Skip to main content

சிவபுராணம் வரிகள் 56 - 61 விளக்கம்

விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே


விலங்கு - தளைகள், மனம் - ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, விமலா என்றால் மாசற்றவன் என்று பொருள்,உனக்கு - உன்னை (இறைவனை); கலந்த - ஒருமித்துக் கலக்க ஆகி - அடையும் வழி, அன்பு - பக்தி, அன்பு, கசிந்து - வெளிப்படுவாய், உள் - உள்ளே, அகத்தில்,  உரு - ஆன்மா,

நலம் தான் இலாத  - உய்வில்லாத ஆன்மாவாய்  (நலம் - உய்வு, தான் - ஆன்மா, ) சிறியேன் என்றால் அற்பன் மற்றும் இழிந்தோன் என்று பொருள், நல்கி - பொருள் இல்லாத மற்றவற்றை கொடுத்தல், அருள்செய்தல், நிலம் தன் - பெருந்துறையை குறிக்கிறது, (தன் - குறிப்பிட்ட ), மேல் - உயர்ந்தவன், எல்லோருக்கும் தலைவன், வந்து அருளி - வந்து அருள் செய்து, நீள் என்றால் ஒளி, கழல்கள் - பாதங்கள், நீள் என்றால் ஒளி, கழல்கள் - பாதங்கள்,  நாய் என்றால் நாய் என்னும் விலங்கு அல்ல அற்பன் மற்றும் இழிந்தவன் என்று பொருள், கடை- தாழ்ந்தோன், கீழ்மை, அடியேன் - தன்னைத் தாழ்த்திக் குறிப்பிடும் ஒரு பணிவு மொழி, சிறந்த - (தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற, தயா - அன்பு , தத்துவனே - பரமான்மா, பரம்பொருள், உண்மைப்பொருளே.

 

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிஎன்கிற வரிக்கு விளக்கமாக பெரும் நங்கூர கயிற்றினால், கப்பலை, கரையில் நிலைநிறுத்த பிணைத்திருப்பது போல்,  நமது பிறவி, எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற நங்கூர கயிற்றினால் பிணைக்கப்பட்டு நாம் பிறவிக் கடலை நீந்தி கடக்க முடியாமல் கரையிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்று பார்த்தோம். அதையே மாணிக்கவாசகர்விலங்கு மனத்தால்என்று சொல்லி, இங்கு மீண்டும் வலியுறுத்துகிறார்.  விலங்கு மனத்தால் என்றால் எண்ணங்கள் என்கிற தளையால் பிணைக்கப்பட்டிருக்கிற என்று பொருள். எண்ணங்களால் நிறைந்திருக்கிற மனதை கொண்டு, மாசற்றவனான இறைவனை அடைவதற்கு வழி, அந்த மனதில் அன்பை கலப்பது என்கிறார் மாணிக்கவாசகர். நம்முடைய அன்பினால், அகத்தின் உள்ளே ஆன்மாவாய் ஓளிந்திருக்கும் இறைவன் வெளிப்படுவான் என்று  கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்என்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் கூறுகிறார். உய்வு இல்லாத ஆன்மாவான, இழிந்தவனான எனக்கு அருள் செய்தான் இறைவன் என்று  நலம் தான் இலாத சிறியேற்கு நல்கிஎன்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தன் என்றால் குறிப்பிட்ட என்று பொருள், நிலம் என்றால் இடம் என்று பொருள், மேல் என்றால் தலைவன் அல்லது உயர்ந்தவன் என்று பொருள். சிவன் குருவாக, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு அருளியதை, “நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டிஎன்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். இறைவனைப் பற்றிச் சொல்லும் பொழுது மிக உயர்த்தியும் தன்னைப் பற்றிச் சொல்லும் பொழுது மிகவும் தாழ்வாகவும் சொல்கிறார். அப்படிப்பட்ட தாழ்வான எனக்கு, உன்னுடைய ஒளிமிகுந்த திருவடிகளை காட்டினாயே என்று மனம் உருகுகிறார். நாய் என்றால் நாய் என்னும் விலங்கு அல்ல, அற்பன் மற்றும் இழிந்தவன்  என்று பொருள். “நாயிற் கடையாய்என்றால் இழிந்தவனுக்கு இழிந்தவன் என்று பொருள். அடியேன் என்கிற சொல்லும் தன்னை இறைவன் முன் தாழ்த்தி சொல்லும் ஒரு பணிவான வார்த்தை. தத்துவனே என்றால் பரமான்மா, பரம்பொருள் என்று பொருள். தாயை விட அதாவது அம்மாதான் ஒருவருக்கு உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்று மறைமுகமாக சொல்லி, அந்தத் தாயை விட மேலோங்கி நிற்கின்ற பராபரனே, பரம்பொருளே என்று மிக அற்புதமாக குறிப்பிடுகிறார். பரம் என்றால் பிறவி இல்லாதவன் என்று பொருள். பரன் என்றால் கடவுள். அதாவது பரம்பொருள் என்றால் பிறவி நீக்கம் பெற்ற இறைவன் என்று பொருள். தத்துவம் என்றால் உண்மைப்பொருள் என்றும் ஒரு பொருள் வரும். அதாவது கடவுள் மட்டுமே உண்மை பொருளாக விளங்குகிறான் பிறவி சுழற்சியில் மாட்டிக்கொண்டு திரும்பத்திரும்ப பிறவி எடுக்கும் அனைத்து உயிரினங்களின்  ஆன்மாக்களும் மாயையே என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். அதாவது நாம் எல்லாம் வெறும் மாயை என்பதை தெளிவாக இங்கு நமக்கு எடுத்துரைக்கிறார்.


நம் ஆன்மாவுக்கும் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்று மாணிக்கவாசகர் திரும்பத் திரும்ப சொல்கிறார்.அப்படி ஒளிந்திருக்கும் இறைவனைமறைந்திட மூடிய மாய இருளைஎன்றும், இறைவ்ன் வெளியே வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அன்பு என்றும்கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்என்கிற வரிகளில் சொல்கிறார்.  இதே கருத்து கந்தகுரு கவசத்தில், “ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு, இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்றுஎன்கிற வரியில், நம் உடலுக்குள், கலப்பின்றித் தூய்மையாய் இருக்கும் ஆன்மாவாகிய இறைவனை உணர்ந்து, அவனிடம் அன்பு செலுத்தும் அடியவரை, மேன்மையாக்கி, உயர்நிலையை அடைய செய்து, அடியவரின் சிந்தனையுள், இனிமையான திரவமாய், இறைவன் ஊற்று போல் சுரந்துகொண்டே இருப்பார் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கந்தகுரு கவசத்தின் வரிகளும், திருவாசகம் சொல்வதையே வலியுறுத்துகிறது . இறைவனிடம் அன்பு காட்டினால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பதையும், நாம் இறைவனிடம் அன்பு காட்ட காட்ட, அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் அனைத்தும் அன்பாக மாறி விடுகிறது என்பதை கீழ்க்கண்ட வரிகள் மூலம் கந்தகுருகவசம் சொல்கிறது.  அதுமட்டுமன்றி கந்தகுரு கவசத்தின் 369 வரின்,  மிகத்தெளிவாகதிருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்என்கிறது.


அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்

அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா

அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு

அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே

உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ

அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்

அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்

அன்பே தேவரும் அன்பே மனிதரும்

அன்பே நீயும் அன்பே நானும்

அன்பே சத்தியம் அன்பே நித்தியம்

அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்

அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்

அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்

எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா

அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280



ஆக திரும்பவும் நமக்குள் எழும் ஒரே கேள்வி, இறைவனிடம் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் எப்படி அன்பு செலுத்துவது? சமீபத்தில் ஒரு சித்தர் சொன்னாதாக வாட்ஸ்ஆப்பில், ஒரு வீடியோ வலம் வந்தது. அந்த வீடியோவில் இறைவன் நமக்குள் இருப்பதாக எண்ணி, தினமும் குளிக்கும் பொழுது ஒரு சொம்பு தண்ணீரில் ஓம் என்று எழுதி அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்வது போல் நம் மேல் ஊற்றிக் கொள்ளவேண்டும் என்று  சொல்லியிருப்பார். ஏற்கனவே நம்முடைய குழுமத்தில் பதிவு செய்து இருந்தார் போல், ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் இறைவனை மானசீகமாக நினைத்து, அவனுக்கு கொடுத்துவிட்டு, நன்றி சொல்லி விட்டு சாப்பிடவேண்டும் என்று பதிவு செய்திருந்தேன். திரும்பவும் அதை வலியுறுத்துகிறேன். குளிக்கும்பொழுது இறைவன் நமக்குள் இருப்பதாக நினைத்து தண்ணீரை அபிஷேகம் போல் ஊற்றுவதும், சாப்பிடும் பொழுது இறைவனை நினைப்பதும், நமக்கு நாமே, தினமும் இறைவன் இருப்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும் ஒரு ஆரம்பகால செயல். மனிதர்களான நமக்கு மறதி என்கிற ஒரு விஷயம் இருக்கிறது இதனால் நாம் எளிதில் சில விஷயங்களை மறந்து விடுவோம். தினமும் குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் நினைக்கும்பொழுது, இறைவன் நமக்கு பல்வேறு விதங்களில் நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்டுவதே உணரும் ஒரு பாக்கியம் ஏற்படும். இவ்வாறு உணரும் பொழுது யாரும் சொல்லாமலேயே நமக்கு நாமே நம்முடைய அனுபவத்தினால், இறைவனை குளிக்கும்பொழுது மட்டுமல்ல ,சாப்பிடும்பொழுது மட்டுமல்ல மற்ற பல நேரங்களிலும் நினைப்போம். இது போன்ற விஷயங்களை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும்.  


நம் அனைவரையும் ஒன்றினைத்து பலவிதமான எண்ணங்களால் நிறைந்திருக்கும் நம் மனதில், முகம் தெரியாத ஒருவருக்காக பிரார்த்தனை செய்ய வைத்து, நம் மனதில் அன்பை கலக்க வழி ஏற்படுத்தி, “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்என்கிற மாணிக்கவாசகரின் வரிகளை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இறைவனின் திருப்பாதங்களை அன்புடன், நன்றியுடன், பணிந்து வணங்குவோம்! போற்றுவோம்! இறைவனை உணர்வோம்!

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...