Skip to main content

சிவபுராணம் வரிகள் 72 - 76 விளக்கம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே



சோதி - ஒளி, துன்னிருளே - துன் + இருள், துன் -  துவாரம்,குழி,உட்சென்று வெளிவரக்கூடிய வட்டவடிவ திறப்பு,  இருள் - பிறப்பு,  தோன்றா - பிறரறியாமல் , பெருமை - உயர்வு, ஆதியன் - சூரியன், அந்தம் - இருட்டு, நடு - இதயம்,  அல் - ஒளி, ஈர்த்து - தன் பக்கம் இழுத்தல்,


துன்  என்றால் உட்சென்று வெளிவரக்கூடிய வட்டவடிவ திறப்பு, இருள் என்றால் பிறப்பு, மீண்டும் நாம் இன்னொரு பிறப்பு எடுப்பதைத் தடுக்க, இன்னொரு கருப்பையில் உள்சென்று வெளிவராமல் தடுக்கும் வல்லமை உடைய இறைவன், சோதியாய் அதாவது ஒளியாய், யாருமறியாமல் நமக்குள்ளே ஒளிந்திருக்கிறான் என்று "சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே" என்கிற வரிகளில் சொல்கிறார்.  டெல்லி போன்ற இடங்களில் சூரிய வெளிச்சத்தை எவ்வாறு காற்றில் உள்ள மாசுக்கள் மறைத்து, வெளிச்சம் இல்லாமல் செய்கிறதோ அது போல நம்முடைய கவலைகள், கோபங்கள், வேதனைகள். வருத்தங்கள், பிறரைப் பற்றிய எண்ணங்கள், பழிவாங்கும் குணங்கள் ஆகிய அனைத்தும், நம்முள் இருக்கும் இறைவன் என்கிற ஆன்ம ஒளியை மறைத்து நிற்கிறது. ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது காற்றின் அழுத்தம் பற்றி படித்திருப்போம். அதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்ப்போம். தண்ணீர் முழுவதும் நிரம்பியுள்ள மேலே மூடியுடன் உள்ள ஒரு பாட்டில் எடுத்துக்கொள்வோம். அதில் ஒரு ஊசியைக் கொண்டு ஒரு சிறிய துளை போடுவோம். அந்த துளை வழியே தண்ணீர் வெளியே கசிய வேண்டும், ஆனால் தண்ணீர் வெளியே கசியாது. அந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து வெளியே வர காற்றின் அழுத்தம் தேவைப்படுகிறது. அந்த பாட்டிலின் மூடியை திறந்தால், அது வழியாக காற்று உள்ளே சென்று,காற்றின் அழுத்தத்தால்  தண்ணீர் பாட்டிலில்

இருந்து வெளியே வர ஆரம்பிக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இது குறித்து செயல்முறை விளக்கம் காணலாம். https://www.youtube.com/watch?v=bjHsNWAThK8                          காற்றின் அழுத்தத்தால் தண்ணீர் வெளியே செல்வதுபோல், நாம் இறைவனிடம் காட்டும் அன்பு, நாம் செய்யும் பாராயணங்கள், நாம ஜெபங்கள் நம் மனதின் தேவையில்லாத எண்ணங்களை  வெளியேற்றிவிடும். அவ்வாறு தேவையில்லாத எண்ணங்கள் வெளியேறும் பொழுது, நம் உள்ளத்தில் இறைவன் சூரியன் போல்  பிரகாசிப்பான் என்று மாணிக்கவாசகர் தன்னுடைய அனுபவத்தை கீழ்வரும் வரிகளில் குறிப்பிடுகிறார். 


ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

நடு என்றால் இதயம், அந்தம் என்றால் இருள், அல் என்றால் ஒளி. அதாவது நம் இதயத்தில் உள்ள இருளை நீக்கி இறைவன் சூரியன் போல் பிரகாசிப்பான் என்று, “ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஎன்கிற வரை மூலம் மாணிக்கவாசகர் சொல்கிறார். அப்படி என் மனதில் இருந்த இருளை நீக்கி, இறைவன் ஒளியாக பிரகாசித்து, தன்னை இறைவன் பக்கம் இழுத்துக் கொண்டான் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். இதையே மாணிக்கவாசகர், “ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே


கூர்த்த - நுண்மையான, மெய்- மார்பு, இதயம், ஞானம் - ஒன்றை நன்றாக புரிந்து கொண்டதன் விளைவாக வரும் தெளிவு,  உணர் - (ஒரு நிலையோ தன்மையோ மனத்திற்கு)தெரியவருதல், தம்கருத்தின் - மனம், நோக்கு - கூர்ந்து கவனித்தல், கருத்தூன்றி கவனித்தல், அரிய - அபூர்வமான,பலரும் அறியாத, நோக்கு - கண்டறிதல், நுணுக்கு - நுட்பம், மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம், உணர்வு - பிடித்துக் கொள்ளுதல்


 இதயத்தில் இருக்கும் நுண்மையான ஆன்மாவை புரிந்து கொள்ளும் தெளிவு வரும் பொழுது, மனது இறை நிலையை புரிந்து கொள்ளும் பக்குவம் பெறும். இந்த நிலை வரும் பொழுது மனது, உள்ளத்தை  கூர்ந்து கவனிக்கத் தொடங்கும். அவ்வாறு கவனிக்கத் தொடங்கும் பொழுது பலரும் அறியாத ஒரு விஷயத்தை,  மிகநுட்பமான, மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சத்தை, மனது கண்டறிந்து, பிடித்துக் கொள்ளும். மாணிக்கவாசக நமக்குள் இருக்கும் ஆன்மா பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் இறைவனைப் பற்றியும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதை நாம் முந்தைய வரிகளில் நிறைய முறை பார்த்துவிட்டோம் . இந்த வரிகளிலும் மிகத்தெளிவாக மார்பு, இதயம் என்று பொருள் படும் வண்ணம்மெய்என்கிற வார்த்தையை மிக அழகாக உபயோகப்படுத்தி இருக்கிறார். “நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வேஎன்கிற வரியில் முதலில் வரும் சொற்கள் நம் மனதை கூர்ந்து கவனிக்கச் சொல்லி இருப்பது ஏனெனில் நம்மை அறியாமல் வெவ்வேறு விதமான எண்ணங்கள் பயங்கள் கவலைகள் போன்றவை மிக எளிதாக நம் மனதை ஆக்கிரமித்து விடும் . நாம் நம் மனதை கூர்ந்து கவனிக்கும் பொழுது தேவையில்லாத எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்க தொடங்குவதை உணரும் பொழுது, நாம் பாராயணம் அல்லது நாம ஜெபம் செய்வதன் மூலம் தேவையற்ற எண்ணங்கள் விலகி, நம் மனதினுள் நுட்பமாக இருக்கும் இறைவனை உணர்வதற்கு உதவியாக, இந்த கூர்ந்து கவனித்தல் அல்லது விழிப்புணர்வுடன் இருத்தல், மற்றும் பாராயணங்கள் உதவியாக இருக்கிறது.


ரமண மகரிஷியின் ஒரு சிறந்த பொன்மொழி மௌனமாய் இரு என்பது. மௌனமாய் இரு என்பதன் அர்த்தத்தை மிக தெளிவாக உணர்ந்து கொண்டோம் என்றால் இறைவனை உணர்வதற்கு அது ஒரு முதல்படி. நாம் எல்லாவற்றையும் துறந்த துறவிகள் அல்ல! நமக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள் வேலைக்கு செல்லவேண்டும், பின் எப்படி ரமண மகரிஷியின் மௌனமாய் இரு என்கிற உபதேசத்தை நம்மால் பின்பற்ற முடியும் என்ற நம்மில் அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு கேள்வி தோன்றும். நம் அனைவருக்குமே கடமை மற்றும் கர்மா  புரிந்துகொள்ள முடியாத குழப்பமான ஒரு விஷயமாகவே இருக்கிறது.  இந்தக் கடமை, கர்மா மற்றும் மௌனம் மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதாவது நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் என்று இருக்கிறது. இவை அனைத்தையும் நாம் செய்தே ஆகவேண்டும். கசாப்பு கடைக்காரர் அவருடைய வேலையான வெட்டுதலை  செய்துதான் ஆகவேண்டும், அவர் வேறு வேலைக்கு செல்லலாம், இதை செய்து தான் ஆக வேண்டுமா என்றெல்லாம் மற்றவர்கள் பட்டிமன்றம் நடத்துவது வீண் செயலே ஆகும். கசாப்பு கடைக்காரர், அவருக்கு தெரிந்த வேலையை, அவருடைய வாழ்வாதாரத்தை, அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வேலையை செய்து விட்டு, மனதிற்குள், அவர் தான் இந்த வேலையை செய்ய வேண்டுமா இது சரியா தவறா? எனக்கு இதை விட்டால் வேறு வேலை தெரியாது? இந்த வேலையை விட்டு விட்டால் தானும் தன் குடும்பமும் வாழ்வதற்கு வேறு வழியில்லை என்று எண்ணி உள்ளுக்குள் மறுகி, வேதனைப்பட்டு, வருத்தப்பட்டு குழப்பத்துடன் தினமும் இந்த வேலையை செய்யக் கூடாது. கசாப்பு கடைக்காரர் ஆக அவர் இருப்பது அவருடைய கர்மா, அவருடைய கர்மாவின் படி அவருடைய வேலை வெட்டுதல், அந்தக் கடமையைச் செய்துவிட்டு உள்ளுக்குள் எது குறித்தும் வருத்தப்படாமல் வருத்தப்படாமல், வேதனைப் படாமல் என் வேலையை நான் செய்கிறேன் என்று உள்ளுக்குள் எந்தவிதமான மன போராட்டங்களும் இல்லாமல் இருப்பதுதான்மௌனமாக இருஎன்று ரமண மகரிஷி சொன்னது மௌனமாக இருப்பது. இன்னும் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டால் நாம்  அதை அடித்துதான் ஆக வேண்டும் என்று இறைவனை நினைத்து தன் கடமையைச் செய்துவிட்டு, திரும்பவும் அதுகுறித்து மனதிற்குள் எந்தவிதமான மனப்போராட்டங்களும், பயமும், குழப்பமும் இல்லாமல் இருக்கவேண்டும். ஆனால் நாம் என்ன செய்வோம் பாம்பை அடித்துவிட்டு, மற்றவர் யாராவது இதை கேள்விப்பட்டு , ஐயையோ பாம்பை அடித்து விட்டீர்களா?  அது தோஷமாகும் என்று சொன்னால் அல்லது கேள்விப்பட்டால் உடனே நமது மனது அமைதி இழந்து, குழப்பத்தில் ஆழ்ந்து விடும். நாம் எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் இறைவன் நமக்கு இட்ட கடமைகளை செய்கிறோம் என்று இறைவனை நினைத்து அந்த கடமையை செய்து விட்டு, மனதில் எந்தவித குழப்பமும், போராட்டமும் இல்லாமல் இருப்பதுதான் உண்மையான மௌனம். இந்த மௌன நிலையில், நாம் இறைவனை அன்புடன் போற்றி வணங்கும் பொழுது, இறைவன் நம்முள் ஒளியாக கண்டிப்பாக காட்சி தந்து, மாணிக்கவாசகரை ஈர்த்தது போல், நம்மையும் ஈர்ப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே மனப் போராட்டங்களை குழப்பங்களை தவிர்ப்போம். அதை தவிர்ப்பதற்கு மிக எளிதான முறை நாம ஜபம் மற்றும் பாராயணம். எனவே தேவையில்லாத குழப்பங்களை தவிர்த்து மனதை நமக்கு பிடித்த பாராயணத்தை செய்து மௌனமாய் இருக்க கற்றுக்கொள்வோம் ! இறைவனை உணர்வோம் ! ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்


 


Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...