நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
நீராய் - நீர் + ஆய் , நீர் - நீ என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மரியாதை கூடியதாகவும் கூறுதல், ஆய் - அணு, சூக்குமம், நுண்மை, உருக்கி - சுருக்குதல் குறைதல்,ஆருயிராய் - அக கடவுளாய், ஆன்மா, நின்றானே - எப்பொழுதும் இருப்பவனே, இல் - இறப்பு, இல்லா - இறப்பில்லாத, ஆன் என்பது இலக்கணம் (ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி), அதாவது நடந்தான், சென்றான் என்று குறிப்பிடுவது போல். உள் - அகம்
சிவபுராணத்தை மாணிக்கவாசகர் எழுதும்போது இறைவனை அவர் மனக்கண்ணில் பார்த்து இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக நீராய் உருக்கி என்று ஆரம்பிக்கும் வரிகள். இறைவனை மாணிக்கவாசகர் நீர் என அழைத்து, நீர் அணுவாய் குறுகி என் ஆன்மாவில் எப்பொழுதும் இருப்பவன் என்பதை நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே என்கிற வரியில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். நம் அகத்தின் உள்ளே இருக்கும் இறைவன் இன்பம் துன்பம் இல்லாதவன் மட்டுமல்லன், இறப்பும் இல்லாதவன் என்பதை இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்ற வரியில் மிக அழகாக சொல்கிறார்.
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
அன்பன் - தோழன், யாவை - எல்லாமுமாய், அனைத்துமாய், அல்லை - தாய்,
தோழனுக்கு தோழனாய், அனைத்துமாய் , தாயாய் இறைவன் இருக்கிறார் என்று அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் வரிகளில் மாணிக்கவாசகர் சொல்கிறார். சுந்தரருக்கு தோழனாய் இறைவன் இருந்ததை இங்கு நினைவு கூறலாம். நல்ல தோழனின் மேன்மையை, தாயின் மேன்மையை மிக அழகாக மாணிக்கவாசகர் இந்த வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய அன்பினால் இறைவனை ஒளியாக நம் அகத்தில் உணர்ந்த பிறகு, அந்த ஒளி நம் வாழ்வை நல்லபடியாக வழிநடத்திச் செல்லும். கந்த குரு கவசம் இதை எப்படி சொல்கிறது என்பதை நேற்று கீழ்க்கண்ட வரிகள் மூலம் பார்த்தோம்.
“எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே 47
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ 48
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் 49
நம்முடைய அன்பினால், அகத்தின் உள்ளே ஆன்மாவாய் ஓளிந்திருக்கும் இறைவன் வெளிப்படுவான் என்று “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற வரிகள் மூலம் ஏற்கனவே மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார். இந்த வரியில் வரும் “கசிந்து “என்கிற வார்த்தையை என்னைப் பொறுத்தவரையில் மாணிக்கவாசகர் மிக அற்புதமாக உபயோகத்திருக்கிறார். கசிந்து என்றால் உள்ளிருக்கும் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிக்கும். நம் அன்றாட வாழ்வில் எண்ணை பாட்டில் கசிகிறது, தண்ணீர் பாட்டில் கசிகிறது என்றெல்லாம் சொல்வோம். அதாவது உள்ளிருக்கும் அந்த எண்ணெய் அல்லது தண்ணீர் வெளியே வருவதை, நாம் கசிகிறது என்று சொல்கிறோம். நாம் கவலை, பயம், பொறாமை, வேதனை இன்னும் பல தேவையில்லாத எண்ணங்களை விடுத்து, அதற்கு பதிலாக இறைவனிடம் அன்பு செலுத்தும் பொழுது, இறைவனால் அதற்குமேலும் ஒளிந்திருக்க முடியாது, எனவே கசிந்து நம் மனதில், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவதினால், நமக்கு பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. இறைவன் நம் மனதில் ஒளியால் பிரகாசிக்க ஆரம்பித்த பிறகு, அவனே நமக்கு தாயாய் தோழனாய் எல்லாமுமாய் இருப்பான் என்று தீர்க்கமாக மாணிக்கவாசகர் சொல்கிறார். நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் யார் யார் சொல்வதையோ நாம் நம்புகிறோம், கேட்கிறோம், அதன்படி செய்கிறோம். மாணிக்கவாசகர் திரும்பத்திரும்ப நம்மிடம் இறைவனிடம் அன்பு செலுத்து என்று வலியுறுத்துகிறார் அவ்வாறு இறைவனிடம் அன்பு செலுத்தினால் இறைவன் நம்மை எல்லாமாய் இருந்து காப்பான் என்று ஆணித்தரமாக சொல்லும் பொழுது, அவர் சொல்லும் இந்த எளிய வழியை நாம் முயற்சித்து பார்க்கலாமே! ஒளிந்திருக்கும் அந்த இறைவனை வெளியே வர செய்துவிட்டால், பிறகு நம்மை கவனித்துக் கொள்வது அந்த இறைவனின் பாடு என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். எப்படி இறைவனிடம் அன்பு செலுத்துவது என்பது குறித்து ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம் இருந்தாலும் திரும்பவும் இங்கே பதிவிடுகிறேன். ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் மறக்காமல், மானசீகமாக இறைவனை நினைத்து, இறைவனுக்கு அந்த உணவை கொடுப்பதாக கொடுத்து சாப்பிடுவதாக, அந்த உணவிற்கு நன்றி செல்வதாக, சில நொடிகள் ஆத்மார்த்தமாக நினைத்து சாப்பிடுவது இறைவனிடத்தில் அன்பு கட்டுவதற்கு ஒரு எளிய வழியாகும். நம் குளிக்கும் பொழுது தேவையில்லாத பல நினைவுகளை நினைத்துக்கொண்டு குளிப்பதை விட, நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை நாம் இறைவனுக்கு கோவிலில் அபிஷேகம் செய்வதைப் போல நினைத்து நாம் குளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது எப்படி இறைவனுக்கு அன்பு செய்வதாகும்? என்று பலர் கேட்கலாம். சாப்பிடும்பொழுது பக்கத்தில் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சிறிதேனும் கொடுத்துவிட்டு சாப்பிடுவது ஒரு நல்ல மரபு. மானசீகமாக இறைவனுக்கு கொடுத்துவிட்டு சாப்பிடுவதால் நம்முடன் இறைவனை எப்பொழுதும் இருக்கிறான் என்பதை நமக்கு நாமே ஞாபகப் படுத்திக் கொள்கிறோம். குளிக்கும்போதும், இறைவன் நம்முள் இருப்பதாக நினைத்து அபிஷேகம் போல் குளிப்பது, இறைவன் நம்முள் இருக்கிறான் என்கிற நினைப்பை மீண்டும்மீண்டும் நமக்குள் நாமே வலியுறுத்திக் கொள்கிறோம். இவ்வாறு சாப்பிடும்பொழுது நினைப்பதும் குளிக்கும்போதும் நினைப்பதும் நமக்குள் இறைவன் இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஏனெனில் நாம் எப்பொழுதும் ஒரே மனதுடன் உறுதியுடன் இருப்பதில்லை. அதில் நமக்கு அவ்வப்பொழுது ஒரு அவநம்பிக்கை வந்துவிடுகிறது. இறைவன் நம்மைப் தாயாய் தோழனாய் அனைத்துமாய் பார்ப்பான் என்பதெல்லாம் பொய் என்கிற எண்ணம் நமக்குள் அடிக்கடி தலைதூக்கும். தினமும் நாம் நம்பிக்கையுடன், அன்புடன் நாம் சாப்பிடும் பொழுது மானசீகமாக இறைவனிடம் நம்முடைய சாப்பாட்டை பகிர்ந்து கொள்வது கண்டிப்பாக நம்பிக்கையை பலப்படுத்தும். இன்று வாட்ஸ் அப்பில் ஒரு குழுவில் வந்த கதையை இங்கே பகிர்கிறேன்:
ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர்
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், "இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?" என்று...
அனைவரும் ஒரே குரலில் “ஆம், ஆம், உங்களால் முடியும் ..” என்று கத்தினார்கள்.
"நீங்கள் என்னை நம்புகிறீர்களா", என்று அவர் கேட்டார். அவர்கள் ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
அவர் சொன்னார் "சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"என்று
"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"
திகைப்பான மௌனம் நிலவியது.
ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள்.
நாம் கடவுளிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை கூட இதுபோல்தான் முழுமை அற்றதாக இருக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். ஆனால் முழுமையாக நம்புகிறோமோ என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நாம் முழுமையாக அவரிடத்தில் சரணாகதி அடைகிறோம் என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பக்தர் ஒருவர் வெகு நாட்களாக மிகுந்த பக்தியுடன் சிவனுக்கு பூஜை செய்தார் ஆனால் சிவன் அவருக்கு காட்சி தரவில்லை. அதனால் கோபத்துடன் சிவன் சிலையை எடுத்து மேலே வைத்துவிட்டு, விநாயகர் சிலையை வைத்து வணங்க ஆரம்பித்தார். விநாயகர் சிலைக்கு சாம்பிராணி போடும் பொழுது, அவர் கண்ணில் சிவன் சிலை பட்டது. அவருக்கு மிகவும் கோபம் வந்து இந்த சாம்பிராணி புகை அந்த சிவன் சிலைக்கு போகக்கூடாது என்று ஒரு துணி எடுத்து முழுவதுமாக சிவன் சிலையை போர்த்தி கட்டினார் அந்த நிமிடம் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இந்த பக்தர் மிகவும் ஆச்சரியத்துடன் நான் பக்தியோடு பூஜை செய்தேன் நீங்கள் ஒருமுறை கூட காட்சி அளிக்கவில்லை என்று நான் உங்களை வேண்டாமென்று துணி வைத்து கட்டும்பொழுது எனக்கு காட்சியளிக்கிறீர்கள், இது எப்படி என்று வியப்புடன் கேட்டார் அதற்கு கடவுள், நீ என்னை பூஜை செய்யும்பொழுது வெறும் சிலையாக மட்டுமே பார்த்தாய். ஆனால் இன்று எனக்கு சாம்பிராணிப் புகை வந்து விடக்கூடாது என்று துணியை வைத்து கட்டும்பொழுது என்னை உயிருள்ள ஒரு பொருளாக என்னை நம்பினாய், அதனால் காட்சியளித்தேன் என்று கடவுள் என்று சிவன் சொன்னார். இவைகளெல்லாம் வெறும் கதை கேட்பதற்காக சொல்லப்பட்டது அல்ல. இறைவனிடம் நாம் முழுமையாக, நம்பிக்கையுடன் அன்பு செலுத்தினால் அவர், “ அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்” என்று மாணிக்கவாசகர் சொல்வதுபோல, கண்டிப்பாக நமக்கு தாயாய் தோழனாய் அனைத்துமாய் இருந்து வழிகாட்டுவார் பாதுகாப்பார், நம் பிறவித் தளையை அறுத்து, நாம் மீண்டும் பிறவா வண்ணம் நமக்கு உதவி செய்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இறைவனை பரிபூரணமாக நம்புவோம், இறைவனுக்கு நமக்குத் தெரிந்த வகையில், நமக்குத் தெரிந்த முறையில் அன்பு செலுத்த முயற்சிப்போம். அந்த அன்பு உண்மையானதாக இருக்கட்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நம் மனதில் இறைவன் ஒளியாக வெளிப்பட்டு நம்மை அனைத்துமாய் நின்று வழிகாட்டுவார், பாதுகாப்பார். நமக்கு தாயாய் தோழனாய் அனைத்துமாய் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து வணங்கி போற்றுவோம்! இறைவனை உணர்வோம்! இறைவனிடத்தில் அன்பு செலுத்துவோம்!
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment