Skip to main content

சிவபுராணம் வரிகள் 91- 95 விளக்கம்

அல்லல் பிறவி அறுப்பானே என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 


அல்- உடல், பிறவி -  பிறப்பு, அறுத்தல் - நீக்குதல், இல்லாமற் செய்தல், 

- மடைமாற்றம், பாதை மாற்றம், அகத்தூய்மை  சொல்லற்கு - சொல் + அற்கு, சொல் -  உறுதிமொழி, அறிவித்தல் பறைசாற்றுதல், அற்கு - காலத்தினால் அழியாத, எப்பொழுதும் அழியாத, நிலைத்து நிற்பவன்,

அரிய - போற்றத்தக்கவன், சொல்லி - என்று கூறி, கீழ் -பூலோகம், மண்ணுலகம் ,

 சொல்லிய பாட்டின்  -  பாசுரம், பாடல்கள் , பொருள் - மெய்ப்பொருள், தலைமைப் பொருள்,  செல்வர் - அடைவர், உள் - சிறப்பான, மேன்மையான, ஆர் - அரிய, எல்லோரும் - சகலரும், அனைவரும் ஏத்தல் - போற்றித்துதித்தல், பணிந்து - வணங்குதல்,


நமக்கு மடைமாற்றம் செய்து, அதாவது அகத்தூய்மை செய்து, பாதை மாற்றி, ஆன்மா உடலுடன் பிறக்கும் பிறப்பை நீக்குபவன் இறைவன் என்று  சொல்கிறார் மாணிக்கவாசகர். “சொல்லற்கு  என்றால் காலத்தினால் அழியாத, என்றும் நிலைத்து நிற்கக்கூடியவன். “அரியானைஅன்பிற்குரியவன் என்று பொருள். இறைவன் காலத்தினால் அழியாதவன் என்றும் நிலைத்து நிற்பவன் இன்று உலகம் அறிய திருவாசகம் மூலம் மாணிக்கவாசகர் மிக உறுதியாக சொல்கிறார். “அரியஎன்றால், பலரும் அறியாத என்றும் ஒரு பொருள் வரும்.  அத்தகைய நிலைத்த பெருமையுடைய இறைவனை பலரும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார். கீழ் என்றால் மண்ணுலகம், திருவடிக்கீழ் என்றால் இறைவனின் திருவடிக்கு கீழே உள்ள மண்ணுலகத்தில் உள்ளவர்கள், திருவாசகத்தின் உண்மைப் பொருளான சிவனை உணர்ந்து திருவாசகத்தை படித்தால், சிவபுரத்தில் உள்ள மிக மேன்மையான சிவனின் திருவடிகளை அடைவார் என்றும் கூறுகிறார். அப்படி அடைந்தவர்களை மற்றவர்கள் எல்லோரும் போற்றித் துதித்து வணங்குவர் என்று உறுதி கூறுகிறார். திருவாசகத்தின் பொருள் சிவன் என்பதை மாணிக்கவாசகர் தில்லையம்பலத்தில் இறைவனுடன் கலந்து பொழுது அறிவித்தார் அதுமட்டுமன்றி அதையே இங்கு சிவபுராணத்தில்சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்என்று திரும்பவும் வலியுறுத்துகிறார். “நாதன் தாள் வாழ்கஎன்கிற வரியும் இறைவன் பாடலாக இருக்கிறான், தீயாக இருக்கிறான் என்று இரண்டு பொருள்படும் வகையில் சொல்லி இருக்கிறார்.  மாணிக்கவாசகரின் திருவாசகம் அன்பினால் உணரப்பட வேண்டிய ஒரு விஷயம் . சிவபுராணத்திற்கு நாம் பார்த்த விளக்கங்கள் அனைத்தும் என்னுடைய குருவின் வழிகாட்டுதலினாலும், தமிழ் அகராதியின் உதவியோடும், இறைவனை உணர்ந்து எழுதப்பட்ட ஒரு விளக்கம். நம் சிவபுராணம் குழுவுடன் இணைந்து சிவ புராணத்திற்கு விளக்கம் காண வைத்த, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் திருவடிகளையும், நமக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான், அவனை அன்பின் மூலம் வெளிக் கொணர முடியும் என்று மிக அழகாக, எளிமையாக நமக்கு திருவாசகம் மூலம் சொல்லியிருக்கும் மாணிக்கவாசகரின் திருவடிகளையும்,  சிவபுராணம் விளக்கம் எழுதுவதற்கு உந்துதலாக, வழிகாட்டியாக , என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என்னுடைய குருவான சாயின் திருவடிகளையும் பணிந்து, போற்றி வணங்குகிறேன்!


திருவாசகத்தை எத்தனையோ பேர் தொடர்ந்து பாராயணம் செய்து வருகிறார்கள். திருவாசகம் மட்டுமல்ல மற்றும் மகான்களின் சரித்திரம், சுந்தரகாண்டம் போன்ற பல புனித நூல்களை இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் பாராயணம் செய்து வருகிறார்கள். அவ்வாறு பாராயணம் செய்யும் பொழுதும், நம்மில் நிறைய பேருக்கு நிறைய பொருள் கஷ்டங்கள், மனக்கஷ்டங்கள் மற்ற விதமான வேதனைகள் என அவதிப்படுகிறோம். அப்பொழுது நமக்குள் என்ன பாராயணம் செய்து என்ன புண்ணியம் என்கிற மனச்சோர்வு தோன்றலாம்? நம்முடைய கர்மவினைகள் என்னவென்று நமக்கு தெரியாது. ஆனால் கஷ்டங்களை மட்டும் நாம் உணர்கிறோம். பாராயணம் செய்தும் கஷ்டங்கள் குறையாத பொழுது,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இறைவனே எனக்கு உதவு என்று வேண்டாதீர்கள். அதற்கு பதிலாக இப்பொழுது நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் என்றோ, யாரையோ, ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படுத்தி இருக்கிறோம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நமக்கு இன்று வலிப்பது போல அன்று ஏதோ ஒரு ஆன்மாவிற்கு வலித்திருக்கும். இன்று  நாம் அழுவது போல, அன்று அந்த ஆன்மா  அழுது இருக்கும் என்பதை உணர்ந்து அதற்காக முதலில் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று நமக்கு வலிக்கிறதே என்று அல்லாமல் அன்று யாரையோ தெரிந்தோ தெரியாமலோ அழ வைத்து விட்டேன் அந்த வலி இன்றுதான் எனக்கு புரிகிறது, அந்த தவறு இன்றுதான் எனக்கு புரிகிறது என்று இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்க வேண்டும்.  அந்த விழிப்புணர்ச்சி மன்னிப்பு கேட்கும் தன்மை நம்மிடத்தில் வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கை சூழலில், மனதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அந்த உணர்வுடன் நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு கண்டிப்பாக மன நிம்மதியை அளிக்கும். அதுபோல நாம் அனுபவிக்கும் நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றிற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நாம் என்றோ யாருக்கோ நன்மை செய்து இருக்கிறோம் அதனால்தான் இன்று இந்த நன்மையை அனுபவிக்கிறோம் என்று நமக்குள் அடிக்கடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். தீதும்  நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர வேண்டும். நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே நம்முடைய கர்மா என்று உணர வேண்டும்.

முந்தைய பிறவிகளில் நாம் செய்த வினைப்பயனை இந்தப் பிறவியில் இன்பமாகவும் துன்பமாகவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பிறவியில் செய்யும் வினைக்கு கண்டிப்பாக, அடுத்து வரும் பிறவிகளில் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்துதான் ஆகவேண்டும். இன்பம் அதிகமாக இருக்குமா? துன்பம் அதிகமாக இருக்குமா? என்று யாராலும் சொல்ல இயலாது.  அதுமட்டுமன்றி இனி அடுத்து வரும் பிறவிகளில் ஏற்படும் கால மாற்றங்கள், அதனால் ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றங்களால், சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று இவையெல்லாம் கிடைக்குமா என்பது எல்லாம் கேள்விக்குறிதான். உணவே மருந்து என்கிற நிலைமாறி மருந்தே உணவு என்கிற நிலைதான் நமக்கு! பிறந்து, வளரும் பொழுது கல்விக்கு அலைச்சல், வளர்ந்தபின் வேலைக்கு அலைச்சல், பிறகு திருமண அலைச்சல் பிறகு குழந்தைகளுடன் போராட்டம் பிறகு முதுமையில் ஒரு போராட்டம் என எல்லா வயதிலும் வெறும் இன்பம் மட்டும் அமைவதில்லை. தனிமனித வாழ்க்கை போராட்டங்களுடன், இயற்கைச் சீற்றங்கள் என எத்தனை எத்தனையோ போராட்டங்கள் அத்துடன் இன்பங்களும் இருக்கின்றன. ஆமாம் எவ்வளவுதான் இன்பம் இருந்தாலும் சீக்கிரமாக அந்த இன்பம் தொலைந்து விடுகிறது ஏனெனில் அவைகள் நிரந்தர இன்பம் அல்ல. அனைத்து வசதிகளுடன் இருப்பவர்களும் கூட ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறார்கள். இந்தப் பிறவியே வேண்டாம் என்று நினைக்கும் பொழுது தான் இறைவனின்  அன்பும், அவனின் அன்பு தரும் பேரானந்தம் புரியும். 


அனைத்து விஷயங்களுக்கும் மூலகாரணம் கர்மா என்பதை உணர்ந்து செய்யும் பொழுது, நாம் திரும்பவும் மாயையில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு உதவிசெய்யும். இறைவனை உணர்வதற்கும் இந்த விழிப்புணர்வு உதவி செய்யும். இந்த விழிப்புணர்வு, நமக்குள் ஏற்பட்டுவிட்டால், கண்டிப்பாக கஷ்டங்கள் குறையும், அதுமட்டுமல்ல எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதில் மனம் பாதிக்கப் படாமல் அதைத் தாங்கும் சக்தி ஏற்படும். எவ்வளவு துன்பம் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு மன அமைதி கிடைக்கும். இதை அவரவர் செய்து பார்க்கும் பொழுது மட்டுமே உணர முடியும். விழிப்புணர்வுடன் பாராயணம் செய்வோம், மன அமைதி பெறுவோம். இறைவனை உணர்வோம்! ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...