Skip to main content

சிவபுராணம் வரிகள் 9 - 10 விளக்கம்

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

கரம் - அழித்தல், குவி - சுவர், வார் - நுட்பமான, மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம், உள் - இறைவன், மகிழ் - விரும்புதல், கோன்  என்றால் இறைவன் என்று பொருள்.

இறைவன் என்பவன் அகத்தாராய், நம்முள் உடனுறைபவராய், அகத்துரைப்போனாய் இருக்கிறான் என்று முந்தைய வரிகளில் பார்த்தோம். அவன் நமக்குள்ளே இருப்பதினால் நாம் வேறு, அவன் வேறு அல்ல என்பதை உணரும் பக்குவம் முதலில் வேண்டும். இறைவன் வேறு எங்கோ இருக்கிறான் என்கிற நுட்பமான, மேலோட்டமாகத் நம் கண்ணுக்குத்  தெரியாத, மாயை சுவர் அழிந்து, நமக்குள், ஆன்மாவாக இருக்கும் இறைவனை  நாம் உணர வேண்டும் என நம்முள் இருக்கும் இறைவன் விரும்புகிறான் என்றும்,  அந்த இறைவனின் கழல் வாழ்க என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார் என்று பொருள் கொள்ளலாம்.


இதை மற்றொரு கோணத்தில் பார்ப்போம். கரம் என்றால் கைகள், நம்முடைய இரு கைகளையும் குவித்து, ஒன்று சேர்த்து, நம்முள் ஆன்மாவாக இறைவன் வசிக்கிறான்  என்பதை உணர்ந்து, இதயத்தில் இருக்கும் அவனை கைகுவித்து வணங்கினால்   நம்முள் இருக்கும் இறைவன் மகிழ்கிறான் என்றும்,  அந்த இறைவனின் கழல் வாழ்க என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார் என்று பொருள் கொள்ளலாம். சக மனிதர்களுக்கு, நாம் வணக்கம் வைக்கும்பொழுது பெரும்பாலும் முகத்தினருகே கைகளை கொண்டு சென்று குவித்து வணக்கம் வைப்போம். நாம் இறைவனை வணங்கும் பொழுது, நெஞ்சுக்கு அருகில் கைகளைக் குவித்து, தலையைக்குனிந்து வணங்குகிறோம். அவ்வாறு செய்யும் பொழுது நமக்கு அங்கு தெரிவது இறைவனின் திருவடிகள் மட்டுமே. நான் என்ற ஆணவம் மற்றும் அகங்காரம் நம்மில் இருந்து மறையும் பொழுது, நமக்குள் பணிவு வரும் பொழுது , இறைவன் முகம் பார்த்து வணங்காமல் அவன் திருவடி பார்த்து தொழுது வணங்குவோம். சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்  பதினைந்து வரிகளுக்கு இறைவன் திருப்பாதங்களை போற்றி, வாழ்த்திப் பாடியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் இறைவனின்  முகத்தையோ அல்லது மற்ற  அங்கங்களையோ பற்றி அவர்  பாடவில்லை .   நம்மில் பெரும்பாலோர், இறைவன் முகத்தை பார்த்து மட்டுமே வணங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். நமக்கு இறைவனின்  அழகு, அலங்காரம் போன்றவை நம் கண்களையும், மனதையும் நிறைகிறது. ஏனெனில் நம்முடைய மாயை ஆணவம் அகங்காரம் போன்றவை நம்மை விட்டு நீங்கவில்லை, நாம் இன்னமும் அந்த திருவடிகளின் பெருமையை உணரவில்லை. நம்முடைய ஆணவம், கன்மம், மாயை போன்றவை அழிந்தால் மட்டுமே, இறைவன் திருவடிப் பெருமையை நாம் உணரமுடியும். இறைவனின் திருவடியை மனதில் கொண்டு வணங்கும் பொழுது ஒரு பக்குவப்பட்ட நிலை நமக்குள் ஏற்படுவதை உணரலாம்.


சிரம் - இருமை, குவி - சுவர் , வார் - நீக்கம், ஓங்குவித்தல்  என்றால் ஓங்கச்செய்தல், உயரச்செய்தல் என்று பொருள். சீரோன் என்றால் மிகச் சிறந்தவன், சிறப்பு உடையவன் என்று பொருள். இருமை சுவரை நீக்கியவர்களை உயர்த்தும், சிறப்பு உடைய இறைவன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். ஒன்று என்றால் பிரிவின்மை, ஐக்கியம், ஒருமை என்று பொருள். நம்முள் இருக்கும் இறைவனை நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். அதனால் கடவுள் வேறு, நாம் வேறு என்று இருமையாக அதாவது இரண்டாக பார்க்கிறோம். நமக்கு பசிப்பது போல் பிறருக்கும் பசிக்கும் என்று நினைத்து பிற உயிருக்கு உணவிட வேண்டும். நமக்கு வலிப்பது போல், பிற உயிருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்து, எந்த உயிரையும், நம்முடைய வார்த்தைகளாலும், செயல்களாலும் புண்படுத்தாமல் இருப்பதும் ஒருமையை குறிக்கும். இதுதான் அத்வைதம் . நாம் மற்ற உயிர்களை, வேறு யாரோ எனக்கு என்ன ஆனது என்று பார்ப்பதினால், மற்றவர்களை காயப்படுத்தும் செயல்களை செய்கிறோம். நம்முடைய இருமையினால், அதாவது உயிர்களை வேறுபடுத்தி பார்ப்பதினால், மற்ற உயிர்களை துச்சமாக மதிக்கிறோம், புண்படுத்துகிறோம், அல்லது மற்றவர்களை விட தான் உயர்வு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஒருமை நிலை, அதாவது எல்லா உயிர்களும் தன்னை போல்தான் என்று நினைக்கும் பொழுது எந்த உயிருக்கும் நம்மால் தீங்கு செய்ய இயலாது. இந்த ஒருமை நிலை அடைந்தவர்களை உயர்த்தும், சிறப்புடைய இறைவன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் என்று பொருள் கொள்ளலாம்.  தெய்வத்தின் குரல் புத்தகத்தில், அத்வைதம் குறித்து மகா பெரியவர்.

இந்த வரியை மற்றுமொரு கோணத்தில் பார்த்தால், நாம் இறைவனை எண்ணி மனம் ஒருமைப்படும் பொழுது தலையின் உச்சியான துரியம் என்னும் சக்கரத்தில் நம்முடைய மனம் குவியும் பொழுது, தியானத்தில் அதற்கு அடுத்த உயர்ந்த நிலைகளான துரியாதீதம், சந்திர மணடலம், சூரிய மண்டலம், சக்தி களம், சிவ களம் ஆகிய உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும். தியானத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லும் பொழுது மிக அற்புதமான, ஆனந்தமான நிலையை தியானம் செய்பவர்கள் அடைவார்கள். சிரம்குவிவார் என்றால் தலையை குனிதல் என்று பொருள்படுமாறு சில விளக்கங்கள் இருக்கின்றன . ஆனால் குவிவார் என்றால் குவித்தல் என்ற பொருள் மட்டுமே தமிழ் அகராதியில் இருக்கிறது . அதாவது குவிலென்ஸ் அல்லது ஒரு பொருட்களை ஒரு இடத்தில் குவிப்பது போன்ற பொருளில் மட்டுமே குவிவார் என்பது வருகிறது . குவி என்பதற்கு  பல அர்த்தங்கள் இருந்தாலும் அதில் குனிவது என்கின்ற அர்த்தம் கொடுக்கப்படவில்லை. 


தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும்  அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...