ஈசன் அடிபோற்றி
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் முதல் பதினைந்து அடிகள் வரை இறைவனின் திருவடியைப் போற்றி வாழ்த்தி பாடுகிறார் . மாணிக்கவாசகர் மட்டுமல்ல இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருமூலரின் திருமந்திரம், நான்காம் நூற்றாண்டில் திருவள்ளுவரின் திருக்குறள், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வள்ளலாரின் திருவருட்பா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் திருவடியை பற்றி பாடாத திருமுறைகள் இல்லை. ஒவ்வொரு திருமுறைகளும் வெவ்வேறு நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. திருவள்ளுவர் தன்னுடைய முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்து குறள்களில் 2,3,4,7,8,10 என ஆறு குறள்களில் இறைவனின் திருவடியைப் பற்றி சொல்லியிருக்கிறார். நம்முடைய கலாசாரப்படி நாம் நம்மை பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், பிறகு நம்மை விட வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், நம்முடைய குருவின் காலில் விழுந்து வணங்குகிறோம். இறைவன் நம்மை படைத்ததினால் நமக்கு அம்மையப்பன் ஆகின்றான். இறைவன் தான் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை விடவும் பெரியவன் உயர்ந்தவன். இறைவனே மாணிக்கவாசகருக்கு குருவாக வந்து அருளினான். எனவே இறைவன் குருவாகவும் இருக்கிறான். நமக்கு எது வேண்டுமென்றாலும் நாம் இறைவனிடம் தான் கேட்கிறோம். சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் இறைவனை நினைப்பது தங்களுக்கு தேவை வரும் பொழுதுதான். நம்முடைய பெற்றவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவது போல, நம்மை விட பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவது போல, நம் குருவின் காலில் விழுந்து வணங்குவது போல, இறைவன் நம்முடைய அம்மையப்பனாய், நம்மைவிட பெரியவனாய், நம் குருவாய், நம் தேவைகளை நிறைவேற்றுபவனாய் இருப்பதனால் இறைவனின் திருவடிகளை நாம் கண்டிப்பாக வணங்க வேண்டும். இறைவனின் திருவடியில் சரணாகதி அடைந்தால் அமைதி கிடைக்கும் என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியை விடாது பற்றிக் கொள்ள வேண்டும்.
ஈசன் அடிபோற்றி
ஈசன் என்றால் எல்லா பொருட்களின் தலைவன், எல்லா பொருட்களையும் ஆள்பவன் என்று பொருள். எல்லா பொருட்களின் உயிர்களின் தலைவனான ஈசனின் அடி போற்றி என்று பாடுகிறார். என் குருவான சாயி,சாயி என்கிற நாமம் குறித்து இங்கு விளக்க விரும்புகிறேன். சாயி, சாயி, சாயி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நம் காதுகளில் ஒலிப்பது ஈசா, ஈசா, ஈசா என்றுதான். இந்த விளக்கத்தை இங்கு எழுதும் பொழுது ராமாயணத்தை எழுதிய வால்மீகி அவர்கள் குறித்த ஒரு விஷயத்தை எழுத தோன்றுகிறது. வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அந்த முனிவர், ``யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். ``என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர். ``உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக்கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி. ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார். நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை கர்ம வினைகளின் பாவத்தினால் அவரால் உச்சரிக்க முடியவில்லை. எனவே, நாரதர் ரத்னாகரின் கர்மவினையை ஜெயிப்பதற்காக ரத்னாகரை, “மரா, மரா, மரா” என்று உச்சரிக்க சொன்னார். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று ஆகிவிட்டது. ரத்னாகரை போலவே, சாயி பக்தர்கள் சாயி சாயி சாயி என்று நாம ஜெபம் செய்வதினால் அது ஈசா ஈசா என்று ஒலித்து நம்முடைய கர்மவினைகளை, பாவங்களை அழிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு யாரும் சொல்லாமல், சுயம்புவாக லிங்கம் தோன்றுவது போல், என் வாழ்வில் சீரடி சாய் அவர்கள் வந்தார்கள். வந்தபொழுது அவர் எனக்கு உணர்த்தியது சிவனும் சாயும் வேறல்ல என்பதை பல்வேறு விதமாக எனக்கு உணர்த்தினார். அதில் ஒன்று சாயி தான் ஈசா, ஈசா தான் சாயி என்பது. ஈசன் என்ற சொல்லுக்கு நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த, எல்லா உயிர்களின் தலைவனாய் இருக்கிற ஈசன் தாள் பணிந்து போற்றி வணங்குவோம்.
தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *இன்றைக்கு, மற்றுமொரு பணிவான வேண்டுகோளை, இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.* ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment