*கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி*
நுதல் என்றால் நெற்றி என்று பொருள். கண் நுதலான் என்றால் நெற்றியிலே கண்ணுடைய பெருமான் என்று பொருள். எய்தி என்றால் அணுகுதல் என்று பொருள். கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி என்றால் நெற்றியிலே கண்ணுடைய பெருமான் தன் கருணையை காட்ட என்னை அணுகியபோது என்று அர்த்தம்.
*எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி*
எண்ணுதல் என்றால் மதிப்பிடுதல், எட்டா என்றால் இயலாத, எழில் என்றால் தோற்றப்பொலிவு, ஆர் என்றால் அழகு மற்றும் அரிய என்று பொருள். கழல் என்றால் பாதம் திருவடி என்று பொருள், இறைஞ்சி என்றால் மரவுரி என்று பொருள். எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி என்றால் மரவுரி அணிந்த, அழகான, அரிய பாதங்களை உடையவன், என்னால் மதிப்பிடவே முடியாத தோற்றப்பொலிவு உடையவன் என்று பொருள்.
*விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்*
விண் நிறைந்தும் என்றால் விண்ணுலகம் முழுவதும் என்று பொருள், மண் என்றால் நிலவுலகம், மிக்காய் என்றால் நிலவுலகம் விண்ணுலகம் தாண்டி மீதி என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் என்று பொருள், விளங்கு என்றால் பளபளப்பாக ஒளிர்தல் என்று பொருள். அதாவது விண்ணுலகும் நிறைந்து, நிலவுலகம் நிறைந்து அவை மட்டுமில்லாமல் மீதம் என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த எல்லா இடங்களிலும் ஒளியாய் நிறைந்து என்று வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். மேலும் அந்த ஒளி வெறும் ஒளி அல்ல, பளபளப்பாக, மின்னுகின்ற ஒளி என்று அந்த ஒளியை மாணிக்கவாசகர் மேலும் வர்ணிக்கிறார். விண்ணும் மண்ணும் எல்லா இடங்களிலும் நிறைந்த பரம்பொருளை அந்த ஒளியை நம் மனக்கண்ணில் இந்த வரிகளைப் படிக்கும்போது நினைத்துப் பார்ப்போம்.
*எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்*
எண் என்றால் மனம் , இறந்து - அழிந்து பெரும் என்றால் மகத்தான, சீர் என்றால் மதிப்பு, இயல்பு என்ற பொருள். அதாவது மனம் அழிந்து, வரையறுக்கவே முடியாத, கற்பனைக் கெட்டாத, இறைவனின் மகத்தான இயல்பை என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்.
*பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்*
பொல்லா என்றால் தீய, கடுமையான என்று பொருள். புகழுமா றொன்றறியேன், இந்த வார்த்தையை அழிந்த புகழ் + மாறு (மாற்று) +அறியேன் என்று பிரிக்க வேண்டும். மாற்று என்றால் ஒப்புமை, உவமை என்று பொருள். அதாவது மாணிக்கவாசகர் தன்னை, தீய ,கடுமையான வினைகளை உடையவன் என்று சொல்லி அப்படிப்பட்ட எனக்கு இறைவனை புகழ்வதற்கான இணையான உவமை சொல்ல எதுவும் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். இறைவனின் புகழுக்கு உவமை சொல்ல வேறு எதுவும் இந்த உலகில் கிடையாது என்றும் பொருள் கொள்ளலாம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment