மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
மாற்றமாம் - மாறிக்கொண்டே இருக்கும், வையகம் - மண்ணுலகம், வெவ்வேறே வந்து - வேறு வேறு பிறவியெடுத்து, அறிவு - ஆன்மா, தேற்றனே -உண்மை அறிவுள்ளவன், தேற்றம் - மெய்ப்பொருள், தெளிவே - மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக் கூடிய நிலை, சிந்தனை - உள்ளம், உள் - இறைவன், ஊற்று - ஆதாரம், மூலகாரணம், உண் - ஒத்திரு,சேர்தல், ஆர் - பரிபூரணமான, அமுதம் - இறைவன் , உடை- வெளிப்படுதல், வேற்று - ஒப்பின்மை, ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள். விகாரம்- புணர்ச்சியில் வரும் தோன்றல், திரிதல், உருமாற்றம், விடக்கு - ஊன், சதையால் ஆன, உள்கிடப்ப - ஒத்துப்போதல்
“அமுதே உடையானே” என்றால் இறைவன் நம் மனதில் வெளிப்படும் பொழுது என்று பொருள். “ஊற்றான உண்ணார்” என்றால் நமக்கு ஆதாரமான அவனுடன் ஒன்று சேரும் பொழுது என்று பொருள். “வேற்று விகார” என்றால் வேறு வேறு நிலைகளில் உள்ள இரண்டு விஷயங்கள் ஒன்று சேரும்போது புணர்ச்சி ஏற்படும், அதாவது உருமாற்றம் ஏற்படும். தமிழ் இலக்கணத்தில் விகாரப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக பனை + காய், இந்த இரண்டு வார்த்தைகளை ஒன்று சேர்த்தால் பனங்காய். இந்தப் புணர்ச்சி விகாரப் புணர்ச்சி. இத்தகைய புணர்ச்சி இறைவனுடன் நாம் பொருந்தும் போது ஏற்படுகிறது என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். நமக்குள் நாம் இறைவனை உணர்வது முதல்படி, பிறகு இறைவனுடன் பொருந்துதல் என்பது அடுத்த படி. அவ்வாறு சேரும் நிலையை மாணிக்கவாசகர் “வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப” என்கிற வரிகளில் மிக அழகாக சொல்லியுள்ளார். “விடக்கு உடம்பின்” என்றால் ஊன், சதையால் ஆன என்று பொருள். ‘உள்கிடப்ப” என்றால் நம் உள்ளத்தில் இருக்கும் இறைவனோடு ஒத்துப்போதல் என்ற பொருள். இப்பொழுது கீழே முதல் நான்கு வரிகளுக்கும் சேர்ந்தாற்போல் பொருள் பார்ப்போம்.
மாறிக்கொண்டே இருக்கும் இந்த மண்ணுலகத்தில் வேறு வேறு பிறப்பு எடுக்கிறது நம் ஆன்மா என்பதை மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் என்கிற வரிகளில் குறிப்பிடுகிறார். நம் உள்ளத்தில் உள்ள இறைவனை, மெய்ப்பொருளை, மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக் கூடிய நிலை வரும்வரையில், நம்முடைய ஆன்மா வேறு வேறு பிறவி எடுக்க வேண்டியிருக்கும் என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார். நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் இறைவனை நாம் காணும் நிலை வரும். அப்படி இறைவன் நம் மனதில் வெளிப்படும் பொழுது, நமக்கு ஆதாரமான அவனுடன் ஒன்று சேரும் பொழுது, சதையாலான இந்த உடம்பில் உள்ளிருக்கும் இறைவனோடு ஒன்று சேரும் பொழுது ஒரு அற்புதமான உருமாற்றம் ஏற்படும் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்க்ரீன்ஷாட்டில், வார்த்தைகள் சேரும் பொழுது ஏற்படும் மாற்றம் போல, நாம் நம் மனதில் ஒளியாய் ஒளிந்திருக்கும் இறைவனை கண்டு பிடித்து அவனுடன் பொருந்தும் பொழுது, நமக்குள் மாற்றம் ஏற்படும் என்று மாணிக்கவாசகர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். இது சத்தியமான ஒரு விஷயம். மாணிக்கவாசகர் எழுதியிருக்கும் “வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப” என்கிற வரியின் அனுபவத்தை நாம் உணரும் பொழுதுதான், எப்படி மாணிக்கவாசகர் இந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்பது நமக்குப் புரியும். மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் மிக நுண்மையான விஷயங்கள், ஆனால் அவற்றை உணரும் பொழுது, அனுபவிக்கும் பொழுது, “ஆற்றின்ப வெள்ளமே” என்று ஏன் சொன்னார் என்பது புரியும். சிவபுராணம் மற்றும் திருவாசகம் முழுவதும் அனுபவித்து உணர தேவை, அன்பு ஒன்றுதான். நாம் பெரும்பாலும் இறைவனிடம் இது கொடு, அது கொடு என்று வேண்டியே பழகிவிட்டோம். இறைவனை காந்தம் என்றும், நம்மைப்போன்ற மனிதர்களை இரும்பு என்றும் சொல்வார்கள். எனவே இறைவன் விருப்பப்பட்டால் நம்மை வந்து ஈர்ப்பான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை என்னவெனில், அன்பு என்னும் அலைகள் நம் மனதில் இறைவனை நோக்கிப் பொங்க, அந்த அன்பின் அதிர்வுகளால், நாம் மின்காந்தம் (Electro Magnet) போல் ஆகிறோம் என்பதுதான் உண்மை. நம்முடைய அன்பு, எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமானதோ, உண்மையானதோ, அந்த அளவிற்கு நாம் இறைவனை நம்மை நோக்கி இழுக்கிறோம். அந்த அன்பினால் இறைவன், நம்மைக் “காக்கும் காவலனாய்” , “அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்” என்கிற வரிகளுக்கு ஏற்ப இறைவன், நமக்கு தாயாய் , தோழனாய், காவலனாய் அனைத்துமாய் ஆகிறான், பாதுகாக்கிறான். இன்றைய சூழ்நிலையில், நிறைய பேர் அன்பு என்ன தரும்? காசு தருமா? வீடு தருமா? சொத்து தருமா? என்று கேட்கலாம். நாம் இறைவனிடத்தில் காட்டும் அன்பு இறைவனையே தரும்.
அடியவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில், ஒரு அன்பான, பணிவான தாழ்மையான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நிறைய அடியவர்கள் சிவனை கும்பிட்டால், கஷ்டம் வரும், துன்பம் வரும் என்று ஒரு தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, யாரேனும் நேர்மையாக இருந்தால், நிறைய சாமி கும்பிட்டு, பக்தியாக இருந்து, அவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் மேல் துன்பம் வந்தால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சாமி கும்பிட்டு என்ன பலன்? நேர்மையாக இருந்து என்ன பலன் என்றெல்லாம் கேட்பவர்கள் உண்டு. தயவு செய்து இறைவனை வாழ்க்கை, வசதிகளோடு மட்டும் ஒப்பிடாதீர்கள். ஒருவரின் இறைநம்பிக்கையை, அவர்கள் படும் துன்பத்தோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள், பேசாதீர்கள்! வாழ்க்கை என்பது நமது பல ஜென்ம கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. இந்த ஜென்மத்தில் ஒருவர் உண்மையான அன்புடன் கடவுளை வணங்கும் போது அவர்களுக்கு பல்வேறுவகையான துன்பங்கள் ஏற்பட்டால், அதற்கு காரணம் அவர்களுடைய கர்மவினைகள் முழுமையாக தீர்க்கப்பட்டு, மறுபிறவி எடுக்கா வண்ணம் முக்தி அடைய நேரிடலாம். அடுத்த பிறவி யாருக்கு உண்டு, யாருக்கு இல்லை என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். இந்தப் பிறவியில் நன்கு வாழ்பவர்கள், அடுத்தடுத்த பிறவிகள் எடுக்க நேரிட்டு பலவகையான துன்பங்கள் அனுபவிக்க நேரிடலாம் . இதனால்தான் ஏழுதலைமுறை வாழ்ந்தவர்களும் இல்லை ஏழுதலைமுறை வாழ்ந்து கெட்டவர்களும் இல்லை என்று சொல்வார்கள். அதனால்தான் அனைத்து அருளாளர்களும் மறுபிறவி வேண்டாம் மறுபிறவி வேண்டாம் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். இறைவனின் திருவிளையாடல்களையும், கர்ம வினைகளின் விதிகளையும் புரிந்து கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக நமக்கு இல்லை. யாருக்கேனும் கஷ்டம் வந்தால் நம்மால் உதவ முடியும் என்றால் உதவுவோம். இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம் . கண்டிப்பாக மற்றவர் மனம் புண்படும்படி, சிவனை கும்பிடுவதால் தான் ஏற்பட்டது, ரொம்ப சாமி கும்பிட்டதால்தான் ஏற்பட்டது என்று பேசுவது அவர்கள் மனதை புண்படுத்துவது மட்டுமல்ல நாம் தேவையற்ற கர்மவினைகளை, நம்முடைய கணக்கில் ஏற்றுக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. அதுபோல் மகான்கள், சித்தர்கள் தங்களுடைய கடைசிநேர வாழ்வில், உடம்பு சரியில்லாமல் சென்றால் அல்லது அவர்கள் உடம்பு சரியில்லாமல் துன்பப்பட்டால், அவர் மகானாக இருந்தால் ஏன் துன்பப்படுகிறார் என்று கேட்கிறோம்? மகான்கள் தங்கள் பிறவி எடுக்கும் பொழுது தங்களுடைய நடைமுறை வாழ்வில் பலருடைய துன்பங்களை தீர்க்க உதவுகிறார்கள். அவ்வாறு உதவும்போது, தன்னை முழுவதுமாய் நம்பிய ஒரு சிலருடைய கர்மவினைகளை தாங்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதுமட்டுமன்றி மகான்கள் மனிதர்களாக பிறக்கும்பொழுது, மனிதர்களுக்கு ஏற்படும் இறப்பு துன்பங்கள் அனைவருக்கும் பொது என்று உணர்த்துவதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இதுபோல் சில, பல காரணங்கள் உண்டு. எனவே எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் மனம் நோகும்படி பேசுவதை நாம் தவிர்த்தால் நமக்கு கர்ம வினைகள் சேர்வது குறையும். எப்படி ஒரு வைரஸ் ஏழை, பணக்காரன், தலைவன், தொண்டன் என்று பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிறது, கர்ம வினைகளும் அதுபோல்தான் அதற்கு பாகுபாடு என்பது கிடையாது. சினிமாவில் நடிப்பவர்கள் கதாநாயகர்களாக, நல்லவர்களாக, கெட்டவர்களாக, ஏழையாக, பணக்காரர்களாக அந்தந்த சினிமா படத்திற்கு ஏற்றாற்போல் வருவதுபோல், நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப நாம் அடுத்த ஜென்மத்தில் சோமாலியாவில் கூட பிறக்கலாம் அல்லது ஒரு புழு, பூச்சியாக கூட பிறக்க வாய்ப்பிருக்கிறது. யாருக்கு எந்த நிலை என்று அந்த இறைவன் நம்முடைய பாவ புண்ணிய கணக்கை பார்க்கும் பொழுது மட்டுமே தெரியும். எனவே நாம் ஒவ்வொருவரும் கர்மா குறித்த விழிப்புணர்வுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் செய்வோம்! பேசுவோம்! கர்ம வினைகளிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது, இது சத்தியம்! ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்.
Comments
Post a Comment