சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
*சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்*
சிந்தை என்றால் மனம், எண்ணம் என்று பொருள். நின்று என்றால் எப்பொழுதும் என்று பொருள். சிவன் என் மனதினுள் எப்பொழுதும் இருக்கிறான் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர். அவ்வாறு இருப்பதை உணர்ந்ததினால்,
*அவன் அருளாலே அவன் தாள் வணங்கி*
அருள் என்றால் கூறுதல், இயற்றுதல் என்று பொருள். அதாவது சிவன் என்னுடைய மனதில் இருந்து கொண்டு என்னைச் சொல்ல சொன்னதினால், அவன் தாள் வணங்கி, அவனுடைய திருவடிகளை முதலில் வணங்கி,
*சிந்தை மகிழச்*
மாணிக்கவாசகர் சிந்தையில் இருப்பது சிவன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார் எனவே சிந்தை மகிழ என்றால் சிவன் மகிழ என்று பொருள்.
*சிவபுராணம் தன்னை*
சிவபுராணம் என்றால் இந்தப் பாடலை, தன்னை என்றால் இறைவன் மற்றும் அம்மா என்று பொருள். இந்தப் பாடலாக அதாவது சிவபுராணமாக, திருவாசகமாக இருக்கும் இறைவனை, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நம் அனைவருக்கும், இந்த உலகத்துக்கே தாயாக இருக்கும் இறைவனை அவன் சிந்தை மகிழ
*முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்*
உரைப்பது என்றால் சொல்வது. ஒய என்றால் அழிதல் என்று பொருள் . சிவபுராணமாக, திருவாசகமாக இருக்கும் இறைவனை, திருவாசகத்தை படிப்பதன் மூலமாக, சிவபுராணத்தை படிப்பதன் மூலமாக இறைவனை நினைக்கிறோம். அப்படி நினைப்பதன் மூலம், படிப்பதன் மூலம்,
சிவன் மகிழ சொல்வதன் மூலம், என் முந்தைய அனைத்து பிறவிகளின் வினைகளும் அழிகின்றன என்று சொல்கிறார் மாணிக்கவாசகர். அதாவது நம்முடைய வினைகள் அழிய வேண்டுமானால், சிவபுராணம் படிப்பதற்கு முன்பு, நம் ஆன்மாவாக இருப்பது நம்முடைய இறைவன் சிவன் என்பதை உணர்ந்து, இந்தப்பாடல் ஆகவே இருப்பதை சிவன் என உணர்ந்து, பிறகு சிவபுராணத்தை பாராயணம் செய்தோம் என்றால் நம்முடைய முந்தைய பிறவி வினைகள் அனைத்தும் அழியும். இதைத்தான் மாணிக்கவாசகர் பின்வரும் வரிகளில் “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று சொல்லியிருக்கிறார். திருவாசகம் ஆகவே இருப்பது சிவன் என்பதை உணர்ந்து விட்டால், பிறகு வரிகளுக்கு பொருள் புரிகிறதோ இல்லையோ அதை பற்றிய கவலை வேண்டாம். நாம், எப்பொழுது ஒருவர் பெருமைகளைப் பற்றி சொல்வோம் என்றால், அவர்களுடைய செயல் உயர்ந்தது, உன்னதமானது என்று நமக்கு தோன்றும் பொழுது, மற்றவர் பெருமைகளை பேசுவோம். இல்லை எனில் நம்முடைய பெருமைகளை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருப்போம். திருவாசகத்தை படிப்பதன் மூலம், இறைவன் உயர்ந்தவன், அனைத்திலும் பெரியவன் என்பதை உணர்ந்து நாம் படிப்பதன் மூலம் நம்முடைய ஆணவம், அகங்காரம் போன்றவை மறைய தொடங்கும். இறைவனை உணர்வதற்காக இந்த சிவபுராண பாராயணத்தை ஒரு அடியவர் மூலம் அண்ணாமலையார் நமக்கு ஆரம்பித்து கொடுத்திருக்கிறார். இறைவனாகவே இருக்கும் இந்த சிவபுராணத்தை, நம்மை எல்லாம் இணைத்து பாராயணம் செய்யும் பாக்கியத்தை கொடுத்த இறைவனை, அதுமட்டுமில்லாமல் சிவபுராணத்திற்கு விளக்கம் காணவும் வைத்து, உணரவைத்த இறைவன் திருவடிகளைப் பணிந்து, வணங்கி, போற்றி துதிப்போம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment