எந்தை அடிபோற்றி
எந்தை என்றால் எம் தந்தை, எம் தலைவன் என்று பொருள். நம் தந்தையாய், நம்மை காத்து அருள்பவன் அடி போற்றி என்று பாடுகிறார்.
தேசன் அடிபோற்றி
தேசன் என்றால் ஒளிமயமானவன் மற்றும் பெரியோன் என்று பொருள். அறிவியல் பெருவெடிப்பு தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது. அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம் சொல்கிறது. இறைவன் சிவன், ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல், அக்னியாய் திருவண்ணாமலையில் இருக்கிறார். அந்த ஒளிமயமானவன் திருவடி போற்றி என்று மாணிக்கவாசகர் பாடுவதாக பொருள் கொள்ளலாம். ஒளியாய் இருந்த சிவனில் இருந்து, பல பொறிகளாய் பிரிந்து மனித உயிர்கள் பிறந்து வந்ததினால் அவனே எல்லா உயிர்களுக்கும் பெரியோன் ஆகிறான். அப்படிப்பட்ட பெரியோன் அடி போற்றி என்றும் மாணிக்கவாசகர் பாடுவதாக பொருள் கொள்ளலாம்.
சிவன் சேவடி போற்றி
சேவடி என்றால் என்று பொருள் சிவந்த பாதம். நெருப்பில் இடப்பட்ட இரும்பு சிவந்து போய் காணப்படும். அதுபோல ஒளியாய், அக்னியாய் சிவன் இருப்பதினால், சிவனுடைய பாதங்களை சிவந்த பாதம் என்று குறிப்பிடுகிறார் என்று பொருள் கொள்ளலாம். அல்லது அடியவர்கள் சிவனின் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வதினால் சிவந்த பாதம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்ப்போம். சிவன் என்றால் சிவந்தவன், அக்னி என்று பொருள். சேவடி = சே +அடி, சே என்றால் பொறுமையாக காத்திருத்தல், அடி என்றால் ஆதரவு காட்டுதல். நம்மைப்போன்ற ஆன்மாக்கள், எப்பொழுது முக்தி அடைந்து தன்னை வந்து அடையும் என்று சிவன் நமக்கு ஆதரவு காட்ட பொறுமையாக காத்திருக்கிறார் என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் என்று பொருள் கொள்ளலாம்.
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
நேயம் என்றால் அன்பு, நின்ற - எப்பொழுதும், நிமலன் என்றால் குற்றமற்றவன் தூயவன் என்று பொருள் . அன்பாகவே, அன்பின் உருவம் ஆகவே எப்போதும் இருக்கின்ற அந்த குற்றமற்ற தூயவனின் திருவடிகள் வாழ்க என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் என்று பொருள் கொள்ளலாம்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
மாயை என்றால் கனவு, பொய், அறியாமை என்ற பொருள். ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுதும் பிறவி எடுத்ததன் நோக்கம் மறந்து இன்பதுன்பம் என்கிற மாயையில், கனவில் சிக்கி, முதலும் முடிவும் இல்லாத வட்டம் போல் திரும்பத்திரும்ப பிறவி தளையில் சுற்றிவரும் உயிர்களின் பிறவித் தளையை அழிக்கும் நம்முடைய அரசனின் அடி போற்றி என்று பாடுகிறார்.
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
சீரார் என்றால் மிகச் சிறந்த, சிறப்பு உடைய என்று பொருள். பெருந்துறை என்பது திருப்பெருந்துறையை குறிக்கிறது. தேவன் என்றால் அரசன், கடவுள், பரிசைக்காரன் என்று பொருள். அதாவது கேடகம் பிடிப்போன் (shield bearer to protect others) என்று பொருள். தேவன் என்றால் கேடகம் பிடிப்போன் அதாவது மற்றவர்களை பாதுகாப்பவர் என்றும் பொருள் படுவதால், நம்மையெல்லாம் பாதுகாக்கும் அந்த தேவனடி போற்றி என்று மாணிக்கவாசகர் பாடுவதாக பொருள் கொள்ளலாம். சீரும் சிறப்பும் நிறைந்த திருப்பெருந்துறையில் குடியிருக்கும் கடவுள் அடி போற்றி என்று மாணிக்கவாசகர் பாடுவதாக பொருள் கொள்ளலாம். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்ப்போம். சீர் - நற்பேறு, ஆர் - அரிய , பூரணமான, பெருந்துறை - கப்பல் நிறுத்துமிடம், இறங்குமிடம். கடலில் செல்லும் கப்பல்கள் அடையவேண்டிய இடத்தை அடைந்தவுடன், கப்பல் நிறுத்த துறைமுகம் தேவைப்படுவது போல, ஆன்மாக்கள் நற்பேறு கிடைத்து, பூரணத்துவம் அடைந்து தன்னை வந்து சேரும் இடமாக துறைமுகமாக, நம்மைப் பாதுகாக்கும் தேவனாக இறைவன் இருக்கிறான், அப்படிப்பட்ட இறைவனின் திருவடி போற்றி என்று மாணிக்கவாசகர் பாடுவதாக பொருள் கொள்ளலாம்.
இறைவன் அன்பாய் பொறுமையாய், கருணை உள்ளவனாய், தன் குழந்தைகளான ஆன்மாக்கள் எப்பொழுது தன்னை வந்து சேரும் என்று ஆவலுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள தாயாய், தந்தையாய் காத்திருக்கிறான். அத்தகைய அன்பு மிக்கவன் நம்முடைய சிவன் இறைவன். சிவனுடைய அந்த அன்பை உணரும் பொழுது, வேண்டுதல் அனைத்தும் மறைந்து, அன்பு இவ்வளவு ஆனந்தம் தருமா ?இவ்வளவு அமைதி தருமா? என்கிற நிலை ஆன்மாக்களுக்கு ஏற்படும். இதைத்தான் பேரானந்தம் என்று சொல்வார்கள். அத்தகைய பேரானந்தத்தை கொடுக்கக்கூடிய இறைவன் திருவடிகளை மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் முதல் 15 வரிகளில் போற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார். அத்தகைய அன்பான இறைவனின் இயல்பை புரிந்து கொள்ள, நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த, அந்த இறைவனின் திருவடிகளை மனதில் நினைத்து தொழுது போற்றுவோம்
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment