வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
வேற்று - ஒப்பின்மை, ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள். விகாரம்- புணர்ச்சியில் வரும் தோன்றல், திரிதல், உருமாற்றம், விடக்கு - ஊன், சதையால் ஆன, உள்கிடப்ப - ஒத்துப்போதல், ஆற்றுதல் - கூட்டுதல்,
ஐயா - தந்தையையும் இறைவனையும் அழைப்பதற்கு இச்சொல் மிகவும் உகந்தது, அரன் - நெருப்பு, ஓ - வியப்புக்குறி, என்று - சூரியன், என்றென்று - பல பல சூரியன், போற்றிப் புகழ்தல் - துதித்தல், இருந்து - உண்மையுள்ள, கபடமற்ற, ஆனது - கெடாது, மீட்டு - மறுபடியும், இன்னொரு உடல் எடுக்கா வண்ணம், கள்ளம் - அறியாமை, மாயை, புலன் - ஐம்புலன், குரம்பை - உடல், கட்டு - பந்தம், பிணைப்பு, வல்லான் - ஆற்றல் பெற்றவன், நள் இருளில் - நடு இரவு ( Midnight), நட்டம் - கூத்தாடுதல், பயின் - கப்பல் சுக்கான், கப்பலைத் திருப்புங் கருவி, ஆடும் - வெற்றி, நாதனே - தீ ஜ்வாலை ஆக இருப்பவனே
இறைவன் நம் மனதில் வெளிப்படும் பொழுது, நமக்கு ஆதாரமான அவனுடன் ஒன்று சேரும் பொழுது, சதையாலான இந்த உடம்பில் உள்ளிருக்கும் இறைவனோடு ஒன்று சேரும் பொழுது ஒரு அற்புதமான உருமாற்றம் ஏற்படும் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
ஆற்றேன் என்றால் கூடுதல், பொருந்துதல் என்று பொருள். அப்படி இறைவனுடன் பொருந்தும் பொழுது அவர் காணும் தோற்றத்தைதான், “ அரனே ஓ என்று என்று” என்று சொல்லியிருக்கிறார். அரன் என்றால் தீ, “என்று” என்றால் சூரியன் , “என்றென்று” என்றால் பல பல சூரியன்கள். நம்முடைய ஆன்மா இறைவனுடன் பொருந்தும் பொழுது ஏற்படக் கூடிய அந்த அனுபவத்தை, ஒளி வெள்ளத்தை மிக அழகாக, ஐயா நீ, “தீ”, இல்லை இல்லை, நீ, “தீ” இல்லை , நீ சூரியன், அதுவும் பலபல சூரியன் போல ஒளி வீசுகிறாய். என்று மாணிக்கவாசகர் மிக அழகாக அவருடைய அனுபவத்தை வார்த்தைகளின் வழியே நமக்கு சொல்லி இருக்கிறார். ஓ என்கிற வார்த்தையை மிக வியப்புடன் என்கிற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் ஒளி வெள்ளத்தை தலைக்கு மேல் தியானம் செய்த பல பேர் இந்த அனுபவத்தை தனக்குள் உணர முடியும். இந்த ஒளிவெள்ளம் சத்தியம், இந்த ஒளிவெள்ளம் மிக அற்புதமான அனுபவம், இந்த ஒளி வெள்ளம் கொடுக்கும் மனநிறைவு வேறு எந்தப் பொருளும் நமக்கு இந்த உலகில் கொடுக்க இயலாது. மாணிக்கவாசகர் இறைவனை தீ இல்லை இல்லை அவன் பலபல சூரியன் போன்ற ஒளி வீசுகிறான் என்று அவர் துதி செய்ததெல்லாம் உண்மை என்கிற பொருள்படும்படி “போற்றிப் புகழ்ந்திருந்து” என்கிற சொற்களை உபயோகப்படுத்தி இருக்கிறார். “இருந்து” என்றால் கள்ளம் கபடமற்ற, உண்மையான என்று பொருள்படும். “பொய்கெட்டு மெய் ஆனார்” என்றால், பொய்யானவை மாயையான வை எல்லாம் நீங்கி உள்ளத்தில் இருக்கும் ஆன்மாவை கெடாது என்கிற பொருளில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார். “மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே” என்றால் ஆன்மாவை திரும்பவும் இன்னொரு பிறவி எடுக்க விடாமல் மீட்டு என்று பொருள்படும். “கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே” என்றால், அறியாமையுடன் கூடிய ஐம்புலன்களை உடைய உடலின் தளையை அழிக்கக் கூடிய வலிமை உடையவனே என்றும் மாணிக்கவாசகர் இறைவனை குறிப்பிடுகிறார்.மனிதர்களின் பிறவித் தளையை அழித்து விட்டு அந்த சந்தோஷத்துடன் ஆடும் இறைவனை நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே, தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்றெல்லாம் புகழ்கிறார் மாணிக்கவாசகர். “பயின்று ஆடும் நாதனே” என்றால், கப்பலை திசை திருப்பும் கருவி போன்று நம்மை திசைதிருப்பி பிறவிக் கடலில் மூழ்காமல் வெற்றிபெற உதவும் தீயாக இருக்கும் இறைவன் என்று பொருள். பயின்று என்றால் கப்பலைத் திருப்புங் கருவி என்று பொருள். ஆடு என்றால் வெற்றி பெறுதல் என்று பொருள். நம்மை பிறவிச் சூழலில் இருந்து விடுவித்த சந்தோஷத்துடன் சிவனவன் நடுஇரவில் கழைக்கூத்தாடுகிறான் என்று சிவன் நடுஇரவில் கூத்தாடுவதற்கான காரணத்தை மிக அழகாக, அற்புதமாக “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்கிற வரியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். சிவன், இறந்தவர்களின் சாம்பலை பூசிக்கொள்பவன் என்று இழிவாக சொல்பவர்கள் உண்டு. ஆனால் சிவன் எல்லோருடைய சாம்பலையும் பூசிக்கொள்வதில்லை. எந்த மனிதனின் பிறவித் தளை அறுபடுகிறதோ அந்த மனிதனின் சாம்பலை மகிழ்வுடன் பூசிக்கொண்டு நடனமாடுகிறார். காணாமல் போன தன் குழந்தை திரும்ப கிடைத்துவிட்டால் ஒரு தாய் எவ்வளவு சந்தோஷப் படுவாளோ, அது போல் இறைவனும், பிறவித்தளை அழிக்கப்பட்டு திரும்பவும் தன்னை வந்து ஒரு ஆன்மா அடையும் பொழுது மிக மிக சந்தோஷம் அடைந்து அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக அந்த சாம்பலைப் பூசிக்கொண்டு நடுஇரவில் நடனமாடுகிறார். நம் பிறவி தளை அழியாதா என்ற ஏக்கத்துடன் இறைவன் காத்திருக்கிறார். பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே என்று மாணிக்கவாசகர் சொல்லியபடி நமக்காக, நாம் பிறவிக் கடலை கடப்பதற்காக தன் கருணை என்னும் ஆற்றில் நம்மை ஏற்றிச் செல்வதற்காக தெப்பமாய் நின்று கொண்டிருக்கிறார். நாம்தான் அவனை மறந்துவிட்டு மாயையில் சிக்கி, நான், எனது என்ற அகங்காரமும், கர்வமும் தற்பெருமையும் கொண்டு, பல சமயங்களில் மனிதமும் மறந்து, நம்மைப் பற்றியும், நம் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி ஒரு தொற்றுநோய் வைரஸ் இவர் நாட்டை ஆள்பவர் இவர் ஏழை என்ற பாகுபாடு பார்ப்பது இல்லையோ அதுபோல இறைவன் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை. எவ்வளவு அதிகாரம், பணபலம், அந்தஸ்து இருந்தாலும் நாம் நம் உயிர் நம் உடலை விட்டு பிரிந்து செல்லும் பொழுது அது ஆன்மாவாக உருப்பெறுகிறது. ஆன்மா கர்மவினைக்கு ஏற்ப மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் பொழுது அந்த நாட்டின் பணத்தை வைத்திருந்தால்தான் எதையும் வாங்க முடியும் சாப்பிட முடியும் செலவு செய்ய முடியும். அதுபோல நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரியும் பொழுது, அவ்வுலகத்தில் நாம் பிறருக்குச் செய்த தான தர்மங்கள் போன்றவை அங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நம் ஆன்மாவிற்கு வேண்டிய விஷயங்கள் செய்யப்படுகின்றன. வேறு ஒரு நாட்டில், அந்த நாட்டு பணம் இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டப்படுவோமோ, அதுபோல் நம் உயிர் பிரிந்து ஆன்மாவாக உருமாறும் பொழுது, அந்த உலகத்தில் நாம் தேவையான புண்ணியங்களை கையிருப்பு வைத்து இல்லாவிட்டால் மிகமிக நம்முடைய ஆன்மா கஷ்டப்படும். இதுதான் கர்ம விதி! இது புரியாமல் நாம், நம் வங்கிக் கணக்கில் பணம் அதிகமாக சேர்ப்பதையும், சொத்து சேர்ப்பதிலும் மட்டுமே கவனத்தை செலுத்துகிறோம். ஒரு மனிதன் இறக்கும் பொழுது அவருடைய பாவ புண்ணியங்கள் தவிர வேறு எதையும் அவர் உடன் எடுத்துச் செல்ல இயலாது. நம்முடைய அனைத்து வினைகளும் அழிக்கப்படும் பொழுது, அதாவது நல்வினை தீவினை இரண்டும் அழிக்கப்படும் பொழுது, இறைவன் நம்மை பிறவிப் பெருங்கடலை கடக்க வைத்து, தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் அல்லது முக்கிய அளிக்கிறான் என்று சொல்லலாம். இன்றைய வரிகளுக்கு விளக்கம் யூடியூப் பதிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. யூடியூப் பதிவு கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் சென்று விட்டதால், எல்லோருக்கும் கேட்க நேரம் இருக்குமா என்று தோன்றியதால் எழுத்து பதிவாகவும் முடிந்தவரை பதிவு செய்து இருக்கிறேன். யூடியூப் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புபவர்கள் யூடியூப் கருத்துக்கள் பகுதியில் பதிவு செய்யலாம்.
Comments
Post a Comment