ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
ஆரா - ஒரு போதும் திருப்தியுறாத , அளவிலா - நீளம், அகலம், உயரம் அல்லது காலம் இல்லாத, பரிமாணம் இல்லாத, எல்லையில்லாத,பெம்மான்- பெருமான், கடவுள், ஓரா - தெளிவில்லாத, குழப்பமான; தார் - இல்லம் (மனம்)
சிவனை நினைத்தால் நினைத்துக் கொண்டே இருக்கத் தோன்றும். நினைத்தது போதும் என்று தோன்றாது . எனவேதான் ஆரா அமுதே என்று இறைவனைப் போற்றிப் பாடுகிறார். அதாவது எவ்வளவு நினைத்தாலும் நமக்கு போதுமென்ற திருப்தி தராத அமுதம் அவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். இறைவனுக்கு எந்த விதமான வரையறையும் கிடையாது அதனால்தான் அவன் அடிமுடி காணமுடியாத ஜோதியாக தோன்றினான். அதாவது அவனுக்கு இறைவனுக்கு எந்தவிதமான அளவும் கிடையாது, பரிமாணமும் கிடையாது . பரிமாணம் என்ற சொல், வெறும் நீள அகல உயரங்களை மட்டும் குறிப்பிடுவது அல்ல, காலத்தையும் குறிப்பிடுவது. எனவே சிவன் காலத்தினால் கட்டுப்படுத்த முடியாதவன், இறைவனுக்கு இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்பதெல்லாம் கிடையாது என்பதை மாணிக்கவாசகர் அளவிலாப் பெம்மானே என்று குறிப்பிடுகிறார். குழப்பமான மனதில், ஒளியாய் இறைவன் ஒளிந்து இருப்பவன். நம் ஆன்மாவுக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்று மாணிக்கவாசகர் திரும்பத் திரும்ப சொல்கிறார்.அப்படி ஒளிந்திருக்கும் இறைவனை “மறைந்திட மூடிய மாய இருளை” என்றும், இறைவ்ன் வெளியே வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அன்பு என்றும் “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற வரிகளில் சொல்கிறார். இதே கருத்து கந்தகுரு கவசத்தில், “ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு, இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த குரு கவசத்தில் இந்த வரியை சற்று ஆழ்ந்து நோக்கினால், “எழுந்திட்ட எங்கள் குரு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் மனதில் இறைவன் ஒளிந்திருக்கிறான், அவனைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவதற்கு பதிலாக, நாம் கவலைகள், வேதனைகள், அறியாமை, பொறாமை பழிவாங்கும் எண்ணம், கோபம் போன்ற பல்வேறு விதமான எண்ணங்களை குவித்து கொண்டே செல்வதினால், இறைவன் நம் மனதில் வெளிப்படுவதில்லை. நம் கவலைகளை, பயங்களை, தேவையற்ற எண்ணங்களை நீக்கி நம்முடைய அன்பினால் இறைவனை ஒளியாக நம் அகத்தில் உணர்ந்த பிறகு, அந்த ஒளி நம் வாழ்வை நல்லபடியாக வழிநடத்திச் செல்லும். இதைத்தான் கந்த குரு கவசம்
“எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே 47
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ 48
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் 49
என்று சொல்கிறது.
நம்முடைய அன்பு ஒன்றினால் மட்டுமே இறைவனை ஒளியாக காண முடியும் என்பதை கந்தகுருகவசம், கீழ்க்கண்ட வகைகளில் மிக எளிமையாக சொல்கிறது.
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண 31
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
கந்தகுருகவசம், திருவாசகம் இரண்டுமே, இறைவன் ஒளியாய் மனதில் இருப்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. கீழே உள்ள கந்த குரு கவசத்தின் மற்றொரு வரி இங்கே எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு 119
கந்த குரு கவசத்தை உள்வாங்கி நாம் படித்தோம் என்றால், நம்முடைய வாழ்வின் பயம் நீக்க, கவலை நீக்க, வல்வினைகள் நீக்க, எமபயம் நீக்க என அனைத்திற்கும் உள்ளொளியாய் வெளிப்படும் இறைவன் உதவுவான் என்று மிகத் தெளிவாக கந்தகுருகவசம் சொல்லியிருக்கிறது. இன்றைக்கு வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில், நம்மை, நம் குடும்பத்தை பாதுகாக்கும் சக்தி என்பது இறைவன் மட்டுமே. அந்த இறைவன் நம் அகத்தில் ஒளியாய் தோன்றிவிட்டால், கண்டிப்பாக நம்மை வழி நடத்திச் செல்வான். நம் அகத்தில்த்தில், உள்ளத்தில் இருக்கும் இறைவனை உணர்வதற்காகத்தான் நாம் செய்யும் பாராயணங்கள். கவலைப்படும் நேரத்தில், வேதனைப்படும் நேரத்தில், உணர்ச்சிவசப்படும் நேரத்தில், இவ்வாறு கவலைப்படுவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என உணர்ந்து அந்த நேரத்தை பாராயணத்திற்காக, நாம ஜெபத்திற்கு நம் நேரத்தை செலவிடும் பொழுது, நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் ஆகாமிய கர்மாக்களும் குறைக்கப்படுகின்றன. இதைத்தான் கந்த குரு கவசம், “இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு (182)” என்று சொல்கிறது. “அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில், எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190” என்று சொல்கிறது. சிவபுராணம் பாராயணம் , கந்தசஷ்டி பாராயணம், திருவாசகம், கந்த குரு கவசம், மகான்களின் சரித்திரம் இப்படி எதுவாக இருந்தாலும் சரி, நம்முடைய நேரத்தை பாராயணங்கள் செய்ய ஒதுக்கும் போது, நம்முடைய தேவையற்ற எண்ணங்கள், கவலைகள், பயங்கள் , வேதனைகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன என்பதுதான் உண்மை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் பாராயணம் அல்லது நாமஜபம். நம் எல்லோராலும் நாம ஜெபம் செய்வது என்பது மிக எளிதான விஷயமல்ல. அதற்காகத்தான் இதுபோன்ற குழுக்கள் மூலமாக நாம் சிவபுராணம் மற்றும், மற்ற அனைத்து வகையான பாராயணங்களை செய்கிறோம். பாராயணத்தின் முக்கியத்துவத்தை, கீழே உள்ள கந்தகுரு கவசம் வரிகள் மிகத் தெளிவாக, எளிமையாக சொல்லிவிட்டது.
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200
உண்மையில் சொல்லப் போனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் உண்டு என் குடும்பம் உண்டு, என் வேலை உண்டு என்று தான் இருந்தேன். கந்த குரு கவசம் பாடல் கேட்டு அல்லது படித்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சீரடி சாய் எனது குருவாக எனது வாழ்க்கையில் வந்த பொழுது ஒரு முறை, மிக உயர்ந்த தியான நிலைக்கு என்னை கொண்டு சென்றார். அப்பொழுது எனக்கு என்ன வேண்டும் அவர் என்று கேட்டபொழுது, 20 வருடங்களுக்கு முன்பு நான் கேட்ட கந்தகுரு கவசத்தில் வரிகளான, கீழ்க்கண்ட வரிகள் அந்த தியான நிலையில் இருந்தபொழுது ஒலித்தது.
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ……
அந்த நேரத்தில் இறைவனை மிக அற்புதமான, பிரகாசமான ஒளியாக என்னுள் பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் கண்களில் கண்ணீர் பெருக, அவருடைய அன்பு ஒன்றே போதும் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் எனக்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்கள் இருந்தாலும், அவற்றில் ஏதாவது ஒன்றை கேட்டிருந்தால், அந்த விஷயம் மட்டும் எனக்கு கிடைத்திருக்கும். ஆனால் மிகப்பெரிய பொக்கிஷமான இறைவனின் அன்பை இழந்திருப்பேன். இறைவனின் அன்பு, எனக்கு எல்லையில்லா நம்பிக்கையை கொடுக்கின்றது, மன வேகத்தை கட்டுப்படுத்தி, அமைதியை கொடுக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அரவணைப்பில் பாதுகாப்பில் இருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. அவ்வாறு அந்த வரிகளை எனக்குள் ஒலிக்கச் செய்தது இறைவனின் கருணை என்பதை பிறகு நான் உணர்ந்தேன். இறைவனின் இந்த கருணைக்கு, என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னால் கூட அது போதாது. நம் வாழ்க்கையில் தேவை என்பது எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கும். தேவைகள் முடிவில்லாதவை. எனவே நாம் ஒரு தேவையை இறைவனிடம் கேட்கும் பொழுது, நாம் இனிமேல், இறைவனிடம் வேறு எதுவும் கேட்க மாட்டோம் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. இறைவனிடம் அவன் அன்பை கேட்கும் பொழுது அவன் கொடுக்கும் அந்த அன்பு முடிவில்லாதது, அவன் முக்காலமும் அறிந்தவன் , நமக்கு என்ன தேவை?, நம்முடைய கர்மவினைகள் என்ன? அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எப்படி கொடுக்க வேண்டும் என்பது அனைத்தையும் அறிந்தவன் இறைவன். நான் அன்று இறைவனிடம், எனக்குரிய ஒரு தேவையை கேட்டுஇருந்தேன் என்றால், இன்று நான் சிவபுராணத்திற்கு விளக்கம் எழுதி இருப்பேனா என்பது கூட சந்தேகம்தான். நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கந்த குரு கவசத்தை மேற்கோளாக காட்டுவேன் என்பதை என் மனதில் நினைக்கக் கூட இல்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை திருமுறைகள் சொல்வதை மிக எளிமையாக சுருக்கமாக கந்தகுருகவசம் சொல்கிறது என்று தான் சொல்வேன். பொன்முட்டையிடும் வாத்து கதை பற்றி நாம் அனைவரும் படித்து இருப்போம். இறைவனின் அன்பு என்பது அந்த வாத்து நமக்கு தினம் கொடுக்கும் ஒரு தங்க முட்டை. இறைவனிடம் நம் தேவையை கேட்பது என்பது அந்த வாத்தின் வயிற்றை அறுத்து அன்றைய தங்க முட்டை எடுப்பது போன்று. “அன்பே சத்தியம் அன்பே நித்தியம் (274)” என்கிற கந்தகுரு கவசத்தின் வரிகளில் நித்தியம் என்றால் அழிவில்லாதது, நிரந்தரம் என்று பொருள். சத்தியமான, நிரந்தரமான, அழிவில்லாத, இறைவனின் அன்பை நாம் அனைவரும் பெற முயற்சிப்போம். நாம் பிறருக்காக செய்யும் பிரார்த்தனைகள், நாம் செய்யும் பாராயணங்கள் நாம் செய்யும் நாம ஜெபம் இறைவனின் அன்பை உணர்வதற்காக, பெறுவதற்காக செய்யும் முயற்சிகள். நம் அன்பை கொடுத்து, இறைவனின் அன்பை பெறுவோம் அதுவே நிரந்தரமானது, அழிவில்லாதது, முடிவற்றது. அந்த அன்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
Comments
Post a Comment