரேனும் நம்மை தேடி உதவி கேட்க வரும்பொழுது நம்மால் செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களிடம் இன் முகமாக நல்ல வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்பதும் நம்முடைய கடமைகளாக திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திருமந்திரப் பாடலில் பசுக்களுக்கு ஒரு வாய் என்று ஏன் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் அது நாம் பித்ருக்களுக்கு செய்யும் ஒரு உபகாரம் ஆகும். திருஅண்டப்பகுதி எவ்வாறு இறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதையும் இறைவனின் சுயநலமற்ற தன்மையையும் இறைவனின் எல்லையற்ற சக்தியையும் அன்பையும் கருணையையும் சொல்லும் ஒரு பகுதி. எல்லா ஆன்மாக்களும் தன்னை வந்து சேர வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் அவ்வாறு எல்லா ஆன்மாக்களும் இறைவனை சென்று சேர்வதை நெறிமுறை படுத்துவதற்கு இறைவன் மனிதர்களுக்கு பித்ரு கடமையை கொடுத்துள்ளான். ஒவ்வொரு உயிர்களுக்கும் முன் ஜென்ம வினைகள் என்று உண்டு . அந்த வினைகளின் எதிர் விளைவுகளை கணிசமாக குறைப்பதற்கு சில விஷயங்கள் மனிதர்களுக்கு உதவுகின்றன. நாம் செய்யும் பித்ரு கடமைகள், பழைய கோவில்களை புனரமைக்கும் பணியில் உதவி செய்வது, அன்னதானம் செய்வது போன்ற அனைத்தும் நம்முடைய முன்ஜென்ம வினைகளின் எதிர்வினைகளை குறைக்க உதவுகிறது. இப்பொழுது நாம் திருஅண்டப்பகுதி வரிகளுக்கு விளக்கத்தை பார்ப்போம்.
Comments
Post a Comment