Skip to main content

சிவபுராணம் வரிகள் 77 - 80 விளக்கம்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்


போக்கு - இறப்பு, வரவு - பிறப்பு, புணர்வு - உருவம், உடல், புண்ணியன் -பேறுபெற்றவன், 

காக்கும் - அரவணைத்து ஆதரித்தல், பாதுகாத்தல், காவலனே - கடவுள், காண்பரிய - எளிதாக காண முடியாத, பார்க்க முடியாத, பேரொளியே -பரஞ்சுடர், மேலான ஒளியுருவக் கடவுள், ஆற்று - அமைதிப்படுத்தல், தெளிவித்தல், இன்பம் - உன்னத மகிழ்ச்சி, மனநிறைவு கொண்ட ஒரு உணர்ச்சி, வெள்ளம் - உண்மை, மெய்ப்பொருள், பெருக்கு, அத்தா - தந்தை, குரு; மிக்காய் - பெரியோர், மேம்பட்டவர், நின்ற - எப்பொழுதும், தோற்ற -காட்சி அளித்தவன், சுடர் - அக்னி, ஒளி - வடிவம், உணர்வு- ஆன்மா,  நுண்  -  மிகச் சிறிய , சொல்லாத நுண் உணர்வாய் - வார்த்தைகளால் சொல்ல இயலாத, விவரிக்கமுடியாத


இறப்பும், பிறப்பும், உருவமும் இல்லாத பேறு பெற்றவன் இறைவன் என போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே என்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் மிக அழகாக விளக்கியுள்ளார். உண்மையில் இறைவனுக்கு எந்த விதமான உருவம் கிடையாது. நாம் தியானம் செய்யும் போதும் அல்லது மாணிக்கவாசகர் சொன்னதுபோல அன்பினால் நம்முடைய மனதில் இறைவனை உணரும் போதும், இறைவனை நாம் ஒளியாக உணர்வோம். இதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும். இறைவனை மனதில் ஒளியாக உணரும் பொழுது நம் மனதில் ஏற்படும் முதல் மாற்றம், மனதின் வேகம் மட்டுப்படும். இந்த வேகம் மட்டுப்படுத்தப்படும் பொழுது ரமண மகரிஷி சொன்னமௌனமாய் இருஎன்கிற அந்தப் பக்குவம் மனதிற்கு வரும். இந்த பக்குவம் கிடைப்பது என்பது கிடைத்தற்கரிய ஒரு விஷயம். நமக்கு கோடிகோடியாய் பணம் கிடைத்தாலும் கூட, வேறு மற்ற செல்வங்கள் கிடைத்தாலும் கூட கிடைக்காத ஒரு விஷயம்  மனதின் வேகம் மட்டுப் படுத்தப்படுவது, நமக்குள் பக்குவம் வருவது. இந்தப் பக்குவம் வரும் பொழுது தெளிவான சிந்தனை, குழப்பம் அற்ற மனம், நமக்கு கிடைக்கும். இதனை விவரிக்க வார்த்தைகளுக்கு வலிமை கிடையாது. அனுபவித்தவர்கள் எவ்வளவுதான் மற்றவர்களுக்கு இதனைச் சொன்னாலும் புரிய வைக்க இயலாது. இந்த அனுபவத்தைதான் மாணிக்கவாசகர்ஆற்றின்ப வெள்ளமேஎன்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டார்.  ஆற்று என்றால் அமைதிப்படுத்தல், தெளிவித்தல், இன்பம் என்றால் உன்னத மகிழ்ச்சி, மனநிறைவு கொள்ளச் செய்யும் ஒரு உணர்ச்சி, வெள்ளம் என்றால்  மெய்ப்பொருள் என்று  பொருள்படும், மற்றொரு வகையில் பொருள் சொல்ல வேண்டும் என்றால் பெருகிவரும் உணர்வு என்று அர்த்தம். நம் மனதில், நம் ஆன்மாவில், ஒளியாய் ஒளிந்திருக்கும் இறைவனை உணரும் பொழுது, மனம் அமைதிபடுத்தப்பட்டு, உன்னதமான, மனநிறைவான ஒரு உணர்வு பெருக்கெடுத்து ஓடும் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். திருவாசகம் முழுவதுமே மாணிக்கவாசகர் இறைவனை உணர்ந்த அனுபவம். திருவாசகத்தை அவர் தன்மை ஒருமையில் ( First person Singular) எழுதி இருப்பதால், மாணிக்கவாசகர் அனுபவித்த அந்த அனுபவங்களை, நாம் உணரும் பொழுது திருவாசகத்தில் எழுதியுள்ள அத்தனை வரிகளும் நமக்கு பொருந்துவதாக அமைகிறது.  அதனால் உள்ளம் உருகி, நம்மை அறியாமல் கண்ணீர் பெருகுகிறது. இதனால்தான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று அனுபவித்தவர்கள் சொன்னார்கள்.


காண்பரிய பேரொளியே என்றால் எளிதாக காண முடியாத, பார்க்க முடியாத பேரொளி. ஏன் மாணிக்கவாசகர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்றால் இறைவனை ஒளியாக காண்பதற்கு முதலில் நாம் நம்முடைய மனதை அன்பினால் நிரப்பவேண்டும், ஆனால் நம் மனதில் ஏகப்பட்ட எண்ண அலைகள், குழப்பங்கள், கோபங்கள், பலவிதமான உணர்வுகளால் நம்முடைய மனது நிறைந்திருப்பதால் அன்புக்கு அங்கே இடம் இல்லாமல் இருக்கிறது. நம் உண்மையான அன்புடன் எந்த விஷயத்தையும் பிறருக்கு செய்யும் பொழுது, அந்த விஷயத்தை செய்து முடித்தவுடன் அந்த எண்ணம் அறுபட்டு விடும். ஆனால் பெரும்பாலும் நம் மனதிற்குள்,  நாம் பிறருக்கு ஒரு விஷயத்தை செய்யும் பொழுது, அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக எண்ணவில்லை, நாம் செய்த விஷயத்தில் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை, பாராட்டவில்லை என்று பலவிதமான எண்ணங்கள் நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறான எண்ணங்கள் வரும் பொழுது அங்கு அன்பு என்பது இருப்பதில்லை, அங்கு அன்பிற்கு பதிலாக இருப்பது பலவிதமான எதிர்பார்ப்புகள் மட்டுமே. ஒரு விஷயத்தை மற்றவர்களுக்காக அன்பாக செய்யும் பொழுது மனது எதையும் எதிர்பார்க்காது, எனவே அந்த விஷயம் குறித்த தொடர்ச்சியான எண்ண அலைகள் இருக்காது. பெரும்பாலும் நம் எல்லோருடைய மனதிலும் ஏதேனும் ஒரு சிந்தனைகள். அவை பெரும்பாலும் மற்றவர் நம்மை மதிக்கவில்லை, நமக்கு செய்யவில்லை என்கிற இதுபோன்ற சிந்தனைகளே. நம் மனது ஒன்று நடந்து முடிந்த வகைகளை சிந்திக்கிறது அல்லது எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்கிறது. கண்டிப்பாக நம் அனைவருக்கும் கடமைகள் என்று இருக்கிறது நாம் செய்துதான் ஆகவேண்டும் ஆனால், அந்தக் கடமைகளை நாம் செய்வதற்கு இறைவன் கண்டிப்பாக நமக்கு வழி காட்டுவான் என்ற நம்பிக்கையுடன் எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும், செய்வதற்கு முன்பும் இறைவனை நினைத்து செய்யும் பொழுது, அங்கே நமக்கு வழி காட்டப்படுகிறது என்பது தான் உண்மை. அப்படி எல்லாம் இல்லை, அது எல்லாம் நம் கற்பனை என்று சொல்பவர்களுக்கு உதாரணமாக கண்ணில்லாத ஒருவரிடம் கேட்டால் ஒளி இல்லை என்றுதான் சொல்வார் ஏனெனில் அவர் ஒளியை பார்த்ததில்லை இதனால் ஒளி என்பது இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இறைவன் வழி காட்டுவது என்பது அவரவர் உணரும் பொழுது மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நம்முடைய மனதில் எண்ணங்கள் குறையக் குறைய கண்டிப்பாக நம்முடைய  உள்ளுணர்வில், நம் வாழ்வில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் இறைவன் வழி காட்டுவதை உணர்ந்து கொள்ளலாம். அதனால்தான் மாணிக்கவாசகர், “காக்கும் என் காவலனேஎன்று சொன்னார். நம் மனதில் இறைவனை ஒளியாக உணர்ந்து பின்பு எல்லா விதத்திலும் இறைவன் நம்மை பாதுகாப்பதை அரவணைத்து ஆதரிப்பதை நம் உள்ளுணர்வில் நம்மால் உணர முடியும். பல வருடங்களுக்கு முன்பு சுனாமி வந்தபோது, அதில் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் பல வகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்தனவா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த அந்த கடல் வாழ் உயிரினங்கள்,  சுனாமி ஏற்படும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டன என்பதுதான் அறிவியல்பூர்வமான ஒரு உண்மை. அனைத்து மிருகங்களுக்கும் உள்ளுணர்வு என்பது துல்லியமாக வேலை செய்கிறது. மனிதர்களுக்கு மட்டும்தான் அந்த உள்ளுணர்வு உணர்த்துவதை புரிந்துகொள்ள இயலுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நம்முடைய தேவையற்ற கோபங்கள், தாபங்கள், வருத்தங்கள், வேதனைகள் போன்றவை. இதனால்தான் ரமணமகரிஷி மௌனமாய் இரு என்று சொன்னார். மனது அமைதியாக இருக்கும் பொழுது நமக்கு இறைவன் வழிகாட்டுவதை உணர்ந்து நம்மால் நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வழி காண இயலும். அதனால்தான் மாணிக்கவாசகர் இங்கே, “தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்என்று பாடி இருக்கிறார். முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருந்தார் போல், நாம் நம்முடைய கடமைகளை, சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்கள் போல், அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல் நம்முடைய கடமைகளை செய்து விட்டு, மனதில் மௌனமாய் இருக்கக் கற்றுக்கொண்டால் ஒளியாய், உணர்வாய் இருக்கும் இறைவனை உணர முடியும், இறைவனுடைய வழிகாட்டுதலையும் உணரமுடியும். “அத்தா மிக்காய் நின்றஎன்றால், தந்தையாய், குருவாய் நம் அனைவருக்கும் பெரியவனாய் இருக்கும் இறைவன் என்று பொருள். இறைவன் என்கிற நுண்ணுணர்வை உணரும் பொழுது, சுந்தரர் போல் இறைவன் நமக்கு தோழனாக இருக்கலாம் மாணிக்கவாசகருக்கு வந்ததுபோல் குருவாக இருக்கலாம், திருஞானசம்பந்தருக்கு இருந்ததுபோல் அம்மையப்பனாக இருக்கலாம் அல்லது அப்பருக்கு வந்ததுபோல் எஜமானனாக இருந்து நமக்கு வழிகாட்டலாம். நாம் இறைவனை எவ்வாறு பார்க்கிறோம் என்பது ஒவ்வொரு அடியவரின் மனநிலையை, அனுபவங்களை பொறுத்து இருக்கிறது. இதனால்தான் அந்த காலத்தில் நாலு பேர் போன வழியில் போனால் எந்த கஷ்டமும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நாலுபேர், நம்முடைய அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தர். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவனை வெவ்வேறு விதமாக உணர்ந்தார்கள். இறைவனும் அவர்களுக்கு வெவ்வேறு விதமாக அவர்களுக்கு ஏற்ப வழியில் வழிகாட்டினார். நமக்கும் கண்டிப்பாக அவ்வாறு வழிகாட்டுவார் என்கிற நம்பிக்கையுடன் நாம் நம் மனதில் முடிந்தவரை தேவை இல்லாத எண்ணங்களைத் தவிர்த்து, பாராயணங்கள் செய்து, நாமஜபம் செய்து நம் மனதில் ஒளியாய் ஓளிந்திருக்கும் இறைவனை உணர முயற்சிப்போம். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம். 

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...